வணக்கம் நண்பர்களே ! நாம் பத்தாம் வகுப்பில் முதல் இரண்டு இயல்கள் முழுமையும் பார்த்து முடித்திருக்கிறோம். இன்று மூன்றாவது இயலாக அற்புதமான இயல் அதாவது பண்பாடு - கூட்டாஞ்சோறு என்ற தலைப்பிலே அமைந்திருக்கிறது. சுவையான பாடம் இது. பண்பாடு என்னும் இந்த இயலைக் கற்பதால் என்னென்ன கற்றல் நோக்கங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும் என்பதை முதலில் காண்போமா ?
கற்றல் நோக்கங்கள்
# நம் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பை உணர்ந்து பெருமிதத்துடன் பின்பற்றுதல்.
# உணவு வகைகளும் உணவு சமைக்கும் முறைகளும் மொழியில் நயம்படச் சொல்லப்படும் முறைமையைப் படித்துச் சுவைத்து அது போல ஈர்ப்புடன் எழுதப்பழகுதல்.
# உடலை மட்டும் வளர்க்கும் உணவுகளைத் தவிர்த்தல் குறித்தும் உயிரை உணர்வை வளர்க்கும் உணவுகளைக் குறித்தும் செய்திகளை அறிந்து வெளிப்படுத்துதல்.
# சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறைகளை வட்டார இலக்கியங்களின் நடையில் புரிந்து படித்தல்.
# மொழிப் பயன்பாட்டில் தொகாநிலைத் தொடர்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.
விருந்து போற்றுதும்
மாணவர்களே ! விருந்து போற்றுதும் பாடத்திற்குள் நுழையும்முன் நாம் காண வேண்டியது என்ன தெரியுமா ?
நுழையும்முன்
முளிதயிர் பிசைந்த சோற்றை உருட்டி அனைவருக்கும் கையில் ஓர் உருண்டை கொடுத்து, உருண்டையின் நடுவில் வைத்த குழியில் புளிக்குழம்பு இட்டு உண்ணச் சொன்ன அன்னையின் அன்பில் தொடங்குகிறது அனைவருடனான பகிர்ந்துண்ணல். சிறு வயதில் மகனுடனோ மகளுடனோ வரும் நண்பர்களுக்கும் சேர்த்து அம்மா தரும் சிற்றுண்டியில் தொடங்குகிறது, தமிழரின் விருந்து போற்றுதல். தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் விருந்தாகிறது.
நண்பர்களே ! விருந்து போற்றுதும் பாடத்தை நம்முடைய பெரும்புலவர் திரு.மு.சன்னாசி அவர்களின் பதிவில் கண்டு அதன்பின் எழுத்து வடிவில் காண்போம்.
காட்சிப் பதிவைப் பார்த்ததும் பாடம் மிக எளிதாகப் புரிந்துவிட்டதல்லவா ? இனி பாடக்கருத்துகளை ஒவ்வொன்றாகக் காண்போம்.
தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களும் விருந்தினர் என்று பெயர். 'விருந்தே புதுமை ' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
அறவுணர்வும் தமிழர் மரபும்
திருவள்ளுவர் இல்லறவியலில் விருந்தோம்பலை வலியுறுத்த அதிகாரத்தையே' அமைத்திருக்கிறார்; இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்; முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை "மோப்பக் குழையும் அனிச்சம்" என்ற குறளில் எடுத்துரைக்கிறார். விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் கடமையாக இருந்தது.
தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை"
- சிலப்பதிகாரம், 16:72,73
என்று கண்ணகி வருந்துகிறாள்.
கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி
அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப்
போற்ற முடியாத நிலையை எண்ணியே
வருந்துவதாகக் குறிப்பிடுவதன் மூலம்
விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை இளங்கோவடிகள்
தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதை,
"உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே.......
புறநானூறு, 182
என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
குறிப்பிட்டுள்ளார்.
அல்லில் ஆயினும்
விருந்தோம்பல் என்பது பெண்களின்
சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு. இதை
"அல்லில் ஆயினும் விருந்து வரின்
உவக்கும்"
என்று நற்றிணை (142) குறிப்பிடுகிறது.
தெரியுமா?
ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்
பண்டைத் தமிழர்கள். வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும்போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்.
'காலின் ஏழடிப் பின் சென்று"
- பொருநராற்றுப்படை, 166
இன்மையிலும் விருந்தோம்பல்
வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர். தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து
விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி.
