12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இயற்கை - கவிதைப்பேழை - நெடுநல்வாடை - நக்கீரர் - எழுத்து & காட்சிப்பதிவில் பாடமே படமாக !

 

                வகுப்பு - 12 , தமிழ் 

                இயல் - 2 , இயற்கை 

                     கவிதைப்பேழை 

          நெடுநல்வாடை - நக்கீரர் 






*************   **************   ************

                         வணக்கம் நண்பர்களே ! 12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 ல் உள்ள நெடுநல்வாடை பாடலை இன்றைய வகுப்பில் காண்போம்.  பாடப்பகுதிக்குள் செல்லும் இப்லாடல் குறித்த அற்புதமான விளக்கத்தை நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா வழங்கியுள்ளார். அதைக் காண்போம்.





       காட்சிப் பதிவில் மிக எளிமையாக , இனிமையாக விளக்கத்தைக் கண்டோம். இனி புத்தகச் செய்திகளைக் காண்போம்.

நூல்வெளி 

                     பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவராகக் கொண்டு, மதுரைக் காணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை .இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ; 188 அடிகளைக் கொண்டது.ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. இப்பாடலின் பெயர் இருவகையில் பொருள் சிறந்து விளங்ககியது. தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடையாகவும் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடுநல்வாடை எனும் பெயர் பெற்றது.

நுழையும்முன்

             'ஐப்பசி அடை மழை கார்த்திகை கனமழை' என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர். பருவ மாற்றங்களால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை, மாற்றம் பெறுகிறது. முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும்  மாற்றத்தை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது

பாடல் 

வைகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்

ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்

புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்

நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ

மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்

கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூ நடுங்க

மாமேயல் மறப்ப மந்தி கூரப் 

பறவை படிவன வீழக் கறவை 

கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்

குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்

                                                       ( 1 - 12 ) 

பா வகை :  நேரிசை ஆசிரியப்பா 

திணை: வாகை

வாகைத் திணை - வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத்திணை.

துறை : கூதிர்ப்பாசறை 

கூதிர்ப்பாசறை - போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு

சொல்லும் பொருளும் 

புதுப்பெயல் - புதுமழை

ஆர்கலி  - வெள்ளம்

கொடுங்கோல் - வளைந்த கோல்

புலம்பு   - தனிமை 

கண்ணி - தலையில் சூடும் மாலை

கவுள் - கன்னம்

மா  - விலங்கு 

பாடலின் பொருள்

                             தான்  தங்கியிருந்த மலையை  வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது. தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர். தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது. பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கை-களுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.

                         விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின. மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.

இலக்கணக் குறிப்பு

வளை இ  -  சொல்லிசை அளபெடை;
பொய்யா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்;
புதுப்பெயல், கொடுங்கோல் - பண்புத்தொகைகள்.

உறுப்பிலக்கணம்

கலங்கி = கலங்கு + இ
கலங்கு - பகுதி, இ - வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

இனநிரை = இனம் + நிரை
விதி : மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
இனநிரை
-
புதுப்பெயல் = புதுமை + பெயல்
விதி :ஈறுபோதல் - புது + பெயல்
விதி: இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும் - புதுப்பெயல்

**************      ***************    **********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments