தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள் - தம் பெயரைத் தமிழில் மாற்றி தமிழகத்திற்கு முன்னோடியாக இருந்தவரின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வுகள்.

 

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை 

மறைமலையடிகள் 

பிறந்தநாள் சிறப்புப் பதிவு ( 15 - 07 - 2021 )




        மறைமலை அடிகள் சூலை. 15. 1876 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தில், சொக்கநாத பிள்ளைக்கும்  சின்னமையாருக்கும்  மகனாகப் பிறந்தார். பல்லாண்டு பிள்ளைப்பேறு  இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரை  வேண்டி நோன்பிருந்து பிள்ளைப் பேறு  பெற்றதால் தம் பிள்ளைக்கு  வேதாசலம் என்று பெயரிட்டனர்.

கல்வி

        மறைமலை அடிகள் , நாகையில் வெசுலியன்  தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த  உயர்நிலைப் பள்ளியில் நான்காம்  படிவம் வரை படித்தார். பின்பு நாராயணசாமிப்  பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். "சைவ சித்தாந்த  சண்ட மாருதம் " என்று புகழ் பெற்ற  சோமசுந்தர நாயக்கர் அவர்களிடம் சைவ சித்தாந்தம்  கற்றார்.

பணி

    சென்னையில் கிறித்துவக்  கல்லூரியில்  வீ. கோ . சூரிய நாராயண  சாஸ்திரியாருடன்  தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1905 இல்  சைவ சித்தாந்த  மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து , அதன் மாநாட்டுத்  தலைமையும் ஏற்றார். பின் பல ஆண்டுகள் பேராசிரியராக  பணியாற்றினார் 

தனித்தமிழ்  இயக்கம்.

       தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல் , தனித்தமிழில்  எழுதவும், பேசவும் செய்தல் வேண்டும்  . பிறமொழிக் கலப்பது தமிழ் மொழிக்கு  பெருந்தீமையை  விளைவிக்கும் என்பது இயக்கத்தின் கருத்தாகும்.  தமிழ்மொழி இயற்கையாகவே இயங்கக் கூடியது, அதற்கு  பிறமொழிகளின் துணை தேவையில்லை என்பது இக்கொள்கையின்  அடிப்படையாகும். 

        சமஸ்கிருதம்,மணிப்பிரவாளம்  போன்ற மொழிகளின் சொற்கள் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப் பட்ட சூழ்நிலையில்,  தமிழ் மொழியை முன்நிறுத்த  தொடங்கப்பட்ட இயக்கமே  தனித்தமிழ் இயக்கமாகும். 

        இவ்வியக்கத்தில்  தேவநேயப் பாவாணர்,மறைமலை அடிகள்,பாரதிதாசன் , பெருஞ்சித்திரனார், பரிதிமாற் கலைஞர்,கி. ஆ . பெ . விசுவநாதம் ஆகியவர்கள்  குறிப்பிடத்தக்கவர்கள்.

தனித்தமிழ் தோன்றக்  காரணம்

     அடிகளார் சைவ சமயத்தில் ஆழ்ந்த  ஈடுபாடு  கொண்டவர்.முறையான வழிபாடும்  சிவனின் கொள்கையைப் பரப்பும் பணியும் அவருடையதாக இருந்தன. அதுசமயம் தம் மகளார்  நீலாம்பிகையார் உடன் உரையாடிக் கொண்டிருந்தார். நீலாம்பிகையார்  திருவருட்பாவிலிந்து ஒரு பாடலை இனிமையாகப் பாடினார். 

     மனமுருகச் செய்யும் இனிய  பாடலின் இடையே "தேகம்" என்னும் ஒரு வடமொழிச் சொல் வருவதையறிந்த நீலாம்பிகை, இப்பாட்டில்  எல்லாச் சொற்களும் தமிழாய் இருக்க "தேகம்"  என்னும் ஒரு வடசொல்  மட்டும் இருக்கிறதே அவற்றையும் மாற்றினால் நன்றாக இருக்குமே ,என்று அவர்கள் உரையாடல் இருந்தது."தேகம்"  என்பதற்கு மாற்றாக "யாக்கை " என்னும் தமிழ்ச் சொல் இருந்தால் இனிமையாக இருக்கும் என்று அடிகள் கூறினார். இதையே இனிமேல்  நாம் ஏன் வடசொற்களை  நீக்கி முற்றிலும் தனித்தமிழ்ப்  படுத்தக்கூடாது என சிந்தித்ததன் விளைவே 1916 -ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்கப் பட்டது.

மறைமலை அடிகள் செய்த  மாற்றங்கள்.

     அப்போது அவர் பெயரும், அவர் பிள்ளைகளின் பெயரும் வடமொழியில் அமைந்திருந்தன . அவற்றை மாற்றும் செயலை முதலில் செய்தார்.  வேதாசலம்,துறவறம் மேற்கொண்டு வேதாசல சுவாமிகள் என்று அழைக்கப் பட்டார்.அதை மறைமலையடிகள் என்று மாற்றினார். அவருடைய பிள்ளைகள் பெயர்களும்  மகள் நீலாவால் மாற்றப் பட்டன.

திருஞான சம்மந்தம்--- அறிவுத் தொடர்பு.

மாணிக்க வாசகம் -- மணிமொழி 

சுந்தர மூர்த்தி -- அழகுரு 

திரிபுர சுந்தரி -- முந்நகரழகி 

         எனத்  தமிழாக்கினார். 

          அவரின் முயற்சிகள் தொடர்ந்து பல மாற்றங்களை நிகழ்த்திய.ஆரியத்தை நீக்கிய தமிழ்த் திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை,தமிழர் மாதம் தமிழரின்  நான்மறை முதலிய கோட்பாடுகள் முதன் முறையாக தமிழ் நிலத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டன.  அவற்றைத் தம் குடும்பத்தில் பயன்படுத்தி எடுத்துக்காட்டாக  வாழ்ந்தார். இவ்வாறு தமிழ்மொழியை செழுமைப் படுத்தியும்,பெருமைப்படுத்தியும் வளம்பெறச் செய்த அவர்பணியைப் போற்றுவோம் !

***************    ************    *************






Post a Comment

0 Comments