இதனை,
குரல் உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலள்
என்று புறநானூறு (333) காட்சிப்படுத்துகிறது.
நேற்று வந்த விருந்தினரைப்
பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால்
இரும்பினால் செய்த பழைய வாளை அடகு
வைத்தான் தலைவன்; இன்றும் விருந்தினர்
வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப்
பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி,
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்று இக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்....
- புறநானூறு, 316
என்ற பாடலடிகளில் இடம்பெறுகிறது.
இளையான்குடி மாறநாயனாரின்
வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க
அவரிடம் தானியமில்லை; எனவே, அன்று
விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து
வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம்
பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.
என்று அவர் கூறுவதிலிருந்து வள்ளல்களால் விருந்தினர் போற்றப்பட்டதை அறியமுடிகிறது.
உற்றாரோடுநின்றவிருந்து ...
சங்க காலத்திலிருந்தே அரசராயினும்
வறியோராயினும் விருந்தினர்களைப்
போற்றினர். கால மாற்றத்தில் புதியவர்களாகிய விருந்தினர்களை வீட்டுக்குள் அழைத்து உணவிடுவது குறைந்தது. விருந்து புரப்பது
குறைந்ததால் சத்திரங்கள் பெருகின. நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காகக் கட்டப்பட்டன.
புதியவர்களான விருந்தினர்களை
ஏற்பது குறைந்துவிட்ட காலத்தில், ஓரளவு
தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாக
ஏற்றனர். படிப்படியாக உற்றார் உறவினர்கள்,
நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.
விருந்தோம்பல் இன்றும்...
புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர் முன்னோர். இன்று வீட்டுக்குத் திண்ணை வைத்துக் கட்டுவதுமில்லை; அறிமுகமில்லாத
புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும்
இல்லை. இருப்பினும் திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில்
காணமுடிகிறது.
முன்னர்த் திருமணத்தை உறுதி செய்தல், திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள், புதுமனை புகுவிழா போன்றவற்றை இல்ல விழாக்களாகவே கொண்டாடினர். அப்போது மிகுதியான விருந்தினர்களை வரவேற்று உணவளித்து மகிழ்ந்தனர். அந்த இல்லவிழா
நாள்களில் அப்பகுதி வாழ் மக்களும்
வெளியூர் விருந்தினர்களுக்குத் தேவையான
உதவிகளைச் செய்தனர்.
காலப்போக்கில் வீட்டில் நடை பெற்ற விழாக்கள் திருமணக் கூடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டன. பண்பாட்டு
மாற்றமாக இன்று சில இடங்களில்
விருந்தினர்களை வரவேற்பது முதல் பந்தியில் உபசரித்து வழியனுப்பும்வரை 'திருமண ஏற்பாட்டாளர்'களே செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதைக் காணமுடிகிறது.
பண்டைத் தமிழர் இல்லங்களிலும்
உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு
செழித்திருந்தது. அந்த உயரிய தமிழ்ப்
பண்பாடு இன்றைய தமிழர்களிடம்
மேற்கூறிய முறைகளில் பின்பற்றப்படுகின்றது. காலந்தோறும் தமிழர்களின் அடையாளமாக
விளங்கும் உயர் பண்பான விருந்தோம்பலைப் போற்றிப் பெருமிதம் கொள்வோம்.
தெரிந்து தெளிவோம்
வாழை இலையில் விருந்து
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில்
விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர்.
தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது
ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள். உண்பவர் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும்
உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறுவர்.
எத்திசையும் புகழ் மணக்க .....
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்
சங்கம் 'வாழையிலை விருந்து விழா'வை
ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.
தமிழர்களின் பாரம்பரிய உணவு
வகைகளைக் கொண்டு வாழையிலையில்
விருந்து வைக்கின்றனர். முருங்கைக்காய்
சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம்,
வெண்டைக்காய்க் கூட்டு, தினைப் பாயசம்,
அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து
கொடுக்கின்றனர். அங்கு வாழும் தமிழர்கள்
பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுச்
சிறப்பிக்கின்றனர். தொடர்ந்து பல பண்பாட்டு நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.
*************** *************** **********
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
************** ************* ************
GREEN TAMIL - You Tube -6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம்உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
0 Comments