1 ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.
கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல்
முன்னுரை
உயர்தனிச் செம்மொழியாம் தமிழில் இழுமெனும் மொழியால் விழுமியது பயக்கும் வகையில் இலக்கியங்கள் படைக்கப் பட்டுள்ளன. தமிழர்களின் அழகுணர்வு, மலரும் மணமும் போலக் கவிதையுடன் இரண்டறக் கலந்துள்ளது. கவிப்பொருளை அமைக்கின்ற விதத்தில், உணர்ச்சியைப் பாய்ச்சும் விதத்தில் தீங்கவிகளைச் செவியாரப் பருகச்செய்து கற்போர் இதயம் கனியும் வண்ணம் படைக்கும் அழகியல் உணர்வு, பண்டைக் கவிஞர்களுக்கு இயல்பாக இருந்தது. அறியப்பட்ட வரலாற்றுக் காலத்தின் தொடக்கமாகத் தோற்றம் தருகிற சங்க இலக்கியம், குறிப்பிட்ட சில அழகியல் பரிமாணங்களை வரித்துக்கொண்டுள்ளது.
மொழிசார் கலை
அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்துத் தருகின்ற தொல்காப்பியம், இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம் ஆகும்.
எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாகத் தொல்காப்பியம் கருதுகிறது.
பேசும்போதும் கேட்கும்போதுமான தனிச் சூழல்கள் ஆகியன மட்டுமல்லாது வரலாறு முழுக்க மொழி, மனித நாக்குகளின் ஈரம் பட்டுக்கிடக்கிறது. அதனையே இலக்கியம், தனக்குரிய அழகியல் சாதனமாக மாற்ற வேண்டியிருக்கிறது.
உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை.
இலக்கியம் என்ற மொழிசார்கலை, இலக்கியத்திற்கு ஒரு சிறப்புத் தன்மையைத் தந்துவிடுகிறது. இதனால், மொழிசார்ந்த பொருள், மொழிசார்ந்த கலையாக ஆகிவிடுகிறது.
கலை முழுமை
தொல்காப்பியம் மிகவும் தெளிவாக, இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறவியல் சார்ந்த கருத்துநிலைகள், கலை உருவாக்கத்தின்போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகையதொரு முழுமைதான், கலை முழுமை (Artistic whole) எனப்படுகிறது.
சங்க இலக்கியம் அகத்திணை சார்ந்த செய்திகளையும் புறத்திணை சார்ந்த செய்திகளையும் பாடற் பொருள்களாக வடிவமைத்துள்ளது. அகன் ஐந்திணைகளைப் பேசுகிற
தொல்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான அகன் ஐந்திணைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் 'இலட்சியப் பொருள்களோடு இரண்டற இணைத்துவிடுகின்றது. அதுபோல், இன்னோரிடத்தில், பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு எனச்
சொல்லிவிட்டுத் தொடர்ந்து,
அந்நில மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப
(தொல்.செ.105)
என்று பாவகைகளோடு அறவியல் கருத்துக்களை இணைத்துச் சொல்லி விடுகிறது. சமூக - பண்பாட்டு மரபிற்கேற்பவே, கலைப்படைப்பை - அழகியல் நெறியை பண்பாட்டின் இலச்சினையாகச் (Symbol of culture) சித்திரிப்பதற்குத் தமிழ்மரபு
முன்வந்திருக்கிறது; முன்மொழிந்திருக்கிறது. தமிழ் அழகியலின் நெடும் பரப்பு, இது.
நடையியல் விளக்கம்.
# பாட்டு அல்லது கவிதையின் நடையியல் கூறுகளில், ஒலிக்கோலங்களும்
சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் மிக முக்கியமானவை.
# கவிதையின் இயங்காற்றல்தான் நடை. தொல்காப்பியமும் பிற இலக்கணங்களும் அவ்வாறே கருதுகின்றன.
# எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது. மொழிசார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும்தான்
பிறக்கிறது. ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
# இதனையே அந்தப் பனுவலின் - பாடலின் - ஒலிப்பின்னல் (Sound texture)
என்கிறோம்.
சொற்புலம்
சொல்வளம் என்பது, ஒரு பொருள் குறித்து வரும் பல சொல்லாய்ப் பல பொருள் குறித்துவரும் ஒரு சொல்லாய் வருதலும் பல துறைகளுக்கும் பல சூழல்களுக்கும் பல புனைவுகளுக்கும் உரியதாய் வருதலும் உணர்வும் தெளிவும் கொண்டதாய் வருதலும் என்று செழிப்பான தளத்தில் சொல், விளைச்சல் கண்டிருப்பதைக் குறிப்பது ஆகும். சங்க
இலக்கியத்தில் இது மலர்ந்தும் கனிந்தும் கிடக்கிறது.
ஒலிக்கோலமும் சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்தி பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்திகட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரிய
வடிவம் செய்கின்றது.
உரைநடை வழக்கு, பேச்சுவழக்கு உள்ளிட்ட இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது, எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை
என்று வருவதே மரபு. ஆனால் சங்கப் பாடல்கள் பலவற்றில் இது பிறழ்ந்துவருகிறது. கவிதை மறுதலைத் தொடர் (Poetic inversion) இது.
நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச் சடங்கு, சர்ச்சைக்கு உள்ளானது பற்றிப் பாடிய பாடல்.
இடுக வொன்றோ, சுடுகவொன்றோ;
படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே
(புறம். 239)
இந்த இறுதி அடி ஓர் எளிமையான தொடரியல் பிறழ்வோடு அமைந்திருக்கிறது. ஏனைய 20 அடிகளில், தொடர்கள் வரிசையாகவும் திட்டமிட்டு நேர்படவும் செல்லுகின்றன.
'தொடியுடைய தோள் மணந்தனன்' எனத் தொடங்கி, ஒவ்வோர் அடியும் தனித்தனியே வினைமுற்றுக்களோடு, தன்னிறைவோடு முடிகின்றன. இப்படி ஒரு 18 பண்புகளை வரிசைப்படுத்திய பிறகு, தொகுத்துச் சொல்வது போல 'ஆங்குச் செய்பவெல்லாம்
செய்தனன் ஆதலின்' எனக் கூறிவிட்டுப் போடா போ புதைத்தால் புதை; சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறது. பாடலின் தொடரியல் சார்ந்த வடிவமைப்பு இதற்குத் துணை நிற்கிறது.
முடிவுரை
நடையியல், வடிவமைப்பின் பகுதிகளையும் முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது. அத்தகைய தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம்.
அந்தப் பனுவலின் நீண்ட நெடும் இழைகளும் அதற்குள் குறுக்கும் நெடுக்குமாக ஊடுபரவி ஓடும் இழைகளும் கருத்தியல் நிலையிலும் வடிவமைப்பு நிலையிலும் கவன ஈர்ப்பைத் தருகின்றன. மேலும், சங்க இலக்கியம் சமூக - பண்பாட்டுத் தளத்தில் குறிப்பிட்ட சில பண்புகளையும் போக்குகளையும் சொந்த மரபுகளாக நிறுவிக்கொண்டுவிட்டது.
***************** ************* **********
நண்பர்களே ! மேலே உள்ள பாடப்பகுதி வினாவிற்கான விடையை நமது பெரும்புலவர் ஐயா.திரு.மு.சன்னாசி அவர்களின் காட்சிப் பதிவில் முழுமையும் காண்போம்.
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
************** ************* ************
GREEN TAMIL - You Tube -6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம்உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments