ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
2021 - 2022
செயல்பாடு - 5
பத்தியைப் படித்து இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல் - ஆகுபெயர்
( வினாக்களும் விடைகளும் )
************ ************* **************
வணக்கம் நண்பர்களே ! செப்டம்பர் 1 முதல் நாம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம்.
இங்கே , ஐந்தாவது செயல்பாடாக உள்ள பத்தியைப் படித்து இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல் - ஆகுபெயர் முழுமையும் வழங்கப் பட்டுள்ளது. பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடும் , மதிப்பீட்டுச் செயல்பாட்டின் வினாக்களுக்கு விடையும் விரிவாக வழங்கப் பட்டுள்ளது. நன்றி.
5 பத்தியைப் படித்து இலக்கணக்
கூறுகளைக் கண்டறிதல் - ஆகுபெயர்
கற்றல் விளைவு:
ஆகுபெயரைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்,
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
சென்னை - மும்பை அணிகளுக்கு இடையில் நடந்த மட்டைப்பந்துப் போட்டியில் யார் வென்றார்கள்? என்று ஆசிரியர் மாணவரிடம் கேட்டால் மாணவர்கள் உடனே மும்பை வென்றது என்பார்கள். இங்குமும்பை என்பது ஓர் ஊரைக்குறிக்காமல் மும்பைஅணிக்காக விளையாடும் மட்டைப்பந்து வீரர்களைக் குறிக்கும். இவ்வாறு குறிப்பதனை ஆகுபெயர் என்று கூறுவர்.
விளக்கம்
ஒரு பொருளின் இயற்பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயர்.
(எ.கா.) வெள்ளை அடித்தான்.
இங்கு வெள்ளை என்பது வெண்மை நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பைக் குறிப்பதால் இதற்கு ஆகுபெயர் என்று பெயர். ஆகுபெயரை
ஆறுவகையாகப் பிரிக்கலாம்.
1. பொருளாகுபெயர்
2. இடவாகுபெயர்
3. காலவாகு பெயர்
4. சினையாகு பெயர்
5. பண்பாகு பெயர்
6. தொழிலாகு பெயர்
1. பொருளாகுபெயர் அல்லது முதலாகுபெயர்
ஒரு பொருளின் முழுப்பெயர் அதனைக் குறிக்காமல் அப்பொருளின் உறுப்புக்கு
ஆகிவருவது பொருளாகுபெயர்.
(எ.கா.) முல்லையைத் தொடுத்தாள். இங்கு முல்லை என்பது முதற்பொருளாகிய
முல்லைக் கொடியைக் குறிக்காமல் அதன் சினையாகிய பூவுக்கு ஆகிவந்தது.
2. இடவாகுபெயர்
ஓர் இடத்தின் பெயர், அந்த இடத்தைக் குறிக்காமல் அந்த இடத்தில் உள்ள
பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர் எனப்படும்.
(எ.கா.) ஊர் சிரித்தது.
இதில் ஊர் என்பது இடத்தைக் குறிக்காமல் ஊரிலுள்ள மக்களுக்கு ஆகி வந்தது.
3.காலவாகு பெயர்
காலத்தின் பெயர்,காலத்தைக்குறிக்காமல் அக்காலத்தில் உருவாகும் பொருளுக்கு
ஆகி வருவது காலவாகு பெயர் எனப்படும்.
(எ.கா.) தை பொங்கியது.
இத்தொடரில், தை என்பது மாதத்தைக் குறிக்காமல் தை மாதத்தில் வைக்கும்
பொங்கலுக்கு ஆகி வந்தது.
4.சினையாகு பெயர்
சினையாகு பெயர் (சினை- உறுப்பு ) என்பது உறுப்பைக் குறிக்காமல் அவ்வுறுப்பு
உள்ள முழுப் பொருளுக்கு ஆகி வருவது.
(எ.கா.) தலைக்கு ஒரு திருக்குறள் கொடு,
இத்தொடரில், தலை (சினை) என்பது தலையைக் குறிக்காமல் தலையை
உறுப்பாகக் கொண்ட மனிதனுக்கு ஆகிவந்தது.
5.பண்பாகு பெயர்
மஞ்சள் பூசினாள்.
இங்கு மஞ்சள் என்னும்பண்புப்பெயர், அப்பண்பைக்குறிக்காமல் மஞ்சள் நிறமுள்ள
கிழங்கைக் குறிப்பது பண்பாகு பெயர் ஆயிற்று.
6. தொழிலாகு பெயர்
பொங்கல் உண்டான். இத்தொடரில், பொங்கல் என்பது பொங்குதலாகிய தொழிலைக் குறிக்காமல் பொங்கல் என்னும் உணவுக்கு ஆகிவந்ததால் இது தொழிலாகு பெயர் ஆயிற்று.
*********** ************** ***********
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. பொருத்தமான ஆகுபெயர்ச் சொல்லைக் கொண்டு நிரப்புக.
இந்தியா வென்றது (பூனை, இந்தியா)
டிசம்பர் பூத்தது (டிசம்பர்,பூ)
மல்லிகை சூடினாள் (மலர் , மல்லிகை)
ஊர் சிரித்தது (ஊர், குழந்தை )
வெள்ளை அடித்தான் (சுண்ணாம்பு,வெள்ளை )
தை பொங்கியது (பால் ,தை)
சித்திரை அடித்தது (சித்திரை,வெயில்)
வறுவல் தின்றான் (வறுவல்,முறுக்கு)
வெற்றிலை நட்டான் (வெற்றிலை , மரம்)
இனிப்பு சாப்பிட்டேன் (உணவு,இனிப்பு)
2. கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஆகுபெயரைக் கண்டறிந்து அதன் வகையைக் குறிப்பிடுக.
பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர் தன் எழுச்சி உரை மூலம் மாணவர்கள் அனைவருக்கும் தேசப்பற்றினை ஊட்டினார் . அடிமைத் தளையிலிருந்து மீண்ட இந்தியாவின் வீரத்தை மாணவர்கள் நெஞ்சில் நிறுத்தினர். விழாவின் முடிவில் ஆசிரியர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாமேடை மகிழ்ச்சியில் துள்ளியது. விழா முடிந்ததும் அவரவர் கால்கள் ஓடின. வீட்டில் அம்மா வெள்ளை அடித்துக்கொண்டிருந்தார். நானும் வெள்ளை அடிப்பேன் என்று
குழந்தை அடம்பிடித்தான்.குழந்தைக்கு அம்மாவறுவல் கொடுத்து அவனது எண்ணத்தை மாற்றினாள்.
இந்தியாவின் வீரத்தை - இடவாகு பெயர்
இனிப்பு வழங்கினார் - தொழிலாகு பெயர்
கால்கள் ஓடின - சினையாகு பெயர்
வெள்ளை அடித்துக் கொண்டிருந்தார் - பண்பாகு பெயர்
வறுவல் கொடுத்து - தொழிலாகு பெயர்
0 Comments