வகுப்பு - 11 , தமிழ்
இயல் 1 - விரிவானம்
ஆறாம் திணை - அ.முத்துலிங்கம்.
**************** *************** *********
வணக்கம் நண்பர்களே ! இன்றைய வகுப்பில் இயல் 1 ல் உள்ள ஆறாம் திணைக் கதையைக் காண்போம்.
முதலில் நூல்வெளி பகுதியில் உள்ள ஆசிரியர் பற்றிய செய்திகளைக் காண்போம்.
நூல்வெளி
எழுத்தாளர் அ. முத்துலிங்கம், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். பணி தொடர்பாகப் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து பருகிறார். அக்கா, மகாராஜாவின் ரயில்வண்டி, திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றார். வம்சவிருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றவர். வடக்கு வீதி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1999இல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார்.
நுழையும்முன்
காலந்தோறும் நிலையான வாழ் விடங்களைத் தேடிப் புலம்பெயர்ந்தபடியே இருந்த நாடோடி இனம், நிலவுடைமைச் சமூகமாக மாறப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின. மண்ணிலிருந்து பயிர்களைப் பிடுங்கியெறிவதுபோல, தாய்மண்ணிலிருந்து மனிதவுயிர்களைப் பெயர்த்து எறியும் போக்கு காலந்தோறும் நடந்துவரும் பேரவலமாகும். தங்களுடைய தாய்நாட்டிலிருந்து வெளியேறியவர்களும் வெளியேற்றப் பட்டவர்களும் எதிர்கொள்ளும் அவலங்களை ஆறாம்திணை ஆறாத வடுவாகப் பதிவு செய்கிறது.
கதை பற்றிய காட்சிப் பதிவினைக் காண்போமா ?
கதைக்குள் செல்வோம் !
நாங்கள் அப்போது இலங்கையில் மவுண்லவினியா என்னும் இடத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுச் சொந்தக்காரர் பெயர் பிரீஸ். அவருக்குத் தமிழ் தெரியாது. எனக்குச் சிங்களம் தெரியாது.
1958 ஆம் ஆண்டு மே மாதம் ஓர் இரவு கலவரம் மெல்ல மெல்ல ஊர்ந்து கொழும்புக்கு வந்தது. எந்த நேரமும் எங்கள் வீடு தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று உணர்ந்த எங்கள் அண்ணா எங்கள் உயிரையும் உடைமைகளையும் பிரீஸ்தான் பாதுகாக்க வேண்டும் என்று அவரிடம் வேண்டினார். பிரீஸ் அப்போதுதான் தன் நினைவுக்கு வந்ததுபோல் ஒரு புதுமனிதராக மாறினார். எங்கள் பாதுகாப்புக்கு, தான் உத்திரவாதம் என்றார். ஒரு நாற்காலியை எடுத்து வீட்டுக்கு வெளியே போட்டு அன்றிரவு முழுக்க அங்கேயே தங்கினார்.
தூங்கவே இல்லை. உள்ளே நாங்களும் தூங்காமல் விடிவதற்காகக் காத்திருந்தோம். அடுத்த நாள் காலை அங்கிருந்த மூன்று தமிழ்க் குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் வீடு உடைந்து சிதிலமாகிவிட்டது என்றார்கள். ஒரு குடும்பத்து ஆட்கள் இரவோடு இரவாக மறைந்துவிட்டார்கள். எஞ்சியது நாங்கள் மட்டும்தான்.
எனக்குக் கிடைத்த சட்டை
ஒரு போலீஸ் வாகனத்தில் எங்களையும் இன்னும் சில தமிழ்க் குடும்பங்களையும் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரேயொரு பெட்டிதான் எடுத்து வரலாம் என்று கட்டளை. என் பங்குக்கு டேனியல் டி ஃபோ எழுதிய "ராபின்சன் குரூசோ" என்ற ஒரேயொரு புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டேன். எப்போது வீட்டுக்குத் திரும்பி வருவோம் என்பது நிச்சயமில்லை. அடுத்த வேளை உணவு எப்போது, எங்கேயிருந்து வரும்என்பதும் தெரியாது.
முகாமில் ஒரு தொண்டு நிறுவனம் அகதிகளுக்கு இலவசமாக உடைகள் வழங்கியது. ஏதோவொரு வெளிநாட்டில் யாரோ போட்டு வைத்த உடைகள் தாம் அவை. அதற்காக ஆட்கள் சண்டை போட்டு ஒருவர் மேல் இன்னொருவர் ஏறி நின்று பெற்றுக்கொண்டார்கள். எனக்குப் பெரிசான இரவு ஆடையின் மேல்சட்டை மட்டுமே அகப்பட்டது. கீழ்க் கால்சட்டை யாருக்குப் போனதோ தெரியாது. அந்த மேல்சட்டையின் கடைசிப் பட்டன் என் கைகளுக்கு எட்டாது. ஆனால் மிகச் சந்தோஷமாக அதை நான் பகலிலும் இரவிலும் அணிந்துகொண்டேன்.
கவிதைகள் எழுத முடியாதவர்கள் அவர்கள் சேர்த்துவைத்த நூல்களைச் சுமந்துகொண்டு வர மறக்கவில்லை. ஒருவர் சாண்டில்யனின் கடல்புறாவை 10 வருட காலமாகத் தூக்கிக்கொண்டு நாடு நாடாக அலைந்ததாகச் சொன்னார். இதற்கெல்லாம் காரணம் இருந்தது. 1981ஆம் ஆண்டு மே 31ஆம் தேதியைத் தமிழர் எவர் ஒருவராலும் மறக்க இயலாது. ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை எரித்தால் போதும். அவர்கள் அறிவு மேலும் வளர்வதற்கு முடியாமல் நின்றுவிடும். 'ஃபாரன்ஹீட் 451' நூல் அதைத்தான் சொல்கிறது. அறிவைச் சாகடித்துவிட்டால் மனிதன் செத்துவிடுவான்.
உலக அரங்கில் தமிழ்
புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை, தமிழைக் கைவிட்டு விடும் என்ற பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது. இன்றைய கணினி யுகத்தில் தமிழ் கற்பது இலகுவாகிவிட்டது. புலம்பெயர் நாடுகளில் தமிழ் கற்க முனையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுதான் உண்மை நிலை. இவர்களில் சிலராவது உயர்ந்த இலக்கியங்கள் படைத்துத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள்.
தமிழர்கள் எட்டுக்கோடிப் பேர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நியூசிலாந்திலிருந்து அலாஸ்காவரை பரந்துபோய்ப் புலம்பெயர் தமிழர்கள் பத்து லட்சம் பேர் வாழ்கிறார்கள். கனடாவில் மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள் என்று கணக்கெடுப்புச் சொல்கிறது. ஒரு காலத்தில் பிரித்தானிய அரசைச் சூரியன் மறையாத அரசு என்று அழைத்தார்கள். இப்போதோ சூரியன் மறையாத தமிழ்ப்புலம் என்று சொல்கிறார்கள்.
2012ஆம் ஆண்டு தொடங்கி வரும் எல்லா வருடங்களிலும் ஜனவரி 14ஆம் நாள், தமிழர் பாரம்பரிய நாள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் உலகத்தில் இரண்டாவது பெரிய தேசமான கனடாவில் முதல் முறையாக ஒரு புதியசாலை ஒன்றுக்கு 'வன்னி வீதி' என்றுபெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.
**************** ************* ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments