நம்மொழி செம்மொழி என்ற
சிறப்பைத் தந்த
பரிதிமாற் கலைஞர் பிறந்த தின
( 06 - 07 - 2021 ) சிறப்புப் பதிவு.
************** ************ *************
' தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை ' என்பார் பாவேந்தர் பாரதிதாசன். அன்னைத் தமிழை அழகுற நடைபோட வைத்த சான்றோர்களுள் மிகச் சிறந்தவர் பரிதிமாற் கலைஞர். மதுரை , மலைகளாலும் , கலைகளாலும் சிறப்புப் பெற்ற மாநகரம். எப்போது சென்றாலும் மதுரையில் அறுசுவை உணவோடு தமிழ் உணர்வும் பெறலாம். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் பிறந்து , சிறந்த ஒரு மாபெரும் தமிழ் ஆளுமை பரிதிமாற் கலைஞர்.
தமிழினம் போற்றும் தனிப்பெரும் விழா
"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று." என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க வாய்த்த நல்மணிகளில் திரு மணியாய் விளங்குபவர் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர். தமிழ் மொழியின் சிறப்பும், தொன்மையும் தொன்றுதொட்டு பண்பாட்டு பட்டியலுக்குப் பல நெடுங்காலமாய் அணிசெய்த தமிழன்னையின் தவப்புதல்வர்களின் வருகையை எண்ணி சற்று கர்வம் கொள்ளத்தான் செய்கிறது. அந்த வகையில் இன்று தனித்தமிழ் வளர்சிக்குத் தன்னை அர்ப்பணித்த தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த தினத்தைக் கொண்டாடி பெருமிதம் கொள்கின்றோம்.
கள் உண்ட வண்டைப்போல் சொல் வளம் கண்ட அறிஞர் தம் வரலாற்றைக் கண்டு வியந்து ஆனந்தக் கூத்தாடுவோம்! வரலாற்றுப் பதிவில் வளம் கொழிக்கும் தமிழறிஞராம் பரிதிமாற் கலைஞர் பற்றிய நினைவலைகளில் மிதந்து களிப்போம்.
வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் எனப்படும் பரிதிமாற் கலைஞர் சூலை -6 - 1870 ஆம் ஆண்டு அவனியை அலங்கரித்தார். ஆம் !மதுரை அருகே உள்ள விளாச்சேரியில் கோவிந்த சிவன் , இலட்சுமியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
" விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்பதற்கிணங்க தமிழ்மொழியும் வடமொழியும் கசடறக் கற்றார். இளம் வயதிலேயே தமிழ் மொழி , இலக்கண இலக்கியத்தின் மீது அளவற்ற ஆர்வமும் பற்றும் கொண்டார்.
இளங்கலை பட்டப் படிப்பில் தமிழ் மொழியிலும், மெய்யியலிலும் மாநில அளவில் முதலாவதாகத் தேறினார். தமிழ் மீது தணியாத பற்றுக் கொண்டு " தமிழ் மொழியின் வரலாறு " என்னும் நூலைப் படைத்தார். நாடகத்திற்கு இலக்கணமாக நாடகவியல் என்னும் நூலை இயற்றியுள்ளார். இயற்றியதோடு மட்டுமல்லாமல் கலாவதி, ரூபாவதி என்ற நாடகங்களின் கதாபாத்திரமாக மாறி பெண் வேடமணிந்து நடித்து நாடகத்திற்கு உயிரோட்டம் தந்தார்.
ஆசிரியர் பற்று.
இராவ் பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி எனச் சிறப்பிக்கப் பட்டார். தமது ஆசிரியரின்பால் மிகுந்த அன்பும், பக்தியும் கொண்ட மாணவராக விளங்கினார். அவர் ஆசிரியர் சபாபதி முதலியார் போற்றும் மாணவராகத் திகழ்ந்தார்.
அவர் மறைந்த போது இரங்கல் பா பாடி வருந்தினார்.
" மாமதுரைப் பெம்மான் மேல்
மாலையெனப் பேர்புனைந்து
காமர் சிலேடை வெண்பாக்
கட்டுரைத்த பாவலனே
பாமணார் கோவே நீ பாரினைவிட் டேகியது
தாமதுரை சாமீ தமியேன் செய்
தீவினையோ...
என்று பாடி வருந்தினார்.
இது ஆசிரிய மாணவர் நல்லுறவையும், கீழ்பணிதலையும் ,மாணவர் கொண்ட அன்பும் உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்குகிறது.
மொழிப்பற்று.
வடமொழியற்ற நல்ல தமிழ் வேண்டும் என்பதில் பெரும் விருப்பம் கொண்டிருந்தார்.அவற்றை நடைமுறைப் படுத்தியும் காட்டினார். சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரை தமிழ்ப் படுத்தி வடமொழி கலவாத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என மாற்றிக்கொண்டார். இது இவர் தமிழ்ப் பற்றுக்குச் சான்றாகும்.
பரிதிமாற் கலைஞர் எழுதிய பல நூல்களில் சில...
• ரூபாவதி
•கலாவதி
•மான விஜயம்
• பாவலர் விருந்து
• மதிவாணன்
• நாடகவியல்
• தமிழ் மொழி வரலாறு
• சித்திரக்கவி விளக்கம்
• சூர்ப்ப நகை- புராண நாடகம்.
நினைவு இல்லம்
மதுரை மாவட்டம் , திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் பிறந்து , வளர்ந்த இல்லத்தை தமிழ் நாடு அரசு சீரமைத்து நினைவில்லமாக மாற்றி 31 அக்டோபர் . 2007- ஆம் ஆண்டு திறந்து வைத்துக் கொண்டாடியது. அது முதல் ஆண்டுதோறும் தமிழ் நாடு அரசின் சார்பில் , சூலைத் திங்கள் 6 - ஆம் நாள் பரிதிமாற் கலைஞரின் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
பரிதிமாற் கலைஞரின் வீட்டிலிருந்து ஒரு நேரடிக் காட்சிப் பதிவு நம் நண்பர்களுக்காக.
தமிழ் மொழிக்கு சிறப்புச் செய்து தாமே தம் மொழிக்கு சிறப்பாக அமைந்த இவர் போன்ற தமிழறிஞர்களால் தமிழ் என்றும் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை. தனித் தமிழ் பேசிய தன்னிகரற்ற அறிஞரின் புகழை எந்நாளும் கொண்டாடி மகிழ்வோமாக!
வாழ்க தமிழ்! வளர்க புகழ் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
*************** ************** *********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments