வகுப்பு - 9 - தமிழ்
இயல் 1 - கவிதைப்பேழை
தமிழோவியம் - ஈரோடு தமிழன்பன்
************** ************** ***********
வணக்கம் நண்பர்களே ! நாம் 10 , 11 , 12 ஆம் வகுப்பு தமிழ் பாடங்களுக்கு பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் மூலமாக காட்சிப்பதிவு செய்து எளிமையாகவும் , இனிமையாகவும் பதிவிட்டு வருகின்றோம். இன்று எங்கள் பள்ளி மாணவர்கள் சிலர் ஐயா 9 ஆம் வகுப்பு பாடங்களையும் பதிவிட்டால் எங்களுக்கும் மிக இனிமையாக இருக்குமே என்றார்கள். அதன்படி இன்று முதல் அவ்வப்போது ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியும் இணையத்தின் வழி நம் இதயத்தில் உலா வர உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன்.
கவிதைப்பேழை என்ற தலைப்பிலே ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்கள் எழுதிய தமிழோவியம் என்ற அற்புதமான இசைப்பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் கவிஞரைப் பற்றிய செய்திகளை நூல்வெளி பகுதியில் காண்போம்.
நூல்வெளி
ஈரோடு தமிழன்பன் எழுதிய 'தமிழோவியம்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது. இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார். ஹைக்கூ, சென்ரியு. விமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளார். இவரது 'வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 'தமிழன்பன் கவிதைகள்' தமிழக அரசின் பரிசுபெற்ற நூல். இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நுழையும்முன் என்ற பகுதியில் உள்ள செய்தியையும் காண்போம்.
நுழையும்முன்
என்றென்றும் நிலைபெற்ற தமிழே! தோற்றத்தில் தொன்மையும் நீதான்! தொழில்நுட்பத்தை ஏற்ற புதுமையும் நீதான்! அறியும் இலக்கணம் தந்ததும் நீதான்! அரிய இலக்கணம் கொண்டதும் நீதான்!காலந்தோறும் உன்னைப் புதுப்பித்துக் கொண்டு கணினித் தமிழாய் வலம் வருகிறாய்! ஆதிமுதல் எல்லாமுமாய் இலங்குகிற உன்னைத் தமிழோவியமாகக் கண்டு மகிழ்கிறோம்!
நண்பர்களே ! இப்போது பாடல் குறித்த விளக்கத்தை நம் பெரும்புலவரின் காட்சிப்பதிவில் காண்போம்.
இப்போது பாடலைக் காண்போமா ?
காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!
அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்
நிகரிலாக் காப்பியப் பூவனங்கள்- உன்
நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்!
- காலம் பிறக்கும் முன்....
ஏனிவ் விருட்டெனக் கேட்டுவரும் - நீதி
ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும்
மானிட மேன்மையைச் சாதித்திடக் - குறள்
மட்டுமே போதுமே ஓதி, நட....
- காலம் பிறக்கும் முன்...
எத்தனை எத்தனை சமயங்கள் - தமிழ்
ஏந்தி வளர்த்தது தாயெனவே
சித்தர் மரபிலே தீதறுக்கும் - புதுச்
சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே....
காலம் பிறக்கும் முன்....
விரலை மடக்கியவன் இசையில்லை - எழில்
வீணையில் என்று சொல்வதுபோல்
குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக்
கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!
- ஈரோடு தமிழன்பன்
************* ************** *************
இலக்கணக்குறிப்பு
எத்தனை எத்தனை
விட்டு விட்டு - அடுக்குத்தொடர்கள்
ஏந்தி - வினையெச்சம்
காலமும் - முற்றும்மை
பகுபத உறுப்பிலக்கணம்
வளர்ப்பாய் - வளர் + ப் + ப் + ஆய்
வளர் - பகுதி
ப் - சந்தி
ப் - எதிர்கால இடைநிலை
ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
************** ************* ***********
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments