ஏழாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - இயல் 1 - கவிதைப்பேழை - ஒன்றல்ல இரண்டல்ல - காட்சிப்பதிவு விளக்கம் / 7 TAMIL - TERM 1 - EYAL 1 - ONERALLA IRANDALLA

 

                 வகுப்பு - 7 , தமிழ் 

முதல் பருவம் - இயல் 1 - கவிதைப்பேழை

ஒன்றல்ல இரண்டல்ல 

                       - உடுமலை நாராயணகவி


**************     ***************   ***********

                வணக்கம் நண்பர்களே ! நாம் நேற்றைய வகுப்பில் நாமக்கல் கவிஞர் அவர்கள் இயற்றிய எங்கள் தமிழ் என்ற பாடலைக் கண்டோம். இன்று உடுமலை நாராயணகவி அவர்கள் இயற்றிய அற்புதமான இசைப்பாடல் ஒன்றல்ல இரண்டல்ல என்ற பாடலைக் காண்போம்.

                 முதலில் பாடல் குறித்த விளக்கத்தை நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவில் கண்டு மகிழ்வோம்.



பாடலுக்கான விளக்கம் மிக எளிமையாகப் புரிந்ததா ? இப்போது பாடலை இயற்றிய உடுமலை நாராயணகவி அவர்களைப் பற்றிய செய்தியைக் காண்போம்.

நூல்வெளி 

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி. இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர். இவரது பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது

நுழையும்முன் 

           தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றிப் பொருள்வளமும் அருள் வளமும் நிறைந்தது. அதேபோல தமிழ் மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது. தமிழக மன்னர்களும் , வள்ளல்களும் கொடைத்திறன் மிக்கவர்களாக விளங்கினர். இக்கருத்துகளை விளக்கும் பாடலை அறிவோம்.

பாடல் 

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல

ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் 

                       ( ஒன்றல்ல இரண்டல்ல தம்பி )

தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும்

செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம் 

                         ( ஒன்றல்ல இரண்டல்ல தம்பி ) 

பகைவென்ற திறம்பாடும் பரணிவகை - செழும்

பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை - வான்

புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் - செம்

பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம் 

                            ( ஒன்றல்ல இரண்டல்ல தம்பி )

முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி - வான்

முகிலும் புகழ்படைத்த உபகாரி - கவிச்

சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி - இந்த 

வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு

                      ( ஒன்றல்ல இரண்டல்ல தம்பி )

சொல்லும் பொருளும் 

ஒப்புமை - இணை 

அற்புதம்  - வியப்பு 

முகில்      - மேகம்

உபகாரி   - வள்ளல்

பாடலின் பொருள்

தமிழ் நாட்டின் பெருமைகளைக் கூறினால் அவை ஒன்றல்ல இரண்டல்ல பலவாகும். அவை வேறு எவற்றோடும் இணை சொல்ல முடியாத விந்தைகளாகும்.இங்கு வீசும் தென்றலில் தேன் மணம்  கமழும். சுவைமிகு கனிகளும் பென் போன்ற தானியக் கதிர்களும் விளையும் தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

                  பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். அத்தோடு இசைப்பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான்புகழ் கொண்ட திருக்குறளும் அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்

                     முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி . புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள்போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும்.

****************    ************  **************


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments