மரம்
🌳இளமை தரும் பசுமை ஒரு வரம்🌳
🌴தோற்றுவாய்:-
ஆதி முதல் அந்தம் வரை இருக்கும் பசுமையான மரம்,மனித இனங்கள் மட்டுமல்லாது,பிற உயிரினங்களும் வாழ வகை செய்கிறது.அத்தகைய மரத்தை இளமையில் நட்டால்,முதுமை வரையிலும் கவலையின்றி வாழலாம்.அப்படிப்பட்ட இளமை தருகின்ற பசுமையான மரத்தைப் பற்றி எடுத்துரைப்பதாய் இக்கட்டுரை அமைந்துள்ளது.
🌴மரம்:-
மரம் நம் வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒன்று.புல்,செடி,கொடி,மரம் எனப் பல அவதாரங்களைப் பெற்றதாய் உள்ளது.ஓரறிவு உயிராக,மண்ணில் வேரூன்றிய ஒரு உயிரினம் மரம். அனைத்து உயிரினங்களின் வாழ்விலும் பௌர்ணமி நிலவாய் ஒளிவீசும் ஓர் உயிரினம்.'மரம் இன்றேல் நாம் இல்லை' என்னும் நிலையில் உள்ளோம்.நம் அன்றாட தேவைகளிலிருந்து ஆடம்பரத்தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு கருவி.மரத்தால் நாம் மட்டுமின்றி நம் சுற்றத்தாரும் நோயின்றி வாழ வகை செய்கின்றது.
🌴மரத்தின் பயன்கள்:-
🌳கார்பன் டை ஆக்ஸைடை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுவது மரம்.
🌳காக்கை முதல் குருவி வரை இருக்கும் அனைத்து பறவைகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது.
🌳மனிதனுக்கும்,தன்னைத் தேடி வருவோருக்கும் நிழல் தருகிறது.
🌳பல மரச்சாமான்கள் செய்ய பயன்படுகிறது.
🌳அடுப்பெரிக்கவும் பயன்படுகிறது.
🌳பூ,காய்,பழம்,இலை,தண்டு,வேர் என ஒவ்வொரு உறுப்பும் பயன்தருவது மரம்.
🌳மழை வளம் குன்றினால் மண்ணரிப்பை ஏற்படுத்தும்.அத்தகைய மண்ணரிப்பைத் தடுத்து மழைவளத்தை பெருக்கும் மரத்தை நாம் வளர்ப்போம்.
🌳மிருகங்கள் இருக்கும் காடுகள்,மிருகங்களின் இருப்பிடமாகவும்,நிழலாகவும் அமைகின்றது.
🌳ஓலைச்சுவடிகளும்,காகிதங்களும் செய்ய மரம் பயன்படுகிறது.
🌴இளமை தரும் பசுமை ஒரு வரம்:-
இளையோர் முதல் முதியோர் வரை மாதம் ஒரு மரம் வளர்த்தால் நன்று.பசுமையான மரத்தை நாம் வளர்த்தால்,நம் வாழ்வு பசுமையானதாக மாறும்.
'தென்னைய வச்சவன் தின்னுட்டு சாவான் பனைய வச்சவன் பாத்துட்டு சாவான்' என்ற பழமொழியின் கருத்தாக,தென்னை மரத்தை நட்டவன் கண்டிப்பாக தென்னையின் காயை தின்னுட்டுதான் சாவான் என்றும்,பனை மரத்தை வைத்தவன் தன் வாழ்நாளிலே,அதனை தின்னாமலே சாவான் என்றும் கூறுவர்.
இதில் பனைமரத்தைக் கூட இளமை காலங்களில் நட்டால் அதனையும் நம் வாழ்நாளில் உண்ணும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.அனைவரும் மரம் வளர்க்கலாம்.அதில் குறிப்பாக,இளையோர் மரம் வளர்ப்பதால்,எதிர்காலத்தில் நிலச்சரிவையும்,பூகம்பத்தையும்,எரிமலை வெடிப்பையும் தடுக்க ஒரு கருவியாகிறது.
🌴பசுமை ஒரு வரம்:- 🌳ஆதிகாலத்தில் இலைதழைகளை உடுத்திய நம் முன்னோர்,நாகரீக வளர்ச்சி காரணமாக நூலாடையை அணியத் தொடங்கினர்.ஆகவே மரம் ஒரு வரமே!
🌳குடிசை முதல் அடுக்குமாடி கட்டிடம் வரை பாரபட்சமின்றி மழையைத் தரும் பசுமையான மரம் ஒரு வரமே!
🌳மனிதன் முதல் கடவுள் குடியிருக்கும் கோவில் வரை மரச்சாமான்கள் இருக்கும் மரம் ஒரு வரமே!
🌳அருந்தும் தேநீர் முதல் உண்ணும் உணவு வரை நமக்கு பயன்படும் பசுமையான மரம் ஒரு வரமே!
🌳இருக்க இடமின்றி இருப்போருக்கும் ஆதரவற்றவருக்கும் தங்க இடம் கொடுப்பது மரமே!அது நமக்கு வரமே!
🌳மரத்தின் கூழிலிருந்து காகிதம்,ரப்பர் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.அத்தகைய பசுமையான மரம் ஒரு வரமே!
🌳பொதுவாக மலைபாங்கான இடத்தில்தான் மழை அதிகம் பெய்யும்.காரணம் அங்கு மரங்கள் அதிகம் இருப்பதால்.அத்தகைய பசுமையான மரம் ஒரு வரமே!
🌳நீரை மட்டும் பெற்று கொண்டு பல பயன்களை தரும் மரம் ஒரு வரமே!
🌳இலவம்மரத்திலிருந்து பஞ்சையெடுத்து தலையணை,பொம்மை போன்ற பொருட்கள் செய்கின்றனர்.ஆகவே மரம் ஒரு வரமே!
🌳'பசு மரத்தாணி போல' என்ற பழமொழி,நம் மனதில் பதியும்வண்ணம் உள்ளது.ஆகவே மரம் ஒரு வரமே!
🌳காற்றை தூய்மைப்படுத்துவது,மண்ணில் வேரூன்றிய மரமே!அது நமக்கு வரமே!
🌳பல பசுமைப்புரட்சிகளை கொண்ட மரம் நமக்கு ஒரு வரமே!
நாம் செய்ய வேண்டியவை:-
🌳பல பயன்களை அள்ளித் தரும் மரத்தை நாம் வேலி அமைத்துக் காக்க வேண்டும்.மாறாக,'வேலியே பயிரை மேய்ந்தார் போல' அதனை வெட்டுதல் கூடாது.
🌳வயல்வெளிகளில் கட்டிடம் கட்டுதல் கூடாது. அவ்வாறு கட்டிடம் கட்டினால்,வயல்வெளிகளின் எண்ணிக்கை குறைவதோடு,விளைச்சலும் இல்லாமல் போய்விடும்.
🌳மரச்சாமான்களையும்,ஓலைச்சுவடிகளையும் கரையான் உண்ணாமல் பாதுகாக்க வேண்டும்.
🌳மரத்தால் உண்டாகும் காகிதத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தி,அது வீணாகாமல் தடுக்க வேண்டும். 🌴நிறைவுரை:-
'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?'என்ற பழமொழியில் இளமையின் உன்னத தன்மை விளக்கப்படுகிறது.
ஐந்து வயதில் மரம் நட பழக்கினால்தான்,அது முதுமை வரையிலும் பயன்படும்.
'சேற்றில் கால் வைத்தால் தான்,நாம் சோற்றில் கை வைக்க முடியும்' எனும் பழமொழி உழவின் சிறப்பை எடுத்தியம்புகிறது.
'யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்'என்ற பழமொழிக்கேற்ப,மரம் இருந்தாலும் ஆயிரம் பொன்னாகவும்,அது இறந்தாலும் ஆயிரம் பொன்னாகவும் திகழ்கிறது.
நம் ஒவ்வொரு பிறந்த நாளிலிலும் குறைந்தது பத்து மரக்கன்றுகளையாவது நட்டு,தேவையான தண்ணீர் ஊற்றி;உரமிட்டு;காவல் காத்து;வேலி அமைத்து வளர்க்க,இந்த நன்னாளில் உறுதி பூணுவோமாக!
'தாழ்வற்ற சமுதாயம் உருவாக்குவோம்-மண்ணில் மரம் வளர்க்க தடுப்போரை சருகாக்குவோம்.
வாழ்கின்ற வரையிங்கே அஞ்சாமலே-நம் வருங்கால ம் செழிப்பாக்க போராடுவோம்'
கட்டுரை - -பெ.தேவிகா
எம்.ஏ;எம்.ஃபில்;பி.எட்;டி.ஜி.டி., மதுரை
0 Comments