12 ஆம் வகுப்பு - தமிழ் - ஒப்படைப்பு - 2 , இயல் 2 - வினாக்களும் விடைகளும் ( முன்னுரிமைப் பாடத்திட்டம் 2021 - 22 ) / 12th TAMIL - ASSIGNMENT 2 - EYAL 2 - REDUCED SYLLABUS - QUESTION & ANSWER

 

 

       மேல்நிலை இரண்டாமாண்டு 

                      பொதுத்தமிழ் 

ஒப்படைப்பு - 2 , இயல் - 2  

       வினாத்தாள் & விடைகள் 

( செய்யுள் - பிறகொருநாள் கோடை 

இலக்கணம் - நால்வகைப்பொருத்தங்கள் ) 


                        பகுதி - அ 

I ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1 ) நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது 

அ ) சூரியக் கதிர்கள் 

ஆ ) மழை மேகங்கள்

இ ) மழைத்துளிகள் 

ஈ ) நீர்நிலைகள்

விடை : இ ) மழைத்துளிகள்

2 ) அய்யப்ப மாதவனின் கவிதைக் குறும்படம்

அ ) அறம்     ஆ ) இன்று

இ ) அன்று     ஈ ) பிறகொருநாள் 

விடை :  ஆ ) இன்று 

3 ) கைஏந்தி - இலக்கணக்குறிப்புத் தருக.

அ ) இரண்டாம் வேற்றுமை

ஆ) விளி வேற்றுமை

இ ) எழுவாய் வேற்றுமை

ஈ ) நான்காம் வேற்றுமை

விடை : அ ) இரண்டாம் வேற்றுமை 

4 )  ' உறிஞ்சுகிறது ' என்பதில் பகுதி -----

அ ) உறிஞ்    ஆ ) உறிஞ்சு

இ ) உறி         ஈ) உறிஞ்சி

விடை : ஆ ) உறிஞ்சு

5 )  ' வருமென்று ' - புணர்ச்சி விதி -----

அ ) இ , ஈ , ஐ வழி யவ்வும்

ஆ ) இனமிகல்

இ ) ஈறுபோதல்

ஈ ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே

விடை : ஈ ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே

6 ) மொழியின் அடிபபடைப் பண்புகள் -----

அ ) திணை , பால்      ஆ ) எண் , இடம் 

இ ) திணை , பால் , எண் , இடம் 

ஈ ) இடம் , திணை

விடை : இ ) திணை , பால் , எண் , இடம்

7 ) உலக மொழிகள் அனைத்திலும் ------ சொற்களே மிகுதி.

அ ) பெயர்      ஆ ) வினை 

இ ) இடை        ஈ ) உரி 

விடை : அ ) பெயர் 

8 ) ' அவர்கள் வந்தார்கள் ' - என்ற தொடரில் ' அவர்கள் ' என்பது ------

அ ) வினைச்சொல் 

ஆ ) இடைச்சொல் 

இ ) பதிலிடு பெயர்ச்சொல்

ஈ ) தன்மைப்பன்மைச்சொல்

விடை : இ ) பதிலிடு பெயர்ச்சொல்

9 ) இடப்பாகுபாடு ------ வகைப்படும்

அ ) 5     ஆ ) 3     இ ) 8    ஈ  ) 4

விடை :  ஆ ) 3 

10 ) தமிழில் திணைப்பாகுபாடு ------- அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

அ ) பொருட்குறிப்பு 

ஆ ) சொற்குறிப்பு 

இ ) தொடர்க்குறிப்பு

ஈ ) எழுத்துக்குறிப்பு 

விடை :  அ ) பொருட்குறிப்பு 


                      பகுதி - ஆ 

II ) குறுவினா 

1 )  நகரம் பட்டை தீட்டிய வைரமாகிறது - விளக்குக.

      * பெய்த மழையால் நகர மாசுகள் அகற்றப்பட்டன. 

      * மழைக்காலமாயினும் திடீரென வெளிப்பட்ட சூரிய வெளிச்சத்தால் , நகரம் புதுப்பொலிவாகியது.

      * இதனை , ' நகரம் பட்டை தீட்டிய வைரமாய் ' விளங்குகிறது என்கிறார் கவிஞர்.

2 ) பகுபத உறுப்பிலக்கணம் தருக - குவித்து

          குவித்து  - குவி + த் + த் + உ 

குவி - பகுதி 

த்       - சந்தி 

த்       - இறந்தகால இடைநிலை

உ      - வினையெச்ச விகுதி


3 ) புணர்ச்சி விதி தருக.

சுவரெங்குமிருந்த

சுவரெங்கும் + இருந்த

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - என்ற விதிப்படி ,

ம் + இ = மி - ஆனது. சுவரெங்குமிருந்த எனப் புணர்ந்தது.


4 ) நால்வகைப் பொருத்தங்கள் யாவை ?

          எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினைமுற்று எழுவாயுடன் சேர்ந்து  திணை , பால் , எண் , இடம் ஆகிய நால்வகைப் பொருத்தங்கள் உடையதாய் அமைகிறது.


5 ) இருதிணைக்கும் பொதுவாக வரும் பெயர்கள் எழுவாயாக அமையும்போது வினைமுடிபு எவ்வாறு அமையும் ?

           இரு திணைக்கும் பொதுவாக வரும் குழந்தை , கதிரவன் என்னும் பெயர்கள் எழுவாயாக அமையும் போது அவற்றின் வினை முடிபு இருதிணையும் பெற்று வரும்.

சான்று - 

குழந்தை சிரித்தான் -  குழந்தை சிரித்தது.

 கதிரவன் உதித்தான் / கதிரவன் உதித்தது 


                              பகுதி - இ 

III ) சிறுவினா

1 ) மழைக்கனவிலிருந்து ஊர் எவ்வாறு விடுபடுகிறது ?

                  *  மழைக்காலங்களில் நீர்தேங்கி நிரம்பி வழிந்த நீர்நிலைகள் யாவும் வெயில்கால சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டதும் ஆவியானதால் நீர் குறைந்து விட்டது.

              * வீட்டின் சுவரெங்குமிருந்த மழைநீரின் தடங்கள் யாவும் வெயில் பட்டவுடன் மறைந்து போயின.

              * மழைக்காலங்களில் ஈரமான மரங்களின் இலைகளில் தங்கியிருந்த நீர்ச்சொட்டுகளையெல்லாம் மரமானது , வெயில் பட்டவுடன் மகிழ்ச்சியில் தலையை அசைத்து உதறுகிறது.

               * மழைக்காலங்களில் இரைதேட வழியின்றி மரத்தின் கூட்டிலேயே தங்கியிருந்த பறவைகள் யாவும் வெயிலைக் கண்டவுடன் உற்சாகத்தில் சங்கீதம் இசைத்துக் கொண்டு தம் இரையைத்தேடி பறந்து சென்றன.

                 * இவ்வாறு மழைக்காலத்தில் நனைந்திருந்தவை அனைத்தும் சூரியனின் ஒளிக்கதிரால் வெளிச்சம்பட்டு பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகி மழைக்கனவிலிருந்து ஊர் விடுபடுகிறது.      

2 ) ' நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து

      உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள் ' - இக்கவிதை அடிகள்

 ' தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே ! - என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவது பற்றி எழுதுக.

             * பொழுது புலராத காலை வேளையில் இரவு முழுவதும் நிலவின் குளிர்ச்சியில் புல் , செடி , கொடி முதலானவற்றில் பனிநீர் படர்ந்து காணப்படும்.

              * பொழுது புலர்ந்த பின்பு , சூரியனின்  ஒளிக்கதிர்கள் அந்நீரை உறிஞ்சுக் கொள்ளும். பனி மறைந்து விடும்.

               *  நிலவின் பனிப்பொழிவு முடிந்து சூரியனின் வெப்பக் கதிர்கள் பரவி விட்டது என்பதை இவ்வரிகள் நயமாக எடுத்துரைக்கிறது.

நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து

      உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள் ' - இக்கவிதையில் , 

                * மழைக்காலங்களில் நிரம்பி வழிந்து குளிர்ச்சியாக இருந்தன நீர்நிலைகள் .

                 * தற்போது கோடைக்காலம் தொடங்கியவுடன் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு உடனே நீர் ஆவியாகிறது.இதன் மூலம் வெயிலின் தாக்கத்தைக் குறிப்பிடுகின்றன இவ்வரிகள்.

                  * மழைக்காலம் முடிந்து கோடை தொடங்கிவிட்டது என்பதை இவ்வரிகள் நயமாக உணர்த்துகின்றன.


3 ) இடப்பாகுபாடு , தொடர் அமைப்பிற்கு இன்றியமையாதது என்பதைச் சான்றுடன் விவரி.

