ஜூலை - 01 தேசிய மருத்துவர் தினம் - கண் முன் காக்கும் கடவுள்களான மருத்துவர்களை வாழ்த்துவோம் !

 

ஜூலை - 1

தேசிய டாக்டர்கள் தினம்.



          அந்த டாக்டர் மட்டும் இல்லனா நான் இன்று உயிரோடவே இருந்திருக்க மாட்டேன் . அவர்தாங்க தெய்வமா வந்து சரியான நேரத்தில காப்பாத்தினார். 

        இப்படியான வார்த்தைகளை நம்மில் ஒருவர் சொல்ல நாம் நிச்சயம் கேட்டிருப்போம். ஆம் ! நவீன இன்றைய அறிவியல் உலகில் காக்கும் கடவுளாக இருப்பவர்கள் மருத்துவர்கள். 

         வெள்ளை உடைக்குள் வெள்ளை மனதோடு தன் சேவையைச் செய்யக்கூடிய கோடிக்கணக்கான மருத்துவர்களுக்கு  இக்கட்டுரை சமர்ப்பணம்.

      எங்க ஊர்க்கருகில் பேரிலோவன் பட்டி என்றொரு சற்றே பெரிய கிராமம். சுத்து வட்டாரத்தில் அங்குதான் பிரைமரி ஹெல்த் சென்டர் . வேறெங்கும் இல்லை. காய்ச்சல் , தலைவலி அவ்வப்போது பேறுகாலம் என அனைத்திற்குமான ஒரு சிறு மருத்துவமனை.

            என்னோட பால்யத்தில் அங்கே முருகேசன் என்றொரு டாக்டர் வேலை பார்த்தார். மிகச் சாந்தமான மனிதர். அதிர்ந்து கூட பேச மாட்டார். கோவில் பட்டியில் இருந்து பணி செய்ய வருவார். இரு சக்கர வாகன்தில் முத்துலா புரத்தில் இருந்து வருவார். அப்படி அவர் வரும்போது ஒவ்வொரு ஊர் பஸ் ஸ்டாப்பிலும் யாராவது இருந்தால் , உங்க ஊர்லெ என சம்பந்தப்பட்ட நபரின் பெயரைச் சொல்லி ,  இன்னிக்கு ஆஸ்பத்திரிக்கு வரச்சொல்லுங்க எனச் சொல்லுவார். அவரால் தன்னுடைய அந்திமக் காலத்தை அதிகரித்தவர்கள் நிறைய பேர். 

           கோவில்பட்டியில் 20 வருசத்துக்கு முன் 5 ரூபாய் மருத்துவர் என ஒருவர் இருந்தார். வைத்தியமும் பார்த்து அஞ்சு ரூவாயில் மாத்திரையும் கொடுத்துவிடுவார்.

      சமீபத்தில் சென்னையில் ஒரு மருத்துவர் இறந்து விட்டார். அவரது இறப்பினைக் கேட்டு அப்பகுதியே கண்ணீரில் மூழ்கியது. அவரது சேவையைப் பற்றி ஒவ்வொருவரும் கண்ணீர் மல்க நெகிழ்வுடன் கூறியதை தொலைக் காட்சியில் பார்த்த போது நம் கண்களும் ஈரமாகின.

            படிக்கும் மாணவர்களுக்கு உடல் நலமில்லை என்று மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் சில நெகிழ்ச்சியான செய்திகளைக் கூற நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த டாக்டர் யூனிபார்மோட பிள்ளைங்க வந்தாங்கன்னா அவர் கிளினிக்கில் காசே வாங்க மாட்டார்.  அதிலும் கிராமத்து ஆளுகன்னா கொடுக்கறதா வாங்கிக்குவார் என பெயர் பெற்ற பல மருத்துவர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

         நம் அனைவருக்குமான ஓர் உச்சபட்சக் கனவு எப்படியாவது எம்புள்ளைய டாக்டருக்குப் படிக்க வைக்கனும்ங்கிறதான். டாக்டர் படிப்பும் , படித்த பின்னான சேவை மனப்பான்மையும் கொண்டாடப் பட வேண்டிய ஒன்று. இதயத் துடிப்பை அறியும் கருவியுடன் இரக்க மனம் கொண்ட எண்ணற்ற மருத்துவர்களின் சேவையைப் போற்றுவோம் !


           நாடித்துடிப்பை அறியும் மருத்துவர்களின் பொதுநலத்தால்தான் நாம் இன்று மகிழ்வோடு நடமாடுகின்றோம். கொரனா பெருந்தொற்றில் எல்லாரும் வீட்டில் இருங்க என அரசாங்கம் சொன்னது. அந்த நேரத்தில் கொரனா தொற்றாளர்களுக்குத் தன்னம்பிக்கையும் , மருத்துவமும் தந்து கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றிய பெருமை மருத்துவர்களுக்கு உண்டு.

                 மக்கள் கை தொழும் கடவுளாக , மண்ணில் நடமாடும் , கண்ணில் இரக்கக் குணம் கொண்ட ஒவ்வொரு மருத்துவர்களையும் இன்றைய தேசிய டாக்டர்கள் தினத்தில் வாழ்த்துவோம் ! வணங்குவோம் !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

**************   **************   **********

இந்திய தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள்!

மாதா பிதா குரு தெய்வம்! - நல வாழ்வுக்கு

ஆதாரமான மருத்துவரும் தெய்வம்!

ஊருக்குதான் ஓய்வும் ஊரடங்கும்!

மருத்துவருக்கில்லை உறக்கமும் ஓய்வும்!

கருவறையில் இறைவன் ஓய்வெடுத்தாலும்

மருத்துவமனையில் தெய்வங்கள் ஓய்வெடுக்கவில்லை!

தொற்றுக்கு அவர்கள் அஞ்சுவதில்லை - மற்றவரை

தொற்றுக்கு இரையாக விடுவதில்லை!

அதனால்தானோ என்னவோ - காலன் சில

மருத்துவரை விரும்பி அணைத்துக் கொண்டான்!

ஒரு தேசத்திற்கு வேறு எதுவும் இழப்பல்ல!

மருத்துவர்களை இழப்பதே பேரிழப்பு!

கவிஞர்.பழனிச்செல்வி , ஆசிரியை , ஈரோடு.

***************      ************   ************


மாண்புமிகு மருத்துவர்கள்...


என்றோ எப்பொழுதோ

கடந்து போன மனிதர்போல்

கடக்கமுடிவதில்லை

இவர்களை...


வெள்ளைக் கையுறையில்

இரத்தச் சிவப்புக் கறைபடிய

உறுதி கொண்ட இதயத்தோடு

இவர்கள் போராட

எத்தனையெத்தனை இதயங்கள்தான்

மீண்டும் துடிக்க ஆரம்பிக்கின்றன...


நாம் பிறந்துவீழ்வதே

இவர்தம் கரங்களில்

அன்னைக்கும் முன்னே

நமைக் கண்ட தாயுமானவர்கள்...


தலைவலிக்கிறதென

இவர்களைத் தேடுகிறோம் !

தாங்கொணா வேதனைகளைத்

தள்ளிவைத்தே நம்மையும்

தாங்குகிறார்களென என்றேனும்

நினைத்திருப்போமா...?!


உறக்கமே வருவதில்லையென

குற்றம் கடிந்து மாத்திரை கேட்கிறோம்.

இமைகளை அழுத்தும் தூக்கத்தை

தானமாய் அளித்தே பிறர்நலம் வேண்டும்

பாரிவள்ளல்கள் இவர்கள்...


கண்டம் விட்டு கண்டம் தாவும்

பெருந்தொற்றால் அண்டை வீட்டைக்கூட

அண்டப் பயக்கும் சுயநலம் நமது

கொண்ட தொழிலே தெய்வமென

தொற்றே வந்தாலும் துச்சமென

தொட்டுத் தொட்டு வைத்தியம் பார்க்கும்

பொதுநலம் இவர்களது...


இன்னும் என்ன சொல்ல

இவர்தம் சிறப்புரைக்க...

வார்த்தைகள் தேடுகிறேன் 

அகராதியில்..

மண்ணில் பிறந்த மனிதத் தெய்வங்களின்

மகத்துவம் உரைக்க வார்த்தைகளில்லையென

விரித்த கைகளையும் கூப்பித் தொழுகிறதே

அகராதியும் இவர்கள்தம் சிறப்புணர்ந்து...


என்ன ஈடு செய்யப் போகிறோம் உங்களுக்கு ?

நீர் தந்த உயிரைப் பேணிக் காப்போம்

என்று உறுதியளிப்பதல்லாது..

காலச்சக்கரத்தில் கடந்து போகும்

மனிதர்கள் போல் வெறுமனே

கடக்க முடியவில்லை உங்களை..

நீங்களும் ஓர் இறைவனே  !

எங்களுக்கு உயிர்தந்த தாயுமானவர்களே !

கவிஞர். அனு , திருப்பூர்.

**************    **************   **********

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* ***************

Post a Comment

1 Comments

  1. மாண்புமிகு மருத்துவர்கள்... சிறப்பான வரிகள்👌👌👌

    ReplyDelete