உள்ளம் கவரும்
ஓணம் பண்டிகை - 21 - 08 - 2021
இந்திய மக்களின் பண்பாட்டுச் சுரங்கமே பண்டிகைகள் . தொன்மைப் பின்புலத்தில் சிந்திக்க வேண்டிய வரலாறுகளாக நமது செயல்கள் அமைந்திருக்கும் என்பதை திருவிழாக்கள் வழியாக நினைவுக்கொள்ள முடிகிறது. இது இயற்கையைப் போற்றும் விதமாகவே கொண்டாடப் படுகின்றது . கேரளத்தின் அறுவடைத் திருநாளே ஓணம் பண்டிகை என மகிழ்ந்து கொண்டாடப்படுகிறது.
இது ஆவணி மாதம் திருவோண நட்சத்திர தினத்தில் கொண்டாடப்படும் ஓர் ஒப்பற்ற திருவிழாவாகும் .சங்ககால சரித்திரத்தில் இந்நாள் " விஷ்ணு " பிறந்த தினமாகவும்,வாமனர் பிறந்த தினமாகவும் உள்ளதாக குறிப்புகள் காணப்படுகின்றன.
பரந்து விரிந்து காணப்பட்ட பைந்தமிழர் நாட்டின் பாண்டியர்கள் கோலோச்சிய, பாண்டியப் பகுதியான கேரளத்தில் இவ்விழா கொண்டாட ப்படுகிறது. இவ்வாறு பாண்டிய மக்கள் பத்து நாட்கள் கொண்டாடிய பண்பாட்டு விழா பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்கள் வழியாக அறியப்படுகின்றன.
மதுரைக் காஞ்சி
" கணம் கொள் அவுணர் கடந்த பொலம்தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த ,,
- மாங்குடி மருதனார்.
நாலாயிர திவ்விய பிரபந்தம்
**************************************
பெரியாழ்வார் . பரம்பரையாகத் திருமாலுக்கு தொண்டு செய்வதையும் திருவோண நன்னாளில் நரசிம்ம அவதாரமெடுத்து இரணியரை அழித்தவனை நம் துன்பங்கள் பழகப்பல்லாண்டு வாழ்த்துவமே!
எனவும் இது போன்றே தேவாரத்திலும் இன்ன பிறவற்றிலும் இச்செய்திகள் விரவிக் காணப்படுகின்றன.
பத்து நாட்கள் கொண்டாடும் மாபெரும் விழா.
ஓணம் ஆயிரம் ஆண்டுகாலம் கேரளாவில் கொண்டாடப் பட்டு வரும் முக்கிய பண்டிகை என்பதை கி பி 861 - என்ற தேதியுடன் கிடைத்த தாமிரத்தகட்டில் குறிப்புகள் காணப்படுகின்றன.
மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் திருவிழா கொண்டாட ப் படுகிறது. பசுமை விரியும் பச்சைச் சொர்க்கத்தின் பருவகால வசந்தம் துளிர்க்கும் மழைத்துளியில் , சிலிர்த்து நிறையும் ஈரம் செறிந்த கேரள மண்ணில் முதல் முக்கிய பண்பாட்டுப் பண்டிகையாக திருவோணம் கொண்டாடப்பட்டு வருகிறது.இது அறுவடைத் திருவிழாவாகவும் போற்றப் படுகின்றது.
பண்டிகைக் கொண்டாடும் விதம்.
ஓணம் கொண்டாடப்படும் பத்து நாட்களிலும் மக்கள் அதிகாலை துயில் நீங்கி , குளித்து முடித்து , தூய வெண்ணிற ஆடை அணிந்து வழிபாட்டில் ஈடுபடுவர்.பெண்கள் வீட்டின் முன் பத்து நாட்களும் தொடர்ந்து பூக்கோலம் இட்டு ஆடிப்பாடி மகிழ்ச்சியைப் பகர்வர்.
பத்து நாட்களின் பெயர்கள்
திருவிழாக் கொண்டாடப்படும் பத்து நாட்களுக்கும் தனித்தனியாக பெயர் சூட்டி மகிழ்ந்து கொண்டாடப் படுகிறது.
முதல் நாள் - அத்தம்
2. ம் நாள் - சித்திரா
3ம் நாள் - சுவாதி
மூன்றாம் நாள் அன்று மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பரிசளித்து மகிழ்வர்.
4 - ம் நாள் விசாகம்
************************
நான்காம் நாள் ஒன்பது சுவைகளில் உணவுகள் செய்து மகிழ்வர் .இது ஓண " சாத்யா" என அழைக்கப்படுகின்றது.
5 - ம் நாள் அனுஷம்
************************
பண்டிகையின் ஐந்தாம் நாள் அன்று கேரளத்தின் பாரம்பரிய விளையாட்டான படகுப்போட்டி நடைபெறும். போட்டியில் பங்கு கொள்வோர் வஞ்சிப்பாட்டு" என்னும் பாடலைப் பாடிக்கொண்டே படகைக் செலுத்துவது இப்போட்டியின் சிறப்பாகும்.
6 - ம் நாள் திருக்கேட்டை,
ஏழாம் நாள் மூலம், எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம் எனவும் பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டம் ஓணத்திருவிழாவாக நிறைவடைகிறது.
பூக்களின் திருவிழா
************************
மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக வரையப்படும் பூக்கோலம் ஓணம் திருவிழாவின் சிறப்பம்சம் ஆகும். இதற்கு " அத்தப்பூ" கோலம் என்று பெயர். இது ஒவ்வொரு வீட்டின் வாசலையும் அலங்கரிக்கும். குடும்ப ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர் . கோலத்தில் அத்தப்பூவையே முதலில் வைப்பர்.அதன் பின் வெவ்வேறு பூக்களுடன் கோலம் அழகு படுத்தப்படுகிறது.
இப்பூக்கோலத்தில் முதல் நாள் ஒரு வகை பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு வகையான பூக்கள் என தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகைப் பூக்களால் அழகுபடுத்தப் படுகிறது . பத்தாம் நாள் கோலத்தின் அளவு விரிந்து பெரிதாக்கப் படும்.கோலத்தில் தும்பை,அரிப்பூ, காசி, சங்குப்பூ போன்ற வற்றிற்கு முதலிடம் தருவர்.
ஓணம் வரலாறு
*******************
மன்னனுக்காக எடுக்கப்பட்ட திருவிழா.
மகாபலி என்ற அசுர மன்னன் கேரளாவை சிறப்புடன் ஆண்டு ,தான தர்மத்தில் சிறந்தவனாக விளங்கினான். இம்மன்னன் ஒருசமயம் வேள்வி செய்யும் போது திருமால் வாமனனாக ( குள்ள வடிவம்) உருவெடுத்து வந்து மூன்றடி மண்கேட்டார். மகாபலியும் அவ்வாறே கொடுத்தான். ஒருஅடியில் இந்த பூமியையும், மறுஅடியில் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடியாகத் தனது தலையையே கொடுத்தான் மகாபலி மகாராஜா.
மகாபலிக்கு முக்தி அளிக்கவே அவன் தலையில் கால் வைத்து பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.
மகாபலியின் வேண்டுதல்
பாதாள உலகிற்கு சென்ற மகாபலி தன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவன் . ஆதலால், ஆண்டுக்கு ஒரு முறை நாட்டு மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான். அதன்படி ஒவ்வொரு திருவோணத் திருநாளன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருகிறார் என கருதப்படுகின்றது.இதை மக்கள் தங்கள் வீடுகளுக்கும் வந்து செல்வதாக நம்புகின்றனர். இந்த நாளை நினைவு கூர்ந்து மகாபலியை வரவேற்கும் விதமாக புத்தாடை அணிந்து , பூக்கோலத்துடன் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்.
இத்தகைய வரலாறு கொண்ட திருவோண திருவிழாவைக் கொண்டாடும் கேரளமக்களுடன் இணைந்து கொண்டாடி அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி மகிழ்வோம்.!
வாழ்த்தி மகிழும் ,
பைந்தமிழ் குழு / Greentamil.in
************* ************* ***************
0 Comments