பக்ரித் பண்டிகை - ( தியாகத் திருநாள். )
( இஸ்லாம் சமயப் பண்டிகை )
சிறப்புக்கவிதை & கட்டுரை
************ ************* ***************
ஈகைத் திருநாள் வாழ்த்து
ஈகைநாளில் எல்லோரும் இணைந்திடவே,
இன்பமது பெற்றிடுவோம் இறையருளால்!
பகையதனைப் போக்கிடவும் பாங்குடனே,
பற்றில்லா பாசமுடன் பார்முழுதும்!
நகையுடனே நன்மக்கள் நன்மையினால்,
நவிலுண்மை நலம்பெறவே நயந்துரைத்து!
ஈகையதை வறியோர்க்கும் ஈந்தளித்து,
இன்னலதை நீக்கிடுவோம் இத்தினத்தில்!
தொகைதொகையாய்க் கூடியுமே தொழுதிடுவோம்!
தொடர்பணியாய் ஈகைதனை செய்திடுவோம்!
இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.
கவிஞர்.பொன்.ஒளி நிலா- ஈரோடு
**************** *********** *************
" அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு."
என்னும் வள்ளுவரின் வாக்கினில் உலகம் கண்ட அன்பு வரலாறுகள் எண்ணிலடங்கா. மிகுதியான அன்பின் கடைசி நிலையே தியாகம். அன்புகொண்ட மனம் கொடுத்து மகிழ்கிறது. தாம் அன்பு கொண்ட இறைவனுக்கோ, தலைவனுக்கோ தம் உயிரையே கொடுக்கத் துணிந்த அந்த உன்னதச் செயலுக்கு இறைவனே இரங்குவது பல மதங்களால் அறியப்படும் உண்மை.
அவ்வாறு அறியப்பட்ட ஒரு இறைத்தூதரின் உள்ளார்ந்த அன்புக் கதை இது.
தியாகத் திருநாள் - (ஈத் - அல் - அழ்ஹா)
அல்லது ஹஜ் பெருநாள்(அ) பக்ரித் பண்டிகை உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகை ஆகும்.
இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாள்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான " துல் ஹஜ் " மாதம் - 10 -ம் நாள் இவ்விழா கொண்டாடப் படுகிறது.
இறைவனின் தூதர்களில் முதன்மையான வராக, இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர் " இப்ராஹீம்".இவர் சுமார் - 4000 - ம் ஆண்டுகளுக்கு முன்பு , ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.இவருக்கு நீண்ட காலமாக குழந்தைப் பாக்கியம் இல்லை.இறுதியாக அவரின் இரண்டாம் மனைவி "ஹாஜரா" விற்கு இறைவன் அருளால் ஒரு குழந்தை பிறந்தது.அக்குழந்தைக்கு " இஸ்மாயில் " எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். ( இந்தக் குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அரேபியர்கள்.)
இறைவன் கட்டளை.
இஸ்மாயில் பால்ய பருவத்தை அடைந்த பொழுது அவரைத் தனக்குப் பலியிடுமாறு இறைவன் , இப்ராஹிம் அவர்களுக்கு கனவில் தோன்றி கட்டளையிட்டார்.
இக்கட்டளையை இஸ்மாயிலிடம் கூறிய இப்ராஹிம் , இஸ்மாயில் பெரு விருப்பத்துடன் ஏற்றார். பின் தந்தை பலியிடத் துணிந்தார்.அப்போது " ஜிப்ரயீல் " எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதைத் தடுத்தார். மேலும் அவ்வானவர் ஒரு ஆட்டை இறக்கி வைத்து இஸ்மாயிலுக்குப் பதில் அந்த ஆட்டை பலியிடுமாறு கட்டளையிட்டார்.
தியாகத் திருநாள்.
இந்தத் தியாகச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே தியாகத் திருநாள் கொண்டாடப் படுகிறது. இப்ரஹிமின் தியாகத்தை நினைவுக் கூர்ந்து போற்றும் வகையில் இவ்விழாவை சிறப்புச் செய்கின்றனர்.
இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளைப் பலியிட்டு இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
ஹஜ் பயணம்
ஹஜ் செய்வது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். இவற்றில் வசதியுள்ள முஸ்லீம்கள் " ஹஜ்" செய்வது என்பது இஸ்லாத்தின் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும்.
புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இந்தப் புனிதப் பயணக் கடமைகளில் கடைசியானது இறைவனுக்குப் பலியிடுதலாகும் .
பலியிடலும், கருணையும்.
பலியிடுதல் நிகழ்வு இப்பண்டிகையின் ஒரு சிறப்பு அம்சம் ஆகும். இந்த நாளில் இஸ்லாமிய ர்கள் தங்கள் வீடுகளில் ஆடு , மாடு , ஒட்டகம் போன்ற வற்றை இறைவன் பெயரால் பலியிடுகின்றனர். அவ்வாறாக பலியிடப்பட்ட இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து , ஒரு பங்கை அருகில் உள்ள வீடுகளுக்கும்,மற்றும் நண்பர் களுக்கும், மற்றொருப் பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து மகிழ்வர். மூன்றாவது பங்கைத் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வர்.
இவ்வாறு பலியிடப்படும் விலங்குகள் , ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது நிரம்பியதாகவும் இருக்குமாறு பார்த்து பயன்படுத்துகின்றனர் . பலியிடுவதிலும் கருணை கொள்வது சிறந்த கொள்கையைப் பறைசாற்றுகின்றன.
ஒவ்வொரு மனிதனும் அவன் சார்ந்த மதத்திலும், இறைக் கோட்பாட்டிலும் மிகுந்த பற்றும் , நம்பிக்கையும் கொண்டு விளங்குகிறான். இந்திய இறையாண்மையின் படி அனைத்து மதங்களும் போற்றப் படுகின்றன. இஸ்லாத்தின் வழிபாட்டையும், நம்பிக்கையையும் போற்றுவோம்!
இஸ்லாமிய சகோதர குடும்பங்களுக்கு பைந்தமிழ் வழியாக இனிய தியாகத் திருநாள் நல் வாழ்த்துகள்!
மதங்கள் போற்றுவோம் ! மனதில் அன்பை ஏற்றுவோம்.
🙏🙏 🙏🙏🙏 🙏🙏
*ஈகைத் திருநாள் வாழ்த்துகள்*
இறைச்சொல் கொண்டு இன்புற்றிருப்போம்.
மறையாண்மை மதித்து மாண்புற்றமைவோம்.
அருளாழியால் அகிலத்தை ஆள,
கு(க)றையின்றி கரையாய் அமைவோம்.
நற்சொல் காத்து நற்செயல் போற்றி நானிலம் சிறக்க நல்லோராய் வாழ்வோம்.
இரக்கத்தை அளவிடும்
*ஈகைத் திருநாளில்*
அன்பைப் பரப்பி
ஆசையை அளவிட்டு
இன்பச் செயலால்
ஈகைத் திறத்தால்
உள்ளம் மகிழ
ஊர் மகிழ
எல்லோரும் மகிழ
ஏடுகள் புகழ
ஐயறவு களைந்து
ஒப்புரவாகி
ஓதித் துதிப்போம்
ஒளிபெற்று வாழ்வோம்.
தொழுகையால் பலம் சேர்த்து வளம் சேர்ப்போம். தீநுண்மியைத் தீயிலிட்டு திகட்டத்திகட்ட வாழ்ந்து செழிப்போம்.🌹🌹
கவிஞர்.மா.உமா,கரூர்
************* *************** **********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
0 Comments