வகுப்பு - 12 , தமிழ்
இயல் 1 - மொழி , மொழியை ஆள்வோம்.
பகுதி - 2
1 ) இலக்கிய நயம் பாராட்டுக.
2 ) வினாக்களை உருவாக்குக.
3 ) உவமைத்தொடர் அமைக்க.
*************** ************** ***********
இலக்கிய நயம் பாராட்டுக.
முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம் அமைத்த பெருமாட்டி!
- கண்ணதாசன்
முன்னுரை
கவியரசு கண்ணதாசன் காலம் தந்த கவிச்சுடர். அவர் கவிதைகள் சமுதாய நிலையைப் படம் பிடித்துக்காட்டுவன; வாழ்க்கை நிலையாமையை எடுத்துச் சொல்லுவன; இந்து சமயக் கருத்துக்களை எடுத்துச் சொல்வன. தமிழ்ச்சுவையும், தமிழ்ப்பற்றும் பல கவிதைகளில் உள்ளன. பாண்டியர்கள் முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த செய்தியைக் கூறும் இப்பாடலில் அமைந்துள்ள சொல்நயம், பொருள்நயம், அணிநயம், உவமை, உருவகம், சுவை போன்றவற்றை எடுத்துச் சொல்வதே இலக்கிய நயம் பாராட்டலின் நோக்கம்.
திரண்ட கருத்து:
பாண்டிய மன்னர்கள் தென்மதுரை, கபாடபுரம், இன்றைய மதுரை ஆகிய இடங்களில் முச்சங்கங்கள் அமைத்தனர். முதுபெரும் புலவர்களை அழைத்தனர். அச்சங்கங்களில் அளவில்லாத அகப்பொருள், புறப்பொருள் கருத்துக்கள் செறிந்த பாடல்களையும், இலக்கணக் கருத்துக்களையும் சொற்சுவையும், பொருட் சுவையும் மிகுந்த கவிதைகளை அரங்கேற்றினர். உலக நலம் உலகம் ஒரு குடும்பம் என்ற அடிப்படையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் அமைத்த பெருமகனாரே பாண்டிய மன்னர்.
மையக் கருத்து :
பாண்டியர் முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த சிறப்புக் கூறப்படுகிறது.
சொல்நயம்:
களஞ்சியத்தில் நெல்லைக் கூட்டுவர். கவிச் சங்கத்தில் கவிஞர்கள் பொருளைக் கூட்டுவர். அளப்பரிய பொருள் கூட்டி, என்ற தொடர் சொற்சுவை நிறைந்த தொடர்.
பொருள் நயம்:
கவிதை என்றாலே சொற்சுவையும், பொருட் சுவையும், இசைச் சுவையும் நிரம்பியிருக்கும். ‘சுவை மிகுந்த' என்னும் அடைமொழி கொடுத்து 'சுவை மிகுந்த கவிகூட்டி' என்று வரும் தொடர் பொருள் நயம் உள்ள தொடராகும்.
தொடை நயம்:
மோனை நயம்:
“முச்சங்கம், முதுபுலவர்” என முதலடியில் சீர்மோனை வந்துள்ளது.
எதுகை நயம்: “முச்சங்கம், அச்சங்கம்”
“சொற்சங்கம், அற்புதங்கள்"
என்ற சீர்களில் அடி எதுகை இரு விகற்பமாக வந்துள்ளதைக் காணலாம்.
அணிநயம்:
'கூட்டி' என்ற சொல் தொகுத்து என்ற பொருளில் பல முறை வந்துள்ளதால் சொற்பொருள் பின்வருநிலை அணி அமைந்துள்ளது!
சந்தம்:
எதுகை, மோனையுடன் கூடிய இனிய சந்தம் அமைந்துள்ளதைக் காணலாம்.
சுவை:
மூவேந்தர்களில் பாண்டியர் மட்டுமே முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர அரும்பாடுபட்டனர். எனவே பாடலில் பெருமிதச் சுவை வந்துள்ளதைக் காணலாம்.
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments