சரித்திரம் படைத்த சாதனைத் தமிழர் . விஞ்ஞானி.திரு.மயில்சாமி அண்ணாதுரை - பிறந்த நாள் ( 02 - 07 - 2021 ) சிறப்புப் பதிவு.

 

விண்ணில் தடம் பதித்த தமிழன்

திரு.மயில்சாமி அண்ணாதுரை.

பிறந்த நாள் ( 02 - 07 - 2021 ) 

சிறப்புப் பதிவு



************    *************   *************   ' 

வானை அளப்போம் ! 

கடல் மீனை அளப்போம் !

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் ! 

          என்றான் நம் பாட்டுப்பாட்டன் இளசை தந்த மாகவிஞன் பாரதி.

சந்திரனைத் தொட்டதின்று மனித சக்தி !

சரித்திரத்தை மாற்றியது மனித சக்தி !

இந்திரன்தான் விண்ணாட்டின் அரசனென்ற

இலக்கணத்தை மாற்றியது மனித சக்தி !

என்று மனித சக்தியின் மகத்துவத்தைப் பாடினான்  பட்டுக்கோட்டை தந்த பாட்டுக் கோட்டை கட்டிய கவிஞன்.கல்யாண சுந்தரம்.

       நிலா நிலா ஓடி வா !

       நில்லாமல் ஓடி வா !

      மகன் மீது ஏறி  வா !

      மகிழ்ச்சியை நீ கொண்டு வா !

என கொங்கு நாட்டின் பொள்ளாச்சி  வட்டத்தில் கோதவாடி கிராமத்தில் பாலசரஸ்வதி என்னும் அம்மையார் அழைத்திருப்பார் போலும்.

            வானை அளக்கவும் , சந்திரனை பரிசோதிக்கவும் ஒரு மகவு மயில்சாமி - பாலசரஸ்வதியின் மகனாக 1958 ஜூலை 2 ல் பிறந்தது. முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திராயன் 1 , சந்திராயன் 2 திட்டத்தின் இயக்குனராகப் பின்னாளில் சிறந்தது.

     ஆம் ! அவர்தான் தமிழ் வழிக்கல்வியில் பள்ளிப்படிப்பைத் தொடங்கி , தரணியையே வியக்க வைத்த மாபெரும் அறிவியல் ஆளுமை மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். நாம் அண்ணாந்து பார்க்கும் நிலவிற்கு சந்திரயான் அனுப்பிய அண்ணாதுரை.

     பொள்ளாச்சி அரசு பள்ளியில் தமிழ்வழி கல்வியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கோவை அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். அண்ணா பல்கலையில் பொறியியல் ஆராய்ச்சிப் படிப்பை முடித்தார்.ஐந்து முனைவர் பட்டங்களைப் பெற்றதிலிருந்தே படிப்பின் மீதான இவரது ஆர்வத்தை நாம் அறிய முடிகிறது.

           1982 ல் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் அறிவியல் ஆய்வராகச் சேர்ந்து , தனது விடாமுயற்சியாலும் , கடின உழைப்பாலும் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனராக 2015 ஏப்ரல் முதல் 2018 ஆகஸ்ட் வரை பணியாற்றி தன் பணிக்காலத்தில் மாபெரும் பெருமையினைப் பெற்றுத்தந்தார்.

                அணுவிஞ்ஞானியும் நம் இந்திய தேசத்தின் முதல் குடிமகனாகவும் விளங்கிய ஐயா அப்துல்கலாம் அவர்களைப் போல பள்ளி , கல்லூரி மாணவர்களைச் சந்தித்து உரையாடுவதால் இவரை இளைய கலாம் என்று அன்போடு அழைக்கின்றனர்.

        கையருகே நிலா என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள் , சந்திரயான் பணி ஆகியன குறித்து நூல் எழுதி உள்ளார். 

          தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார்.  ' வளரும் அறிவியல் ' என்று தமிழில் வெளிவரும் அறிவியல் மாத இதழின் கவுரவ ஆசிரியராகவும் இருந்து வருகிறார். 50 க்கும் மேற்பட்ட விருதுகளால் சிறப்பிக்கப்பட்ட மாபெரும் அறிவியல் ஆளுமை நம் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.

         இந்தியாவின் பெருமையை உலகம் அறியச் செய்து , சரித்திரம் படைத்த நம் சாதனைத் தமிழரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம் ! வாழ்த்துவோம் !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

**************   ************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* *********

Post a Comment

0 Comments