வகுப்பு - 12 - தமிழ்
இயல் 1 - மொழியை ஆள்வோம் - பகுதி - 3
ஒருபக்க அளவில் கட்டுரை எழுதுக
தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள்
************** **************** ***********
தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள்
முன்னுரை
'தாய், தாய்நாடு, தாய்மொழி' என்பதே உலகவழக்கு. தாய் தன் தாய்மொழியிலேயே கொஞ்சிக் குலாவி பிஞ்சுக் குழந்தைகளை வளர்க்கிறார். குழந்தையின் மழலை உடலில் தாய்ப்பாலும், தாய்மொழியும் இணைந்தே செல்கின்றன. ஒன்று உடலை வளர்க்கிறது, மற்றொன்று அறிவை வளர்க்கிறது. எனவே தாய்மொழிவழிக்கல்வியே மழலைக்கும், எதிர்கால மக்கள் இனத்துக்கும் பொருத்தமானது.
பொருளுரை: தாய்மொழிக்கல்வியின் தேவை
தாயோடு உறவாடி, உரையாடி மகிழும், மழலை குடும்பத்தினருடன் உரையாடி மகிழ்கிறது; பின்னர் வெளி உலகில் உலாவரும் போது தொடர்புக் கருவியாக உடனடியாகப் பயன்படுவது தாய்மொழியே. இத்தகைய தாய்மொழிக் கல்வியே இயற்கையானது, பிறமொழிக் கல்வி செயற்கையானது
தாய்மொழிச் சிந்தனை:
தாயுடன் பேசி மகிழும்போதும், அவள் கேள்விக்குப் பதிலளிக்கும்போதும் ஊற்றில் நீர் ஊறுவது போல் தாய்மொழிச் சிந்தனையே உருவாகிறது. பிறமொழியை எவ்வளவு நேரம் எவ்வளவு பொருட்செலவு செய்து கற்றுத் தந்தாலும் தாய்மொழிச் சிந்தனையே முதலில் நிற்கிறது. எனவே அன்றாட நிகழ்வுகளுக்குத் திட்ட மிடலும், செயல்படுத்துவதும் ஆகிய பணிகளுக்கான சிந்தனை தாய்மொழியில் உருவாவதால் தாய்மொழிச் சிந்தனை முதன்மையானது; முற்போக்கானது.
அறிஞர்களின் பார்வை:
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தாய்மொழியிலேயே பேச்சையும் எழுத்தையும் வெளிப்படுத்துகின்றனர். இரஷிய எழுத்தாளர் லியோ டால்ஸ்ட்ராய் தன் தாய்மொழியான உருசிய மொழியிலேயே தம் சிறுகதைகளைப் படைத்துள்ளார். நோபல்பரிசுபெற்ற கவி தாகூர் தம் படைப்பான 'கீதாஞ்சலியை' தமது தாய்மொழியான வங்க மொழியிலேயே அளித்துள்ளார். அறத்தின் நாயகன் காந்தியடிகள்கூட தாய்மொழிக்கல்வியே சரியான கல்வி; பிறமொழிக்கல்வி பேடிக்கல்வி என்கிறார். தாய்மொழிக்கல்வி தாய்ப்பால் போன்றது ; பிறமொழிக் கல்வி புட்டிப் பால் போன்றது என்பது அறிஞர் கருத்து.
கற்கும் திறன்:
இயல்பான உடல் வலிமையுடன், மன வலிமையும் உள்ளவராலேயே உடல் உழைப்பையும், அறிவுப் பூர்வமான உழைப்பையும் சரியாகச் செய்ய முடியும். பிறந்தது முதல் குழந்தை தாயோடும், தந்தையோடும் பேசி, கற்றுப் பழகும் மொழி தாய்மொழி. முதல் ஆசிரியராகிய தாயின் பயிற்றுமொழி தாய்மொழி. எனவே கற்கும் திறனும், கற்றல் விளைவுகளும் தாய்மொழி வழிக்கல்வியின் மூலம் பெருகும், பிற மொழிக்கல்வியின் மூலம் அருகும்.
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *******
0 Comments