11 ஆம் வகுப்பு - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 1 - மொழியின் சிறப்புகள் - வினாக்களும் விடைகளும் / 11th TAMIL - REFRESHER COURSE - ACTIVITY - 1

 


    வகுப்பு - 11 , பொதுத் தமிழ் 

      புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

                     2021 - 2022 

                செயல்பாடு - 1

   மொழியின் சிறப்புகள்

   (  வினாக்களும் விடைகளும் 

************     *************    **************

    வணக்கம் நண்பர்களே ! செப்டம்பர் 1 முதல் நாம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம். 

     இங்கே , முதல்   செயல்பாடாக உள்ள   மொழியின் சிறப்புகள்  முழுமையும் வழங்கப் பட்டுள்ளது. பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடும் , மதிப்பீட்டுச் செயல்பாட்டின் வினாக்களுக்கு விடையும் விரிவாக வழங்கப் பட்டுள்ளது. நன்றி.


1 ) மொழியின் சிறப்புகள்

கற்றல் விளைவுகள்

* தமிழ் மொழியின் தொன்மை பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளுதல்.

* மொழியின் சிறப்புகளையும் பெருமைகளையும் சான்றாதாரங்களுடன் புரிந்து கொள்ளுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல்:

        மாணவர்களே! நம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் கருவி என்ன? என்றவினாவினை எழுப்பி 'மொழி' என்ற பதிலைப் பெற்று மொழியின் தேவையைத் தெளிவுபடுத்துதல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு :1

     உலக மொழிகளுள் தலை சிறந்ததாகவும், செம்மை நிறைந்ததாகவும் விளங்கும் மொழி தமிழ்மொழி தொல்காப்பியத்துக்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் தமிழ்நாட்டின் எல்லையை,

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறு நல்லு லகத்து"

என்று குறிப்பிடுகிறார். இலெமூரியாப் பகுதியில் வாழ்ந்த தமிழர்தம் உலக நாகரிகத்திற்கு வித்திட்டனர் என்பது ஜெர்மானியக் கவிஞர் ஹெக்கல் அவர்களின் கூற்று. சிந்து சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் தமிழ் முத்திரைகள் காணப்படுகின்றன என ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார். புறப்பொருள் வெண்பாமாலை பாடிய ஐயனாரிதனார்,

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

வாளொடு முன்தோன்றி மூத்த குடி தமிழ்க்குடி"

என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

     தமிழில் இருந்தே பிற மொழிகள் பிறந்தன என்ற கருத்தை உணர்த்தும் விதமாக பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை,

"கன்னடமும் களிதெலுங்கும்

கவின் மலையாளமும் துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே

ஒன்றுபல ஆயிடினும்"

          என்று புகழ்ந்து பாடுகிறார். உலக மொழிகளில் பழமையானவை என்று கிரேக்கம், இலத்தீன், வடமொழி, தமிழ் ஆகியவற்றைக் கூறுவது மரபு. பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார் "உலக இலக்கியம்" என்ற நூலில் கிரேக்க இலக்கியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது என்று கூறுகின்றார்.

செயல்பாடு : 2

     தமிழ் மொழி இயல் இசை நாடகம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது. அதில் இயல் தமிழ் என்பது இருவகை வழக்கிலும் உள்ள செய்யுளும் வசனமும் அடங்கிய நூல்களின் தொகுதி. இயல்பாக எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழை இயல் என்கிறோம்.

            இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படுவது. பண்ணோடு கலந்தும் தாளத்தோடு கூடியும் இசைக்கப்படுவது. தமிழிசை ஏழு வகைப்படும். அவை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,
விளரி, தாரம் என்பவையாகும். இந்த ஏழு இசையிலிருந்து பிறப்பவையே பண். இப்பண்களால் ஆகிய பாடல்கள் கீர்த்தனங்கள், வரிப்பாட்டு, சிந்து, ஆனந்தக் களிப்பு, கும்மி, தெம்மாங்கு முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது.

                இயற்றமிழும், இசைத்தமிழும் கலக்க நாடகத்தமிழ் பிறக்கும். நாடகம் என்ற சொல்லாட்சி 'நாடக வழக்கினும்' எனத் தொல்காப்பியத்திலும்,

'நாடக மகளி ராடுகளைத் தெடுத்த
வீசிவீங் கின்னியங் கடுப்ப"

என்று பெரும்பாணாற்றுப் படையிலும்,

" நாடக நன்னூல் நன்கு கடைப்பிடித்து " 

என்று சிலப்பதிகாரத்திலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றிலும் தன்னிகரற்ற படைப்புகளும், வாழ்வியல் நெறிகளும் ஒருங்கிணைந்த மொழியாக தமிழ்மொழி
விளங்குகின்றது.

