11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - இனிக்கும் இலக்கணம் - மொழி முதல் , இறுதி எழுத்துகள் - எழுத்து & காட்சிப்பதிவில் பாடமே படமாக !

 

                   வகுப்பு - 11 - தமிழ் 

இயல் 1 - இனிக்கும் இலக்கணம்

மொழி முதல் , இறுதி எழுத்துகள் 



*************    *************    *************

        வணக்கம் நண்பர்களே ! இன்றைய வகுப்பு மிக இனிமையான வகுப்பு. ஆம். நாம் 11 ஆம் வகுப்பு தமிழ் இயல் ஒன்றில் இனிக்கும் இலக்கணமாக மொழி முதல் , இறுதி எழுத்துகளைப் பார்க்க இருக்கிறோம்.

              நம்முடைய பெரும்புலவர் ஐயா.திரு.மு.சன்னாசி அவர்கள் கற்கண்டு இலக்கணத்தை தம் சொற்கொண்டு விளக்கிய விதம் மிக அருமை. வாங்க படத்தைப் பார்ப்போம்.பாடம் புரிந்து விடும்.பார்த்தாலே போதும்.




மாணவ நண்பர்களே ! ஆசிரிய ஆளுமைகளே ! காட்சிப்பதிவைக் கண்டீர்களா ? வாருங்கள் இனி வரிவடித்திற்குள் செல்வோம்.


மொழி முதல், இறுதி எழுத்துகள்

           சொற்கள் எழுத்தொலிகளால் ஆனவை. அவை நாம் ஒலிப்பதற்கு இனிமையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும். இதற்குச் சொற்களின் முதலிலும் இறுதியிலும் ஒலிக்கும் எழுத்தொலிகள் காரணமாக அமைகின்றன. சொற்களின் புணர்ச்சியில், முதற்சொல்லின் இறுதி எழுத்தும் வரும் சொல்லின் முதல் எழுத்துமே சந்திக்கின்றன. அவ்வாறு சந்திக்கும் இடத்தில் வரும் எழுத்துகள் எவையெவையென அறிந்துகொள்ள வேண்டும்.

      காவிரி, டமாரம், றெக்கை, பாவை, ராக்கி, கோதை, டப்பா போன்ற சொற்களில் தமிழ்ச்சொற்கள் எவை என்பதை அறிய முடிகிறதா?

                 இவற்றுள் காவிரி, பாவை, கோதை ஆகியவை தமிழ்மொழிச் சொற்களாக உள்ளன. டமாரம், றெக்கை, ராக்கி, டப்பா ஆகியவை பிறமொழிச்சொற்களாக உள்ளன. எனவே, சொற்களில்

தமிழ்மொழிக்கு உரியவை, பிறமொழிக்கு உரியவை எவையெவை என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும். இதற்குச் சொற்களில் எழுத்துகளின் வருகை குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.


மொழி முதல் எழுத்துகள் - 22

1. உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.

2. மெய்யெழுத்துகள் தனிமெய் வடிவில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. உயிரெழுத்துகளோடு சேர்ந்து உயிர்மெய் வடிவிலேயே மொழிக்கு முதலில் வருகின்றன.

3. மெய்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள் உயிர்மெய் வடிவங்களாகச் சொல்லின் முதலில் வரும்.

(ஙனம் என்னும் சொல்லில் மட்டுமே நு வரும்),

4. ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு வரிசைகள் சொல்லின் முதலில் வருவதில்லை.

5. ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.

குறள் என்ற சொல்லை க் + உ +ற் + அ + ள் எனப் பிரிக்கலாம். சொல்லின் முதலில் உள்ள கு' என்னும் உயிர்மெய் எழுத்தை, க் + உ எனப் பிரிக்கும்பொழுது க் என்ற மெய்யெழுத்தே சொல்லின் முதலில் வருவதை அறியலாம்.

'ங்' என்னும் மெல்லின மெய்'விதம்' எனப் பொருள் தரும் 'ஙனம்' என்னும் சொல்லில் மட்டும் முதலில் வரும். இந்தச் சொல்லும் தனியாக வராது. அ, இ, உ என்ற சுட்டெழுத்துகளுடனும் எ, யா என்னும் வினா எழுத்துகளுடனும் இணைந்து அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் என்று வரும். தற்காலத் தமிழில் இவற்றின் பயன்பாடு அரிதாகவே உள்ளது.

உங்ஙனம் என்பது தற்பொழுது தமிழகத்தில் வழக்கில் இல்லை. ஆனால், தமிழ் இலக்கியங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் இலங்கைத் தமிழர் உங்கு, உங்ஙனம் போன்ற சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.


                    இவ்விலக்கண வரையறைகள் அனைத்தும் எழுத்து மொழிக்கானவையே அன்றி, பேச்சு மொழிக்கானவை அல்ல. மேற்காட்டிய 22 எழுத்துகள் நீங்கலாக உள்ள பிற எழுத்துகள், சொல்லின் முதலில் வந்தால் அவை தமிழ்ச் சொற்களாக இருக்கமாட்டா; பிறமொழிச் சொற்களாகவோ,
ஒலிபெயர்ப்புச் சொற்களாகவோ இருக்கின்றன.

மொழி முதல் எழுத்துகள்

உயிரெழுத்துகள்   - 12 

மெய்யெழுத்துகள் - 10

மொத்தம் = 22


மொழி இறுதி எழுத்துகள் - 24

1. உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.

2. மெய்களில் ஞ் ண்ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள் என்னும் பதினோரெழுத்துகளும்
சொல்லின் இறுதியில் வரும்.

3. க்ச்ட்த்ப்ற் என்ற வல்லின மெய் ஆறும், ங் எனும் மெல்லின மெய் ஒன்றும் சொல்லின்
இறுதியில் வருவதில்லை.

4. பழைய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக்கொள்வர்.

                     ஞ் ந் வ் மூன்றும் பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ளன. ஆயினும், இன்றைய வழக்கில் இவை சொல்லுக்கு இறுதி எழுத்தாக வருவதில்லை.

மொழி இறுதி எழுத்துகள்

உயிரெழுத்து  - 12 

 மெய்யெழுத்து  - 11

குற்றியலுகரம் - 1

மொத்தம் = 24 


***************    *************   *************


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ***********

Post a Comment

0 Comments