12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழி - விரிவானம் - தம்பி நெல்லையப்பருக்கு - பாரதியின் கடிதம் - பாடமே படமாக !

 

12 ஆம் வகுப்பு - தமிழ்

இயல் - 1, மொழி

விரிவானம்  - தம்பி நெல்லையப்பருக்கு 

                                      - பாரதியார்.**************  *************  *************

                      வணக்கம் மாணவ நண்பர்களே ! நாம் முதல் இயலில் கவிதைப்பேழையாக அமைந்துள்ள இளந்தமிழே ! , தன்னேர் இலாத தமிழ் , உரைநடையாக அமைந்த தமிழ் மொழியின் நடை அழகியல் , இனிக்கும் இலக்கணமாக அமைந்த தமிழாய் எழுதுவோம் பகுதிகளை காட்சிப் பதிவுகளுடனும் , எழுத்து வடிவத்திலும் படித்து மகிழ்ந்தோம் . இன்று விரிவானம் பகுதியில் அமைந்துள்ள தம்பி நெல்லையப்பருக்கு என்ற கடிதத்தைக் காண்போம் . இத்துடன் இயல் 1 ல் உள்ள அனைத்துப் பகுதிகளும் நிறைவு பெறுகின்றன. நாளை முதல் பாடப்புத்தகத்திலுள்ள வினா & விடைகளைக் காண்போம்.

மகாகவி பாரதி

                     தமிழிலே ஆய்த எழுத்து ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு எழுத்தையும் ஆய்தமாகப் பயன்படுத்தியவன் பாரதி. சுதந்திரத்தையும் பாடினான். சுற்றுச் சூழலையும் பாடினான்.  விடுதலை நெருப்பை எரியச்செய்தன அவனது பாடல்கள். 

                   குழந்தைப் பாடல்களில் நன்னெறியை ஊட்டினான். அச்சம் தவிர் என ஆத்திசூடி படைத்தான். அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே ! என அவனது வரிகளைப் பாடும் போதெல்லாம் நம் உடலும் சிலிர்க்கும் உள்ளமும் சிலிர்க்கும். கதை , கவிதை , கட்டுரை என அவன் தொடாத இலக்கியத் தளம் எதுவும் இல்லை கூறலாம். அத்தகைய மாகவிஞன் பாரதி , தம்பி நெல்லையப்பருக்கு எழுதிய அற்புதமான கடிதம் ஒன்று நமக்குப் பாடப்பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.

                 பாடப்பகுதிக்குள் செல்லும் முன்பாக , நமது பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் இப்பாடம் குறித்து விளக்கிய அற்புதமான காட்சிப் பதிவினைக் காண்போம். அப்போதுதான் இப்பகுதி சுவைக்கும். 


காட்சிப் பதிவைக் கண்டீர்களா நண்பர்களே ! இப்போது நாம் பாடப்பகுதியாக அமைந்த செய்திகளைக் காண்போம்.

      யார் இந்த பரலி சு. நெல்லையப்பர் ? தெரிந்து கொள்ள , தெரியுமா ? பகுதியைக் காண்போம்.

              பரலி சு. நெல்லையப்பர் விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர். பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களையும் வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

                    அடுத்ததாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பகுதி நூல்வெளி. வாருங்கள் , நூல்வெளியினுள் நுழைவோம்.

நூல்வெளி

மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய இக்கடிதம் ரா. அ. பத்மநாபன் பதிப்பித்த 'பாரதி கடிதங்கள்' என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது. பாரதி, பதினைந்து வயதில் கல்விகற்க உதவிவேண்டி எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதம்முதல் அவர்தம் மறைவிற்கு முன்னர் குத்திகேசவருக்கு எழுதிய கடிதம்வரை அனைத்தும் நம்மிடம் பேசுவதுபோல இருப்பதே அவருடைய நடையழகின் சிறப்பு. பாரதியாரைவிட ஏழாண்டுகள் இளையவரான பரலி சு. நெல்லையப்பரைப் பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி அன்புகாட்டி வந்தார். பாரதியின் கடிதங்கள் மேலும் அவரை நன்றாகப் புரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன.

      நண்பர்களே ! இப்போது நாம் நுழையும் முன் பகுதியினைப் படிப்போம். கடிதம் என்பதைப் பற்றிய அற்புதமான செய்திகளை இப்பகுதி நமக்குத் தருகிறது.

நுழையும் முன் : 

                         உறவுக்கு, அறிவுறுத்தலுக்கு, வேண்டுதலுக்கு, வணிகத்திற்கு என்று கடிதங்கள் எழுதுகையில் அவற்றின் மொழியாட்சி மாறுபடுகிறது. கடித வடிவில் சொல்ல வேண்டியவற்றை வெளியிடும் முறை உண்டு.கடிதங்களை இலக்கியமாக்கும் எழுத்தாளர்கள், மொழிக்கு அதன் வழியாகத் தனி அழகை உருவாக்கித் தருகிறார்கள். தனிப்பட எழுதும் கடிதங்களிலும் ஈர்க்கும் மொழியில் அழுத்தமான எண்ணங்களைத் தந்து அவற்றைப் பொதுவெளிக்கு உரியதாக்குபவர்களும் இருக்கிறார்கள். காலத்தின் குரல்களான அக்கடிதங்களில் மொழி, வீறுபெறுகிறது.

         இதோ ! மாகவிஞன் பாரதி எழுதிய கடிதம்.

                                                             புதுச்சேரி,

                                                              19, ஜுலை.

                        எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்பரைப் பராசக்தி நன்கு காத்திடுக.

தம்பி - மாதத்துக்கு மாதம், நாளுக்கு நாள், நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் - ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்.

*******    *******

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை.

*******   ********

ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்த பாஷைப் முடியுமானால் - தமிழ்நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும். தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க! ஆனால் புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்.

*******   *******

தம்பி, - நான் ஏது செய்வேனடா!

தம்பி - உள்ளமே உலகம்!

ஏறு! ஏறு! ஏறு! மேலே! மேலே! மேலே!

நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ.

பற! பற! - மேலே மேலே! மேலே!

*****    *****

தம்பி - தமிழ்நாடு வாழ்க என்றெழுது.

தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது.

தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப்

பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.

அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீன

கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது.

ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது.

அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.

தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக.

முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.

சக்தி! சக்தி! சக்தி! என்று பாடு.

தம்பி - நீ வாழ்க!

                                                   உனதன்புள்ள,

                                                                பாரதி.

ஆகா ! எவ்ளோ சிறப்பான ஒரு கடிதம்.  நீங்களும் கடிதம் எழுதுங்கள். உங்கள் நண்பருக்கு , தம்பிக்கு , அப்பாவிற்கு என. அப்போதுதான் உங்கள் கற்பனை விரியும். வாழ்த்துகள்.

*************     **************    ************

மகாகவி பாரதியின் வீட்டில் பாட்டுப் பாட்டன் பாரதியுடன் மு.மகேந்திர பாபு பாரதியைப் பற்றி முழுமையும் ரசிக்க இந்தக் காட்சிப் பதிவைப் பாருங்கள்.


*************    *************   *************

வாழ்த்துகள் நண்பர்களே ! பார்த்து மகிழ்ந்ததற்கும் , பகிர்ந்து மகிழ்ந்ததற்கும்.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410

***********    **************    **************

**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* ********

Post a Comment

0 Comments