வகுப்பு - 11 , தமிழ்
இயல் 2 - கவிதைப்பேழை - ஐங்குறுநூறு
***************** ************ **********
வணக்கம் நண்பர்களே ! இன்றைய வகுப்பில் நாம் பார்க்க இருக்கும் பாடம் இயல் இரண்டில் கவிதைப்பேழையாக அமைந்துள்ள ஐங்குறுநூறு ஆகும்.
நம்முடைய பெரும்புலவர். திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தை முதலில் காட்சிப்பதிவில் காண்போம்.
நூல்வெளி
ஐந்து + குறுமை + நூறு - ஐங்குறுநூறு மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப்பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல். திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது. இந்து திணைகளைப் பாடிய புலவர்கள். குறிஞ்சித்திணை - கபிலர். முல்லைத்திணை - பேயனார், மருதத்திணை- ஓரம்போகியார், நெய்தல் திணை - அம்மூவனார், பாலைத்திணை - ஓதலாந்தையார். ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார் தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை.
பேயனார். சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.
நுழையும்முன்
இல்லறத்தில் அன்பும் அறனும் சிறக்க வேண்டித் தலைவன் பொன்னும் பொருளும் ஈட்ட வெளியூர் செல்வது பற்றிப் பல சங்கப் பாடல்கள் பேசுகின்றன. மக்கள் வாழ்வோடு இயைந்த மலர்கள், தலைவனின் வரவைத் தலைவிக்கு அறிவிக்கும் பாடலிது.
ஆடுகம் விரைந்தே
காயா கொன்றை நெய்தல் முல்லை
போதவிழ் தளவமொடு பிடவலர்ந்து கவினிப்
பூவணி கொண்டன்றால் புறவே
பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே
- பேயனார்
(சொன்ன காலத்துக்கும் முன்பே வந்தேன்
சொல்லாமல் சொல்லும் மலர்களைக் கண்டேன்)
அகன்ற கடைவிழி உடையவளே
காயா கொன்றை நெய்தல் முல்லை
செம்முல்லை பிடவமாய்க்
கொல்லைப் புறத்தில் கொட்டிக்கிடக்கும்
பேரழகுப் பூக்களின் பாடலைக்
கொண்டாடி மகிழ்வோம் விரைந்தோடி வா.
- பேயனார்
(கிழவன் பருவம் பாராட்டும் பத்து. 412 )
திணை - முல்லை
துறை - பருவங் (கார் காலம்) குறித்துப் பிரிந்த தலைமகன், அப்பருவத்திற்கு முன்னே வந்தமை தோன்ற தலைவிக்கு உரைத்தது.
சொல்லும் பொருளும்
காயா, கொன்றை, நெய்தல், -
முல்லை, தளவம், பிடவம்
- மழைக்காலமலர்கள்
போது - மொட்டு
அலர்ந்து - மலர்ந்து
கவினி - அழகுற
பாடலின் பொருள்
(பொருளீட்டுவதற்காக வெளியூர் சென்றான் தலைவன். அவன், தான் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற காலத்திற்கு முன்னரே வீட்டிற்குத் திரும்புகிறான். வருவதாகக் கூறிச் சென்ற மழைக்காலம் முடியும் முன்னே, வந்துவிட்டதனை உணர்த்த நினைக்கிறான்.]
"பெரிய அழகிய கண்களையுடையவளே! அழகிய மாலை நேரத்தில் முல்லை நிலத்தில் காயா, கொன்றை, நெய்தல், முல்லை, ஆகிய மலர்கள் , செம்முல்லை, பிடவம் பூத்திருக்கின்றன. அப்பூக்களைப் பார்த்து மகிழ்ந்து ஆட, 'விரைந்து வா'"(என்று தலைவன் தன் தலைவியை அழைக்கிறான்.)
இலக்கணக்குறிப்பு
ஆல் - அசைநிலை
கண்ணி - அண்மை விளிச்சொல்
ஆடுகம் - தன்மைப் பன்மை வினைமுற்று.
பகுபத உறுப்பிலக்கணம்
அலர்ந்து - அலர் + த் (ந்) + த் + உ
அலர் - பகுதி
த் - சந்தி, (ந் ஆனது விகாரம்)
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி.
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
1 Comments
Parithasan
ReplyDelete