ஆனந்தம் தரும் ஆடிப்பெருக்கு
ஆடி பதினெட்டாம் பெருக்கு
" வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
( குறள் - 11 )
மழை பருவம் தவறாது பெய்ய உலகத்துயிர்கள் வாழ்ந்து வருவதால் அம்மழை அமிழ்தம் என்று எண்ணத்தக்கதாகும் என்ற வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.
உலக இயக்க ஆதாரம் , உயிர்வாழும் ஆதாரம் இரண்டுமே நீரால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த நீரில் இருந்தே உயிரினங்கள் தோன்றி பரிணாம வளர்ச்சி கண்டு, இன்று பல்லுயிர் வாழும் உயிர்க் கோளமாக தகுதி பெற்றது பூமி. எனவே அந்த நீரைத் தெய்வமாக வழிபடும் பாரம்பரியத்தை உடையவர்களாக நாம் விளங்குகிறோம். உயிர்கள் அனைத்திற்கும் நீர் உணவாகவும், உயிராகவும் விளங்குகிறது. அத்தகு பெருமை மிகு தண்ணீரை தெய்வமாகக் கொண்டாடும் ஒரு விழா தான் " ஆடி பதினெட்டாம் பெருக்கு." என வழிபடப்படும் விழாவாகும்.
ஆடிப் பெருக்கு
******************
பருவகால மழையால் நிறைந்த தமிழக நதிகள் ஆடி பதினெட்டாம் நாள் அன்று பெருக்கெடுத்து ஓடுவது ஆடிப்பதினெட்டாம்.
தென்மேற்குப் பருவ மழையால் ஆறுகளின் நீர்பிடி இடங்களில் பெய்யும் மழையால் மற்ற ஆறுகளில் புது வெள்ளமாக பொங்கி வருகின்றன. இந்நீரின் வரவால் பெருமகிழ்ச்சி கொண்ட உழவர்கள் பட்டம் பார்த்து விதை விதைக்க ஆயத்தம் ஆவர்.இதுவே " ஆடிப் பட்டம் தேடி விதை " என்னும் உழவு மொழி உண்டானது. இது உழவர்களுக்கான உழுகின்ற பருவத்தின் தொடக்கமேயாகும்.இயற்கையைப் போற்றும் விதமாக இவ்விழா கொண்டாடப் படுகின்றது. இது காவிரி, வைகை, தாமிரபரணி, பவானி, நொய்யல் போன்ற தமிழக ஆற்றங் கரைகளில் விமரிசையாக கொண்டாடப் படுகின்றது .
விழாவின் நோக்கம்
************************
இயற்கை வழங்கிய வரம் மழை . மழை உயிர் காக்கும் மாமருந்து , அந்த உயிர் காக்கும் நீருக்கு மரியாதை செய்யும் விதமாக ஆடிப்பெருக்கு கொண்டாடப் படுகின்றது. இயற்கையின் கருணைக்கு நன்றி செலுத்துவது சாலச் சிறந்தது.
எதையும் காரணத்தோடு செய்யும் தமிழன் , தாவரத்தின் தரம் அறிந்தும், விளைச்சலுக்குச் சாதகமான சூழல் அறிந்தும் விவசாயம் செய்கிறான். இதனால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
காவிரி
*********
ஆடிப்பெருக்குக் கொண்டாடும் ஆறுகளில் காவிரியே சிறப்புப் பெறுகிறது. காவிரிக் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
தமிழகத்தில் நுழையும் காவிரி பல வெள்ளிச் சங்கிலியாக பாறைகளில் பட்டுத் தெறிக்கும் முத்துச் சிதறலாய் ஒலிக்கும் இடம் " உகுநீர்க்கல்" என்ற " ஒகேனக்கல் " இங்கிருந்து தன் இரு கரையிலும் " கா" விரித்து வளைந்து,வளைந்து நளினமாக பூம்புகார் நோக்கி நடக்கும் கரைதோறும் சீராட்டப்படுகிறாள்.
விழாக் கொண்டாட்டம்
ஆற்றங்கரையில் கூடிய மக்கள் கண்டு களித்தும், கோயில்களில் வழிபாடு செய்தும் மகிழ்வர். பெண்கள் ஆற்றங்கரையில் இடம்பிடித்து, சாணத்தால் மெழுகி கோலமிட்டு, வாழை இலை பரப்பி அகல் விளக்கேற்றி படையலிட்டு செழிப்பான விளைச்சலைத் தரும் இயற்கையை நன்றி கூர்ந்து போற்றும் விதமாக அகல் விளக்கேற்றி வாழை மட்டையில் வைத்து ஆற்றில் விட்டு வழிபடுவர்.
பின் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு வந்த பலவகையான கலவை சாதங்களை ( தேங்காய், தக்காளி, எலுமிச்சை, தயிர்சாதங்கள், சர்க்கரைப் பொங்கல்) தமது குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து உண்டு மகிழ்வர்.
விழாவின் நோக்கம்
************************
பொன்னி நதிக்கு எடுக்கும் இந்த வழிபாடு , நாம் வேண்டிய அனைத்தையும் வழங்கும் என நம்பப் படுகிறது. குழந்தைப் பேறு, திருமணப்பேறு மற்றும் எல்லா வளங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
இந்த வழிபாட்டு வழியில் பல நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன. கணவரின் நலம் காக்கவும்,தாலிப் பாக்கியம் நிலைக்கவும் காவிரித் தாயை வணங்கி வேண்டி நம்பிக்கைக் கொள்வர்.
திருமணம் முடிக்காத கன்னிப் பெண்கள் திருமண வரம் வேண்டியும்,புதுமணப் பெண்கள் தாலி பிரித்து, புதுத்தாலி முடித்தும் வேண்டுதல் செய்வர். மேலும் திருமண நாளில் பயன்படுத்திய (அணிந்த) மலர் மாலைகளை பாதுகாத்து வைத்திருந்து ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவர்.
பச்சையம்மன் வழிபாடு
தாவர வளர்ச்சிக்கு நீரும்,சூரிய சக்தியும் தேவையல்லவா ? இந்தச் சாதகமான சூழலின் பயனறிந்து நீரும் நிலமும் இணைந்த ஆற்றுப் படுகையில் நவதானியம் பரப்பி மண்ணில் தூவி வழிபடுவர் .பின் படையலிட்டு " பசுமையைப்" போற்றும் வகையில் " பச்சை அம்மனுக்கு " விழா எடுக்கப்படுகிறது.
தென்னிந்திய திரிவேணி
( பவானி கூடுதுறை)
அதிகாலையில் பவானி கூடுதுறையில் நீராடிய பக்தர்கள் இறைவனை வழிபடுவர் , பின்னர் இலையில் சூடமேற்றி , ஆற்று நீரில்மிதக்க விடுவர், தாம் கொண்டுவந்த முளைப்பாரிகளையும் ஆற்றில் விடுத்து , கரையில் பூசைகள் செய்து இறைவழிபாடு செய்வர்.தென்னிந்தியாவின் திரிவேணிச் சங்கமம் என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் வழிபடுபவர்க்கு அற்புதங்கள் பல தரும் .
காவிரிக்குச் சீர் கொடுத்த பெருமாள்.
காவிரி அன்னை ஆடியில் கருவுற்றிருந்ததாக வரலாறு . அதனால் அண்ணனான ஸ்ரீரங்கநாதர், தனது தங்கையான காவிரியைக் காண ஸ்ரீரங்கத்தில் சீர்வரிசையுடன் வந்தார். சேலை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு,பழங்கள் போன்றவை எடுத்துக் கொண்டு யானை மீது வந்து சீர் காவிரி அன்னைக்கு சீர் கொடுப்பார் .
இன்றைய சூழல்
*********************
தற்போதைய சூழலில் கூட்டம் கூடுதல் தவிர்க்கப்பட வேண்டிய முக்கியமான செயல் அல்லவா ? எனவே வீட்டில் பூசை அறையில் ஒரு கலயத்தில் தூய நீரை வைத்து சிறிது மஞ்சள் இட்டு, பூஜைக்கு வேண்டிய பொருட்களை வைத்து ,ஏழு புனித நதிகளின் பெயர்களைக் கூறி வணங்கினால் போதுமானது. இந்த நாளில் மகாலட்சுமி மிகவும் மகிழ்ந்து இருப்பதாக நம்பப் படுகிறது. எனவே குபேரனையும், மகாலட்சுமியையும் இந்த நாளில் வணங்குவதால் குறைவற்ற செல்வம் நிலைக்கும் .
காவிரிக் கரைதோறும் சிறப்புற்று விளங்கும் இவ்விழா பல நன்மைகளை பயப்பதாக நம்பப்பட்டது, மேலும் இவற்றில் அறிவியல், வேளாண் அறிவியல் சிந்தனைகள் நிறைந்துள்ளன. உலக நாகரீகங்கள் ஆற்றங்கரை ஓரத்தில் தோன்றியது என்பது வரலாறு. நமது ஆற்றங்கரைகளும் சிறப்புப் பெற்றுக் காணப் படுகிறது.
நாகரீகத்தில் தலைசிறந்த பழந்தமிழர்களும் தண்ணீரின் மேன்மையைப் போற்றி இயற்கையை மதித்து விழா எடுக்கும் முறையே சிறந்த நாகரீகம் ஆகும்.
இந்த விழாக்களை கொண்டாடுவதன் மூலம் பாரம்பரியம் காப்பதோடு மட்டும் அல்லாமல் பழந்தமிழரின் சிந்தனைப் பேழையில் இருந்து சிந்திய , சிறந்த அறிவியல் சார்ந்த, வாழ்வியல் சார்ந்த கருத்துகள் மேன்மையான அற்புதங்கள். இவற்றின் பாரம்பரியம் காத்து வருங்கால சந்ததியினரும் பின்பற்ற வகை செய்து , வழிகாண்போம் !.
ஆடிப்பெருக்கில்
ஆனந்தம் பெருக
அனைவரின் உள்ளம் உருக
வாழ்த்துகிறது Greentamil.in
மு.மகேந்திர பாபு.
************** ************* ************
0 Comments