ஆறாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - இயல் 1 - கவிதைப்பேழை - இன்பத்தமிழ் / 6 TAMIL - TERM 1 - INBATHTAMIL

 

                      வகுப்பு - 6 , தமிழ் 

இயல் 1 - இன்பத் தமிழ் - பாரதிதாசன்

*************    ************    ************

              வணக்கம் நண்பர்களே ! இன்றைய வகுப்பில் நாம் ஆறாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் முதல் பருவத்தில் இயல் ஒன்றில் கவிதைப் பேழையாக அமைந்துள்ள இன்பத் தமிழ் பாடலைக் காண்போம்.

                 பாவேந்தர் பாரதிதாசன் பற்றியும் , பாடலுக்கான விளக்கத்தையும் நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவில் கண்டு மகிழ்வோமா ?




             இப்பாடலை இயற்றிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைப் பற்றிய செய்திகளைக் காண்போம்.

நூல் வெளி

                 பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவரைப் பாவேந்தர் என்றும் போற்றுவர்.

நுழையும்முன்

                  நமது தாய்மொழியாகிய தமிழைத்  தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. பாரதிதாசன் தமிழைப் பலவிதங்களில் போற்றுகிறார். கண்ணே மணியே என்று குழந்தையைக் கொஞ்சுவது உண்டு. அது போல் அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்வதைக் காண்போம்.

                            பாடல் 

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! *

தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!*

தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! "

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

                                                  பாரதிதாசன்

சொல்லும் பொருளும்

நிருமித்த - உருவாக்கிய

சமூகம்        -  மக்கள் குழு

விளைவு - வளர்ச்சி

அசதி  -    சோர்வு


பாடலின் பொருள்

                    அமுதம் மிக இனிமையானது. அது போலவே தமிழும் இனிமையானது. அத்தகைய இன்பம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது.

                 தமிழுக்கு நிலவென்றும் பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.

                தமிழுக்கு மணம் என்றும் பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும்.

                   தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.

                   தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது.

                  தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.

****************     ************   ***********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments