15•8•2021
75 - ஆவது சுதந்திர தின விழா
விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உலக இயக்கத்தின் முன்னுரையாய்
செழிக்கும் வாழ்வில் தன்னிறைவாய்
மொழியும் கலையும் முதனிலையாய்
தன்னலம் காணாது பிறர்வாழ மகிழ்ந்த வீரர் கூட்டம்.....!
புரட்சியும் கிளர்ச்சியும் கண்டு
வேசமும் கோசமும் இட்டு
கனலாய் அனலாய் கொதித்து தகித்து
சிந்திய செந்துளி சிறிதல்லவே...!
அஞ்சி நடுங்கவில்லை
கெஞ்சி மடியவில்லை
சுதந்திர வேட்கையில்
மிஞ்சி உறுமுகிறான் .
அகிம்சை ஆயுதமேந்தி
அறவழி தாம் கடந்து
உச்சம் தொட்டதால்
அவனியல்லவா நடுங்கியது..!
சத்தியாகிரகம் எனும்
சத்திய மந்திரத்தால்
சாதனை வீரர் பெருந்திரளாக அணிவகுத்து
வஞ்சம் அறுக்கப் புறப்பட்ட
நெஞ்சம் நிமிர்ந்த மறவர்களின்
வீரவரலாறு பேசும் நாள் இன்று.....!
அறப்போரில் வெற்றிக்கண்ட தன்னலமற்ற எண்ணிலா நாட்டுப் பற்றுள்ள வீரர்களின் வீர சரித்திரம். ஆண்டு பல கடந்தும் அழியா ரேகைகளாய், வரலாறு வாழ்த்தும் நம் மறம்கூறும் மாண்புகள் பலப் பல.அநீதி இழைத்த அன்னியரைத் துணிந்து நின்று வீரமுரசு கொட்டி , அலைகடல் கடந்து ஓடவிட்ட, ஒப்பில்லா சுதந்திரக் காற்றின் ஆற்றல்மிகு ஒட்டம். இது தியாகத்தின் நினைவுகூறும் திருநாள். ஆம் ! அதுதான் சுதந்திர தினம் எனும் பெருநாள்.
தன்னலமற்ற எண்ணிலா இளைஞர்களும் , வீரர்களும் வீராவேசம் கொண்டு வெற்றிமுழக்கமிட்டனர். சிறு பொறியாக தோன்றிய தீ நாடு முழுவதும் பரவித் தீக்காடானது. அத்தீயின் கதிர்வீச்சை எதிர் கொள்ள முடியாத ஆங்கிலேய அதிகாரம் தாமாகவே விட்டு விலக முடிவெடுத்தது. அத்தகைய வீரம் செறிந்த மண்ணில் மலர்ந்த மாணிக்கங்களின் மகத்துவ வரலாறுகளில் சில ....
முதல் தற்கொலைப்படைத் தாக்குதல் தந்த
மாவீரன் கட்டக்கருப்பணன் சுந்தரலிங்கத் தேவேந்திரனார்.
சுதந்திர வரலாற்றின் சுவடிகளைக் காணும்போது நம் கண்களைக் குளமாக்கும் முதல் மாவீரன் , முத்தாய்ப்பான மாவீரன் . தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி அருகே கவர்னர்கிரி என்னும் ஊரில் கட்டக்கருப்பணன் - முத்திருளி தம்பதியினரின் மகனாய் 1770 ல் உதித்த சுந்தரலிங்கம் . இவரின் வீரத்தைக் கேள்விப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தன் ஒற்றர் படைக்குத் தளபதியாக்கிப் , பின்னர் தன் ஒட்டுமொத்தப் படைக்குமே தளபதியாக்கினான். அந்த அளவிற்கு வீரமும் , ஈரமும் செறிந்தவன் மாவிரன் சுந்தரலிங்கம்.
1779 - ல் ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சியின் மீது போர் தொடுத்தார்கள். 1779 - செப்டம்பர் 8 ல் தன் முறைப்பெண் வடிவுடன் ஆடுமேய்ப்பவர்கள் போல வேடமணிந்து , கையில் தீப்பந்தத்துடன் வெள்ளையர்களின் வெடிமருந்துக் கிடக்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது.
29 வயதில் தன் இதயம் நேசித்த வடிவுடன் இணைந்து இல்லற வாழ்வில் ஈடுபடாமல் , இருவரும் இணைந்து நாட்டிற்காகத் தன் இன்னுயிர் துறந்தனர்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தியவர்கள் மாவீரன் கட்டக்கருப்பணன் சுந்தரலிங்கத் தேவேந்திரனும் , அவனது அத்தை மகள் வடிவும். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம். ஆயிரக்கணக்கான மாவீரர்களின் மரணத்தில் மலர்ந்ததுதான் இந்தச் சுதந்திரப்பூ.
மகாகவி பாரதியார்
இந்தியா விடுதலைப் பெறும் என தன் எதிர்காலக் கனவை ,
" ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று"
என ஆனந்தக் கூத்தாடிய கவிதை கலையுலகின் கனல் கொண்ட தீபம் , இந்திய விடுதலையெனும் தீக்குப் பொறியாய் எழுந்து சோம்பியிருந்தவரை , தம் பாடலால் பற்றியெரியும் தீக்காடாக்கினார்.விடுதலை உணர்வுக்கு வீரமூட்டினார்.
அலை கடலெனத் தோன்றும் கவிதை ஓட்டத்திற்கும், எரிமலையென வெடிக்கும் விடுதலை உணர்வுக்கும் பத்திரிக்கைகளே பாதையாகி ,எழுச்சி விழிப்பூட்டும் கவிதையாக, கட்டுரையாக, மக்கள் கரம் சேர்ந்தன.இவை போக எஞ்சிய வேளையெல்லாம் சொற்பொழிவுகள், பாடல்கள் மூலம் விடுதலை கனல் மூட்டினார்.
தம் எண்ணத்தில் தோன்றிய கருத்துணர்வுகளை தடையின்றித் சுதந்திரமாகவெளியிட ஒரு கருவி தேவைப்பட்டது.அதுவே 1905 - ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட "சக்ரவர்த்தினி " என்னும் இதழ். இவ்விதழ் வாயிலாக " பங்கிம் சந்திர சட்டர் ஜியின் " வந்தே மாதரம்" என்னும் புகழ்மிக்க பாடலை மொழிபெயர்த்து வெளியிட்டார்.பாலகங்காதர திலகர் மீது அளவற்ற பற்றுக் கொண்டார்.அவர் வழியில் விடுதலைக்காகப் பாடுபட்டார்.
மாவீரன் பூலித்தேவன்
பூலித்தேவன் நெற்கட்டான் செவ்வல் என்ற பகுதியை ஆண்ட மன்னன். வெள்ளையரை எதிர்த்து வீராவேசத்துடன் புலிபோல பாய்ந்த மாவீரன் ஆவார். இந்திய சுதந்திரத்திற்காக சிறிதுகாலமே போராடினாலும் , வெள்ளையரை விரட்டியடிக்க முதன் முதலில் வாளெடுத்த மாவீரன்.
1750 - ல் திருச்சி வந்த இராபர்ட் கிளைவ் தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்று அறிவித்ததை எதிர்த்து , பெரும் படையுடன் திருச்சி சென்று ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிபெற்றார்
1755 - ல் கப்பம் கேட்டு வந்த ஆங்கிலேய தளபதி அலெக்சாண்டர் கெரான் என்பரோடு போரிட்டு பெற்ற வெற்றியே , பாளையக்காரர்களிடம் ஆங்கிலேயருக்கான தோல்வி தொடங்கியது.இதன் மூலம் தென்னாட்டு சுதந்திர எழுச்சிக்கு வித்திட்டார்.
மாவீரன் அழகு முத்துக்கோன்
1710 - ஆம் ஆண்டு பிறந்த காட்டாங்குளம் அரசர் முத்துக்கோன் . இந்தியாவின் முதல் விடுதலைப் போருக்கு முன்பே பல இடங்களில் ஆங்கிலேய எதிர்ப்புப் போர் நடந்து கொண்டிருந்தது. அதில் முதன்மையான விடுதலைப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் ஆவார்.
மாவீரர்கள் மருது பாண்டியர்கள்.