          தன்மைப் பன்மையில் , 

 i ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

 ii ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என இருவகை உண்டு.

 i ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

          பேசுபவர்  ( தன்மை ) முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை ஆகும்.

நாம் முயற்சி செய்வோம்( உளப்பாட்டுக் தன்மைப் பன்மை)

இத்தொடரில் நாம் என்பது தன்மையையும் , முன்னிலையில் உள்ள அனைவரையும் குறிக்கிறது.

 ii ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

     பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது உளப்படுத்தாத தன்மைப் பன்மை ஆகும்.

நாங்கள் முயற்சி செய்வோம்(உளப்படுத்தாத் தன்மைப் பன்மை)


4 ) மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

i )   தலை , தளை , தழை 

தோட்டத்தில் பசுமையாக முளைத்திருந்த தழைகளை இரண்டு மூன்று தளைகளாக்கித் தலையில் சுமந்து சென்றேன்.

ii ) அலை , அளை , அழை 

       உறவினர்களை அழைத்துக்கொண்டு , கடலலையைக் காணச்செல்லும் வழித்தடத்தில் அளைகளைக் கண்டேன்.


5 ) ' மழை ' என்னும் தலைப்பில் எட்டு வரிகளுக்குக் குறையாமல் கவிதை எழுதுக.

மாணவர்கள் தங்கள் மனதில் பட்டதைக் கவிதையாக எழுதுக.

                            பகுதி - ஈ 

IV ) நெடுவினா

1 ) புயலின் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு  அருகில் அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக்கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர் 

                த. தமிழரசன் , 

               1 , பாரதி தெரு , 

               கருப்பாயூரணி , 

               மதுரை - 20.

பெறுநர் 

              மின்வாரிய உதவிப்பொறியாளர் ,

               மின்வாரிய அலுவலகம் , 

               கருப்பாயூரணி , 

               மதுரை - 20.

ஐயா , 

             பொருள் : அறுந்து  கிடக்கும் மின் இணைப்புகளைச் சரி செய்தல் சார்பாக.

      வணக்கம். நான் மேற்கண்ட முகவரியிர் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எங்கள் குடியிருப்பில் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.  கடந்த  இரு நாட்களாக எங்கள் பகுதியில் புயல் தாக்கத்தினால் வீட்டின் கூரைகளும் , தடுப்புச்சுவர்களும்  இடிந்து விட்டன. மேலும் , மின் இணைப்புக் கம்பிகளும் அறுந்து கிடக்கின்றன. குழந்தைகள் , பெரியவர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் முன் , உடனே வந்து சரிசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

                  நன்றி.

    மதுரை.                                         இப்படிக்கு ,

    21-  08 -21                                      த.தமிழரசன்.

உறைமேல் முகவரி.

பெறுநர் 

              மின்வாரிய உதவிப்பொறியாளர் ,

               மின்வாரிய அலுவலகம் , 

               கருப்பாயூரணி , 

               மதுரை - 20.

**************    *************    ************

2 ) இலக்கிய நயம் பாராட்டுக.

வெட்டியடிக்குது மின்னல் - கடல் 

     வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது

கொட்டி யிடிக்குது மேகம் - கூ 

     கூவென்று விண்ணைக் குடையுது காற்று

சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று 

     தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்

எட்டுத் திசையும் இடிய - மழை 

     எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா ! 

                                     -  பாரதியார்.

இலக்கிய நயம் பாராட்டுதல்

முன்னுரை

               ' தேசியகவி, மகாகவி' என்ற புகழ்மொழிக்கு உரியவர் பாரதி, பாரதி தேசியத்தையும், தெய்வத்தையும், மொழியையும் ஒருசேரப் பாடியுள்ளார். அவர் இயற்கையையும் எழுச்சிமிகு சொற்களால் பாடியுள்ளார். கொட்டும் மழையைப் பற்றிய எட்டும் தமிழ்ச்சொல் நிறைந்த பாடலில் உள்ள கருத்து. நயம், அணி போன்ற சிறப்புக்களை எடுத்துச் சொல்வதே இந்த இலக்கிய நயம் பாராட்டலின் நோக்கம்.