செயல்பாடு :3

      சங்க இலக்கியங்களைப் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று அழைப்பதோடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்றும் அழைப்பர். அகம், புறம் என்ற வாழ்வியலை மையப்படுத்திய கருத்துக்களின்
தொகுப்பாகும்.

               வாழ்வை நெறிப்படுத்தும் அற இலக்கியங்களைக் கொண்டதாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அமைகின்றன. மேலும் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், இடைக்கால புலவர்களின்
படைப்புகள், கவிதை, புதினம், சிறுகதை என்ற பன்முக படைப்புகள் சொல்லில் அடங்காதவை.

      திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், பாரதியார், மறைமலை அடிகள், நாமக்கல் கவிஞர், சுரதா, திரு.வி.க., வீரமாமுனிவர் போன்ற தமிழ்ச் சான்றோர்களின் பெருமையை உலகம் நன்கு அறியும்.

             கால மாற்றத்திற்கு ஏற்ப 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக' விளங்குகின்ற தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும்  போற்றப்படுகின்றது.

மாணவர் செயல்பாடு

*  மாணவர்களிடம் தமிழ் இலக்கியங்கள் சிலவற்றின் பெயர்களைக் கூறி இலக்கியத்தை எழுதியவர் யார் எனக் கேட்டு அறிதல்.

* மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து நூல் பெயரை ஒரு குழுவும் ஆசிரியர் பெயரை மறு குழுவும் கூறுமாறு செய்தல்.

****************    **********    **************

                            மதிப்பீடு

1. முத்தமிழ் தொகைச்சொல்லை விளக்குக.

            முத்தமிழ்  - மூன்று + தமிழ் 

* இயற்றமிழ்

* இசைத்தமிழ் 

* நாடகத்தமிழ் 

இயற்றமிழ் :  இயல்பாக எழுதப்படுவதும் , பேசப்படுவதுமாகிய தமிழை இயல் என்கிறோம்.

சான்று :  இருவகை வழக்கிலும் உள்ள செய்யுளும் , வசனமும் அடங்கிய நூல்களின் தொகுதி.

இசைத்தமிழ் : பண்ணோடு கலந்தும்  , தாளத்தோடு கூடியும் இசைக்கப்படுவது  இசைத்தமிழ் ஆகும்.

சான்று :

              பண்களால் ஆகிய பாடல்கள் கீர்த்தனங்கள் , வரிப்பாட்டு , சிந்து  , ஆனந்தக் களிப்பு , கும்மி , தெம்மாங்கு .

நாடகத் தமிழ்

                 இயற்றமிழும் , இசைத்தமிழும் கலக்க நாடகத் தமிழ் பிறக்கும்.

சான்று :  மனோன்மணியம் 



2. பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?

     எட்டுத்தொகை , பத்துப்பாட்டு நூல்களை பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர்.

எட்டுத்தொகை நூல்கள் :

1 ) நற்றிணை 

2 ) குறுந்தொகை 

3 ) ஐங்குறுநூறு 

4 ) பதிற்றுப்பத்து 

5 ) பரிபாடல் 

6 ) கலித்தொகை 

7 ) அகநானூறு 

8 ) புறநானூறு

பத்துப்பாட்டு 

1 ) திருமுருகாற்றுப்படை 

2 ) பொருநராற்றுப்படை 

3 ) சிறுபாணாற்றுப்படை

4 ) பெரும்பாணாற்றுப்படை

5 ) முல்லைப்பாட்டு 

6 ) மதுரைக்காஞ்சி 

7 ) நெடுநல்வாடை 

8 ) குறிஞ்சிப்பபாட்டு

9 ) பட்டினப்பாலை 

10) மலைபடுகடாம்


3. ஐம்பெருங்காப்பியங்களைக் கூறுக.

1 ) சிலப்பதிகாரம் 

2 ) மணிமேகலை 

3 ) குண்டலகேசி 

4 ) வளையாபதி 

5 ) சீவகசிந்தாமணி 


4. பாரதியின் படைப்புகளைப் பட்டியலிடுக.

* பாஞ்சாலி சபதம் 

* பாப்பா பாட்டு 

* கண்ணன் பாட்டு 

* குயில் பாட்டு மற்றும் பல.

***************      ************   ************




Post a Comment

0 Comments