வகுப்பு - 11 , தமிழ்
இயல் - 1 - இனிக்கும் இலக்கணம்
புணர்ச்சி - உயிரீறு , மெய்யீறு
உயிர்முதல் , மெய்ம்முதல்
எழுத்து & சொற்களின் புணர்ச்சி
*************** ************* ************
வணக்கம் நண்பர்களே ! நாம் கடந்த பதிவில் மொழி முதல் , இறுதி எழுத்துகள் எவை என்பதை விரிவாகக் கண்டோம். இந்தப் பதிவில் புணர்ச்சி பற்றிய செய்திகளைக் காண உள்ளோம்.
உயிரீறு , மெய்யீறு / உயிர்முதல் , மெய்ம்முதல் / எழுத்துகளின் & சொற்களின் அடிப்படையிலான புணர்ச்சி பற்றிக் காண்போம். பாடப்பகுதிக்குள் செல்லும்முன் நமது பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் இலக்கண விளக்கத்தைக் கண்டு அதன்பின் செல்வோம்.
காட்சிப்பதிவில் மிக எளிமையாக ஐயாஅவர்களின் விளக்கம் இருந்ததல்லவா ?இனி செய்திகளை ஒவ்வொன்றாகக் காண்போம்.
புணர்ச்சி
நாம் பேசும்போது சில சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி ஒருசொல் போலவே பேசுகிறோம். எழுதும்போதும் அவ்வாறே எழுதுகிறோம். தமிழரசி, நாட்டுப்பண் ஆகிய இச்சொற்கள் ஒருசொல் வடிவம் உடையன. ஆயினும், இவை இரண்டு சொற்களின் சேர்க்கையாக உள்ளன.
தமிழ் + அரசி - தமிழரசி
நாடு + பண் - நாட்டுப்பண்
இவற்றில் முதலில் நிற்கும் சொல்லை 'நிலைமொழி' என்றும் அதனோடு வந்து சேரும் சொல்லை 'வருமொழி' என்றும் அழைப்பர். இவ்வாறு நிலைமொழியும் வருமொழியும் இணைவதைப்புணர்ச்சி என்பர்.நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் புணர்ச்சிக்கு உரியன ஆகும்.
உயிரீறு, மெய்யீறு
நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர் என்பதால் அது 'உயிரீறு' எனப்படும். நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் அது 'மெய்யீறு' எனப்படும்.
மணி(ண்+ இ ) + மாலை = மணிமாலை
உயிரீறு;
பொன் + வண்டு - பொன்வண்டு - மெய்யீறு
உயிர்முதல், மெய்ம்முதல்
வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அது 'உயிர்முதல்' எனப்படும்.
வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது 'மெய்ம்முதல்' எனப்படும்.
வாழை+இலை = வாழையிலை- உயிர்முதல்;
தமிழ் + நிலம்(ந்+இ) = தமிழ்நிலம் - மெய்ம்முதல்
எழுத்துகளின் அடிப்படையில் புணர்ச்சி
சொற்புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்தாகவும் வருமொழி முதலெழுத்தாகவும எழுத்துகள் சந்திக்கும் முறையை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.
உயிர் + உயிர் - மலை + அருவி - ஐ + அ
மெய் + உயிர் - தமிழ் + அன்னை- ழ் + அ
உயிர் + மெய் - தென்னை + மரம் - ஐ + ம்
மெய் + மெய் - தேன் + மழை - ன் + ம்
சொற்களின் அடிப்படையில் புணர்ச்சி
இலக்கண வகையால் சொற்கள் நான்கு வகைப்படும். இவற்றுள் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரையும் வினையையும் சார்ந்தே வருகின்றன. இவ்விரு சொற்களும் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் வந்தாலும் அவற்றின் புணர்ச்சி, எழுத்துகளின் புணர்ச்சியே ஆகும்.
வ. எண் நிலைமொழி வருமொழி எ.கா
1 ) பெயர் + பெயர் கனி + சாறு
2 ) பெயர் வினை தமிழ் +படி
3 வினை வினை நடந்து + செல்
4 ) வினை பெயர் படித்த + நூல்
புணர்ச்சி என்பது எழுத்துகளின் சந்திப்பாகவும் சொற்களின் சந்திப்பாகவும் அமைகிறது. எனவே, எழுத்துகளும் சொற்களும், ஒலிக்கூறுகளாகவும் பொருள் கூறுகளாகவும் சந்திக்கும் நிகழ்வே புணர்ச்சி ஆகும்.
குற்றியலுகர ஈறு
சார்பெழுத்துகளுள் முதலிலோ , இறுதியிலோ வராது. குற்றியலுகரமும் , குற்றியலிகரமும் இக்காலத்தில் சொல்லின் முதலில் வராது. ஆயினும் குற்றியலுகரத்தின் ஆறுவகைகளும் சொல்லின் இறுதியில் வருகின்றன. குற்றியலுகர ஈற்றுடன் வரும் நிலைமொழி , குற்றியலுகர ஈறு அல்லது குற்றியலுகர நிலைமொழி எனப்படும்.
வீடு + இல்லை = வீடில்லை - நெடில் தொடர்க் குற்றியலுகரம்
முரடு + காளை = முரட்டுக்காளை - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
அச்சு + பலகை = அச்சுப் பலகை - வன்தொடர்க் குற்றியலுகரம்
பஞ்சு + பொதி = பஞ்சுப்பொதி - மென்தொடர்க் குற்றியலுகரம்
மார்பு + கூடு = = மார்புக்கூடு இடைத்தொடர்க் குற்றியலுகரம்
எஃகு + கம்பி = எஃகுக்கம்பி - ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
************* *************** *************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ***********
0 Comments