*************************************
வெள்ளையரின் அடிமைப்படுத்தும் செயலால் வெகுண்டெழுத்த மருதுபாண்டியர் , பிரிட்டிஷாரின் துரோக சூழ்ச்சி,நமது ஒற்றுமையின்மையின் நிலை , புரட்சியின் நோக்கம் முதலியவற்றை விளக்கும் விதமாக , திருச்சி மலைக்கோட்டை நுழைவாயில்கள், திருவரங்கம் கோயில் கோபுரம் போன்ற வற்றில் மருதுபாண்டியரின் அறிவிப்புகள் ஒட்டப் பட்டன. ஆங்கிலேய ரை ஒடுக்கும் விதமாக கொரில்லாப் போர் முறை கையாளப்பட்டது. திட்டம் பல வகுத்து எதிரியை அலைக்கழிக்கச் செய்தனர்.
ஒன்றுபட்ட புரட்சியாளர்கள் தக்காணத்தில் "குந்தா" கர்னாடகாவின் " வனவாசி" ,கோண்டா" ஆகிய இடங்களில் உள்ள இராணுவ தளவாடங்களைத் தாக்கி வெற்றிகண்டனர்
பின் ஊமைத்துரை , செவத்தையா முதலான 17 - புரட்சிக்காரர்களை பாளங்கோட்டைச் சிறையிலிருந்து 1801 - ஆம் ஆண்டு , 200 - புரட்சியாளர்கள் , திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் போல வேடமிட்டு கோட்டைக்குள் நுழைந்து கைதிகளை தப்பிக்கச் செய்தனர். இச்செயல் தென்னகம் முழுவதும் புரட்சிப் பரவியதன் சாட்சியாக விளங்கியது.
வீரமங்கை வேலு நாச்சியார்
~~~~~~~~~~~~~
காளையார் கோயிலைக் கிழக்கிந்திய ஆங்கிலேயப் படை தாக்கிய போது மன்னர் முத்து வடுகநாதரின் மனைவியும்,சிவகங்கை அரசியுமான வேலுநாச்சியார் தொன்மை வீரம் மாறாமல் எதிரியை எதிர்த்தது தமிழர் வீரம் எட்டுத் திக்கும் எதிரொளிக்கத்தான் செய்தது.
ஆங்கிலேய அடக்கு முறையை எதிர்த்த முதல் இந்தியப் பெண்ணரசி என்பது வேலுநாச்சியாருக்கே உரிய மறம்மாறா வரலாறுஆகும்.
பெண்கள் படையை உருவாக்கி ,பெண்களுக்கே உரித்தான வீரதியாகத்தை வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறச் செய்தார். இவரது பெண்கள் படைப் பிரிவில் இருந்த " குயிலி ' வீரப்பெண் ஆயுத கிடங்கில் தீவைத்து , தானும் தீவைத்துக்கொண்டு உயிர் தியாகம் செய்த கொரில்லா போர்முறை தென்னகப் பெண்களின் தொன்மை வரலாற்றைப் பறைசாற்றுகின்றன .
அஞ்சலை அம்மாள்(தென்னிந்திய ஜான்சி ராணி.
1890 - ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தவர் அஞ்சலை அம்மாள்.ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்த இவர் காந்தியக் கொள்கையால் ஈர்க்கப் பட்டு 1921 - ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற்றார். இவ்வியக்கத்தில் பங்கு கொண்ட தென்னிந்தியாவின் முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றார்.
எளிய குடியில் பிறந்த இவர் தமக்குச் சொத்தாக விளங்கிய வீட்டையும், நிலத்தையும் விற்று விடுதலைப் போராட்டத்திற்காகச் செலவிட்டார்.
அதுமட்டுமல்லாது தமது 9 - வயது மகளையும் போராட்டத்தில் ஈடுபடுத்தி அக்குழந்தையுடன் சிறை சென்றார்.
மகாத்மா காந்தி கடலூர் வந்திருந்த சமயம், பிரித்தானிய அரசு அஞ்சலை அம்மாவைப் பார்க்க முயன்ற காந்திக்கு தடைவிதித்தது. ஆனாலும் அஞ்சலை அம்மா " பர்த்தா" அணிந்து வந்து காந்தியடிகளைச் சந்தித்தார். இவரது துணிச்சலைக் கண்டுவியந்த மகாத்மா ,இவர் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று புகழ்ந்தார்.
மதுரை கிருஷ்ணசாமி பாரதி
***********************************
தியாகியாக இருப்பவர் சிலர் , இவர் குடும்பம் முழுதுமே தியாகச் சரித்திரத்தில் இடம்பெற்றது பெருமைக்குரிய செய்தி.கிருஷ்ணசாமி பாரதி அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்தவர்.நாட்டின் சுதந்திரத்திற்காக இரண்டு முறை சிறை சென்றார்.
இவரது மனைவி லட்சுமி பாரதி . இவர் சுதந்திர போராட்ட வீரர்களின் தலைவர்.போராட்ட த்திற்காக சிறை சென்று ,பின் சட்டமன்றம் சென்று, கடைசியாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினராகத் திகழ்ந்தவர்.
லட்சுமி பாரதியின் தந்தை சோமசுந்தர பாரதியின் பூர்வீகம் எட்டயபுரம். தூத்துக்குடியில் வழக்குரைஞராகப் பணியாற்றியவர். காந்தியடிகளை முதன் முறையாக தூத்துக்குடிக்கு அழைத்து வந்து ,அதன் பெருமையைப் பெற்றவர்.
வ. உ. சி. யின் இனிய நண்பர். போராட்டக் களத்திலும், தொழில் சார்ந்த நிகழ்விலும் .
வ. உ. சி.யின் சுதேசிக் கப்பல் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். கணவன்,மனைவி இருவரும் உடல் நிலை நலிவுற்ற நேரத்திலும், அறப்போரில் பங்கு கொண்டு சிறை சென்றார் லட்சுமி பாரதி.
தோழர் ப. ஜீவானந்தம்
*******************
ஜீவானந்தம் ஆகஸ்ட் . 21 . 1907 - ஆம் ஆண்டு பிறந்தார் .இவர் பொதுவுடமைக் கட்சியின் தலைவர்,தமிழ்ப்பற்றாளர், காந்திய வாதி,சுயமரியாதை இயக்க வீரர் எனப் பன்முகத் திறன் கொண்டவர்.பாரதியின் வழியைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச்செய்தார்.
வைக்கம், சத்தியாகிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம் , சுயமரியாதை இயக்கம் போன்றவற்றில் பங்கேற்று பாடுபட்டார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். காந்திஜியின் அறிவுறுத்தலின் படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தை செயல்படுத்தினார்.
திருகூட சுதந்தரம் பிள்ளையின் அன்னியர் துணி எதிர்ப்புப் பிரசாரக் கூட்டத்தில் , அவர் பேச்சில் கவரப்பட்டு அன்று முதல் " கதர் ஆடை "அணிந்தார்.
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது , அதை ஏற்காத ஜீவா எரிமலையென சீறிப் பேசிய பேச்சுக்கள் இளைஞர்களைக் கவர்ந்தது. பகத்சிங் எழுதிய " நான் ஏன் நாத்திகனானேன் ?" என்ற நூலை தமிழில் மொழிபெயத்தார்.
வாளுக்கு வேலி அம்பலம்
******************************
காளையார்கோயிலை அடுத்த பாகனேரி என்னும் ஊரின் தலைவர் வாளுக்கு வேலி அம்பலம் ஆவார். மருது சகோதரர்களின் நண்பர். வேலுநாச்சியார் மற்றும் மருதுசகோதரர்களுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆங்கிலேயர் உடனான போரில் மருதுபாண்டியனருக்கு உதவினார்.
M.N.R. சுப்பராமன் ( மதுரை காந்தி )
******************************************
M.N.R. சுப்பராமன் அவர்கள் ஆகஸ்ட் •14•1905 - ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார்.காந்திய வழிப் போராட்டங்களில் கலந்துக் கொண்டார் . அதனால் இவர்
" மதுரைக் காந்தி" என மதுரை மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குக் கொண்டு சிறைச்சென்றார் . பூமிதான இயக்க த்தில் பெரும் விருப்பம் கொண்டார்.
வினோபா பாவேவின் இவ்வியக்கத்தில் ஈர்க்கப்பட்டு தமது நூறு ஏக்கர் விளைநிலங்களை பூமிதானம் மூலம் ஏழை மக்களுக்கு பிரித்து வழங்கி உதவினார்.
தியாகி சங்கரலிங்கனார்
*****************************
18 95 • 10 • 15 ஆம் பிறந்தார் சங்கரலிங்க னார் விருதுநகரின் மண்மலை மேடு என்ற ஊரைச் சேர்ந்தவர் தியாகி சங்கரலிங்கனார். இவர் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார் . " தமிழ் நாடு" என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தமது வீட்டின் முன் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார்.
உண்ணா நோன்பைக் கைவிடப் பல அறிஞர்கள்,தலைவர்கள் அறிவுறுத்தியும் தமது மனக்கொள்கையை மாற்றவில்லை.