பொருளுரை

திரண்ட கருத்து: வானத்து மின்னல் வெட்டி அடிப்பதைப் போல் உள்ளது. மழைக்கு அறிகுறியாகக் கடலில் எழுந்த பேரலைகள் வானத்தை இடிக்குது. மேகமோ கொட்டி இடியை முழக்குகிறது. காற்று, கொம்பு சுற்றிக்காற்று கூவென விண்ணைக் குடையுது. வானத்திலிருந்து விட்டுவிட்டுப் பெய்யும் மழை ஒலி' சட்டச்சட' என எழுப்பும் ஒலி தாளமிடுவதுபோல் உள்ளது. எட்டுத்திசையும் இடிந்து விழுவது போல் பெருமழை பொழிந்தது.

இவ்வாறு மழை வந்ததை வீரா! என அழைத்து அவனுக்கு மழைக்காட்சியைக் காட்டுகிறார். நம்முன் அந்நிகழ்ச்சி மனக் காட்சியாகியுள்ளது.

மையக் கருத்து: இடி மின்னலுடன் வானம் பொழிந்த பெருமழை என்பதே இப்பாடலின் மையக்கருத்து.

தொடை நயம்: மோனை நயம், 'வீரத்திரை, விண்ணை' என்ற சீர்களில் சீர்மோனை வந்துள்ளது.

எதுகை நயம்: 'வெட்டி', 'கொட்டி', 'சட்டச்சட', 'எட்டு' என்ற சீர்களில் அடி எதுகை அமைந்துள்ளது.

இரட்டைக்கிளவி: 'சட்டச்சட' எனும் ஒலிக்குறிப்பு இரட்டைக் கிளவியாக வந்துள்ளது.

சொல்நயம்: 'மின்னல் மின்னுகிறது' என்பது சொல்வழக்கு. பாடலின் ஓசைநயம் கருதி 'வெட்டியடிக்குது மின்னல்' எனவும், இடி இடிப்பதைக் கொட்டி யிடிக்குது' எனவும் வரும் சீர்கள் சொல்நயம் மிக்கவை.

பொருள் நயம்: கடலில் அலைவீசுவது இயற்கை; மழைக்காலத்தில் பேரலைகள் வருவதும் இயற்கை. வேகமாகப் பாய்ந்து நம் அலையை 'வீரத்திரை' எனப் பாரதி குறிப்பிடுவது பொருள் நயம் கருதியேயாகும்.

அணிநயம்: மின்னல் தொடர்ந்து மின்னுவது வெட்டி அடிப்பதைப்போல் உள்ளதாகப் பாரதி கூறுகிறார். இடிஇடிப்பது மேளம்கொட்டி அக் கொட்டிலிருந்து எழும் ஒலி விண்ணை இடிப்பதாகக் கூறுகிறார். கொம்பு சுற்றிக்காற்று மழைக்கு அறிகுறியாகப் பலமாகவீசும். அது விண்ணைக் குடைவதாகக் கவிஞர் கூறுகிறார். இவ்வாறு மழையின் போது நிகழும் நிகழ்ச்சிகள் மிகைப்படக் கூறப்படுகின்றன. எனவே பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.

சந்தம்: இப்பாடல் சிந்துப் பாவகையைச் சார்ந்தது. எதுகை, மோனையுடன் கூடிய இனிய சந்தம் பயின்று வந்துள்ளது.

சுவை: மின்னல். இடி, காற்று, மழை இவற்றுடன் வெள்ளப் பெருக்கு. ஆனால் பாதிப்பு எதுவும் இல்லை. நாட்டு வளத்திற்காக நல்ல மழை. எனவே உவகைச் சுவை அமைந்துள்ளது.

தலைப்பு: 'கார்கால அடை மழை' என்பதே இப்பாடலுக்குப் பொருத்தமான தலைப்பு

முடிவுரை: கவி பாரதி பாபுனையும் பாங்கில் எளிமையும், இனிமையும், சொற்சிலம்பமும்,
சந்தமும், சொல்லுக்கும் பொருளுக்கும் பந்தமும் காணப்படும். எதுகை மோனை அவர்
எழுத்தில் தெரித்திடும். அணிநயமோ அழகு நயமாய்க் காணப்படும். கருத்துத் தொய்வின்றிக் கவிதை சென்றிடும்.
இத்துணை சிறப்புக்களும் மழை பற்றிய பாடலில் இடம்பெற்றுள்ளன.

**************    ************   *************

வினா உருவாக்கம் & விடைத்தயாரிப்பு

திருமதி.இரா. மனோன்மணி , 

முதுகலைத்தமிழாசிரியை , 

அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி , 

திண்டுக்கல்.

****************    ************    ********

Post a Comment

0 Comments