உலக சமத்துவ பெண்கள் தினம் - ஆகஸ்ட் 26 - 2021


           சமத்துவ  பெண்கள் தினம்

                           26 • 8 • 2021


" ஆணும்  பெண்ணும்  நிகரெனக்   கொள்வதால்

அறிவிலோங்கி  இவ்  வையகம்  தழைக்குமாம்...

      

    எனும் மகாகவியின்  சத்திய  வாக்கினில்  நித்தியம்  கண்டோமா..? உண்மையான  சமத்துவத்தைக் கண்டதா  பெண்ணினம்? முன்னொரு காலத்தில்  ஆண் , பெண் வேறுபாடுகளற்ற  சமூகத்தைக் கண்டது  உலகம். பின்னாளில் பெண் பொருளாதாரமற்ற  உடைமைப்  பொருளானாள்.

      போராட்டங்கள்  பல  கடந்தே  சமத்துவத்தை  நோக்கிப் பெண்ணினம் பயணமானது. வல்லரசு நாடுகளிலும்  பெண்கள்  சிக்கலை  தீர்க்க பல வழிகளை  தேடியே தீர்வு காண வேண்டியுள்ளது. 


" நிமிர்ந்த  நன்னடை நேர்கொண்ட  பார்வையும்

நிலத்தில்  யார்க்கும்  அஞ்சாத நிலை..." கொண்ட பெண்கள் ,  வாழ்வின்  எந்தச்  சூழலையும்  எதிர் கொண்டு  வெற்றிகாணும்  திறன் பெறுவதற்கு  நமது முன்னோர்களின்  நெறிகாட்டுதலும்,ஊக்கமும்,ஆதரவும்  கூட  காரணமாக  இருக்கலாம் . 

    பொது வெளியில் தரப்படும்  பாதுகாப்பே அங்கு நிலவும்  சமத்துவத்தை  எடுத்துக் காட்டும்.  

           தோல்வி கண்டு துவளாத மனதுடன் வெற்றிப்படி நோக்கி வீர நடை பயில்பவள் பெண். மன உறுதியில் மாபெரும் சக்தியாக திகழ்கின்ற பெண்ணே , வாழ்வின் பல நிலைகளில்  பங்குகொண்டு  பாதையாகிறாள்.

       பாதையானவள்  பல நேரங்களில் பகையாகவும்  பார்க்கப்படுகிறாள் . காரணம்  உரிமையின்மையும்,  பொருளாதார  நிலையும்  . அந்த உரிமையைப் போராடித்தான்  பெற வேண்டிய நிலை. வல்லரசாக உள்ள தேசத்திலும் அதே நிலைமை.அடக்கப்பட்ட  மனம்  பொங்கியெழும் போது போராட்டமாக  வெடிக்கிறது. 

        புயலுக்குப் பின் அமைதி என்பது போல ,போராட்ட த்திற்குப்  பின்  சமாதானம். அந்த சமாதானம் வந்த  வழி  இனிது காணுமோ... சமத்துவத்தை சாதனையாக்க சங்கமித்த சகோதரிகளின் வீர வரலாறு படிகளாகிறது...

சமத்துவப் போராட்டம்.

      சமத்துவ தினம் என்பது, ஆகஸ்டு -26 - 1920- ஆம் ஆண்டு  அமெரிக்க பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.  முதன் முதலில்  பெண்கள்  வாக்களிக்கும்  உரிமையை  நினைவு கூர்ந்து போற்றும்  வகையில்  ஒவ்வொரு ஆண்டும்  ஆகஸ்ட்  26  - ஆம் நாள் பெண்கள் சமத்துவ தினமாக கொண்டாடப் படுகின்றது.

        ஆணுக்குப் பெண் சரிநிகர்  என்பதை வலியுறுத்தும்  விதமாக  ஒவ்வொரு ஆண்டும்  ஆகஸ்ட் 26 - நாள் கொண்டாடப் படுகிறது. 

     அமெரிக்காவில்  உள்நாட்டுப்  போருக்கு முன் பெண்களின் வாக்குரிமை இயக்கம் ஒன்று தொடங்கப் பட்டது. 1920 ஆம்- ஆண்டு ஆகஸ்ட் 26- ம் நாள் பெண்களுக்கான  வாக்கிடும்  உரிமை வழங்கியது அமெரிக்க அரசு.

       இந்த நாளில்  பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனையும், அதன் பாதிப்புக்களையும் முன் வைத்தனர். இதன் காரணமாகப் பல பெண்களுக்கு நாடு தழுவிய  போராட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு விடப்பட்டன.  இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான  பெண்கள் பங்கேற்க  பதிவே வெற்றியானது.

     இந்த மாநாட்டை நடத்தின பின்னரே முதன் முதலாக  பெண்கள் சமத்துவ நாள் கொண்டாடப்படுகிறது.

       அமெரிக்காவின் முக்கிய  நிகழ்வு நாட்களில் இதுவும்  ஒன்றாகும்.  பெண்கள் எதிர் கொள்ளும்  பிரச்சனையும் , அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகள், கருத்தரங்குகள் , பயிற்சிப் பட்டறைகள்  ஆகியவை இந்நாளில்  ஏற்பாடு செய்யப் படுகின்றன. 

        இந்தியாவில்  சற்று வேறு விதமாக ஆங்கிலேயர் காலத்திலேயே  பெண்களின் ஓட்டுப் போடும்  அனுமதி வழங்கப்பட்ட து.பின்பு சுதந்திர இந்தியாவில் 1950- ஆம் ஆண்டு  அமலுக்கு வந்தது. இந்திய அரசியல் அமைப்பில் சரத்து 14 - ல் பெண்கள் சமத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்ட  தினமே  பின்பு உலகம் முழுவதுமுள்ள பெண்களால் கொண்டாடப் படும் சமத்துவ நாளாக பரவியது.

      பெண்கள் வாக்களிப்பதால் மட்டுமே வளமான வாழ்வை பெற்றுவிட முடியாது. அவர்களின் பாதுகாப்பும்,வழங்கப்படும் நீதியும் உறுதியானதாக இருத்தல் வேண்டும். தன்னிலை எண்ணாது, குடும்ப நலனுக்காக பாடுபடும் பெண்கள் அனைவருமே சமத்துவமானவர்கள். சங்கடங்கள் களைவோம்! சமத்துவம் போற்றுவோம் !

Post a Comment

0 Comments