இதன் விளைவாக பின் நாளில் ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணாவின் தலைமையிலான அரசு ,ஏப்ரல் - 14 - 1967 - ஆம் ஆண்டு செய்த மாற்றத்தால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை " தமிழக அரசு" ஆகவும், ஜீலை - 18 - 1968 -ஆம் ஆண்டு சென்னை மாநிலம் " தமிழ் நாடு " என பெயர் மாற்றம் செய்ய வேண்டிய முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி டிசம்பர் • 1 • 1968 - ஆம் ஆண்டு தமிழ் நாடு முழுவதும் பெயர் மாற்று விழாவாகக் கொண்டாடப்பட்டு ,"சங்கரலிங்கனாருக்கு " தமிழக மக்கள் தமது நன்றிமிகுந்த வணக்கத்தைத் காணிக்கையாக்கி மகிழ்ந்தனர் என்பது காலத்தால் அழியாத உண்மை.
தியாகி விஸ்வநாத தாஸ்
************************
விஸ்வநாத தாஸ் அவர்கள் சிவகாசியில் ஜீன் • 16 • 1886 - ஆம் ஆண்டு பிறந்தார் . இவர் கலை ஆர்வத்தில் சிறந்து காணப்பட்டார். இதனுடன் இனியகுரல் வளமும் இணைந்து சிறப்பாக்கியது.இதன்மூலமாக பாடும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார். தொடக்கக் காலத்தில் மேடைநாடகங்களில் பக்திப் பாடல்களை பாடும் வாய்ப்புப் பெற்றார்.
தூத்துக்குடியில் காந்தியடிகளைச் சந்தித்துப் பின் காங்கிரஸில் இணைந்ததன் விளைவே தெய்வ பக்தியோடு, தேசபக்தியையும் பாடல்களாக பாடி விடுதலை எழுச்சியூட்டினார்.
" வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா...
அதைக் கோபமின்றி கூப்பிடடி பாப்பா...
என்ற பாடல் இவருக்குச் சிறப்புச் சேர்த்தது..
புரட்சிகரமான சிந்தனைகளை உடையதால் இவரது நாடகங்களுக்கு அரசு தடை விதித்தது.அத்தடையை மீறியதால் சிறைத்தண்டனையும் பெற்றார். ஒத்துழையாமை இயக்கத்திலும் கலந்து கொண்டு சிறைச் சென்றார்.
இந்த வரலாறு முடிவுறவில்லை நமது சரித்திரம் நீண்ட பக்கங்களைக் கொண்டது . வீரவரலாறு படைக்கும் வீரர்களின் பெயர்களைப் பதிவிடவே பக்கங்கள் போதாது.
"கற்றது கையளவு
கல்லாதது உலகளவு" என்ற ஔவையின் வாக்கைப்போல
இங்கு சரித்திர நாயகர்களின் செய்திகள் தெரிந்ததும், அறிந்ததும் குறைவே ,அறியாதவை மிகுபல .
எனவே நம்முன்னோர் கண்ட வரலாற்றுச் சுவடுகளை இளைய தலைமுறையும், வருங்கால சந்ததியினரும் அறிந்து தம் இனம் சந்தித்து ,சாதித்த சாதனைப் போராட்ட வெற்றிகளைக் கண்டு ,தம்முள் ஓர் எழுச்சி ஏற்படுமானால் அதுவே நமது சாதனை வீரர்களின் புகழ் சாகாவரம் பெற்றதாகும்.
தமிழ்நாடு கண்ட வீரர் கூட்டம் எண்ணில் அடங்காதது. தெரிந்த சிலரின் புகழ் மட்டுமே விடுதலை நாளில் பேசப்படுகிறது.ஆனால் தெரியாத பலரின் வீரச் செயல் வரலாறுகள் உலகப் பார்வைக்கு தெரிவதில்லை. அவர்களின் அடையாளம் கண்டு தேடியெடுத்து அவர் புகழைப் போற்றுவதே அவர்களுக்கு நாம் செய்யும் வணக்கமும்,நன்றியும் ஆகும். வீரதீர தியாக தீபங்களாக ஒளிரும் போராட்ட வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் இக்கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது.
சுதந்திரதின நல்வாழ்த்துகளுடன் ,
பைந்தமிழ் இணையதளம் - Greentamil.in
0 Comments