மரம் ஏறும் பாம்பு - பாம்பென்றால் படையும் நடுங்கும் - பாம்புகள் குறித்து சில செய்திகள்.

 

மரம் ஏறும் பாம்பு 


( பனை மரத்தில் ஏறும் கொம்பேறி மூக்கன் என்ற பாம்பு - புகைப்படம் - மு.மகேந்திர பாபு )

     பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பைக் கண்டு படை நடுங்குகிறதோ இல்லையோ பார்த்தவுடன் நமது தொடை நடுங்கிவிடும். பாம்புகளில் பல வகை. ஒவ்வொன்றும் ஒரு வகை. மொத்தத்தில் பாம்பு வகைகளில் 4 வகைப் பாம்புகள்தான் விஷமுள்ளவை . மற்ற பாம்புகளால் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை என்கிறார் சிவா என்ற நண்பர்.

             நல்ல பாம்பு , கண்ணாடி விரியன் , கட்டு விரியன் , சுருட்டை விரியன் இவைதான் விஷமுள்ளவைகளாம். 

       பாம்பிற்கும் எனக்குமான தொடர்பு பால்யத்திலிருந்தே உண்டு. அவ்வப்போது வந்து செல்லும் தூரத்துச் சொந்தக்காரர் போல எங்க வீட்டிற்கு வந்து செல்லும். அதால் எந்த விதமான துன்பமும் நேர்ந்ததில்லை. 

         எங்கள் வீட்டில் கோழிகள் நிறைய உண்டு. அவை போடும் முட்டைகளைத் தின்பதற்காக வரும். அப்போது டைகர் என்றொரு நாய் வளர்த்தோம். அது தொடர்ந்து இடைவிடாது குரைக்கிறது என்றால் ஏதோ ஒரு பாம்பு வந்துவிட்டது என்று அர்த்தம்.  டார்ச் லைட் எடுத்து அடித்துப்பார்த்தால் வந்தவர் நல்லவராக ( நல்ல பாம்பு ) இருப்பார்,பார்த்தும் போய் விடுவார். பாம்புகள் வரும் போகும். அதை அடிக்கவோ , கொல்லவோ கூடாது என்பார் அப்பா.

           ஒரு தடவை எங்கூர்ல கம்மாய் அழிந்து விட்டது. (  அதாவது கண்மாயில் தண்ணீர் வற்றிவிட்டது )மீன்பிடிக்க ஊரே கம்மாக்குள்ள கெடக்குது. கெளுரு மீசய ஆட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் அலையுது. கெண்டமீன் துள்ளிக் குதிக்குது, உழுவையும் குரவையும் வழுக்குது . சிலபேரு சேத்துக்குறள்ள அயிரமீனத் தேடுறாக. வலை போட்டு சில பேரு மீன கரையில கொண்டாந்து கொட்டுறாக. கொக்குக எட்ட நின்னு வேடிக்கை பாக்குதுக.

                      எங்கூர்ல நல்லையா ஒரு மாமா இருக்காரு. இப்பவும் இருக்காரு. நல்ல வெவரமான ஆளு. அவரு வலை போடல. நண்டுப் பொந்துக்குள்ள கையவிடுதாரு. உள்ள இருக்குற விலாங்குமீனத் தூக்கி கரையில விட்டெறியுராரு.  அப்படித்தான் விலாங்குமீனப் பிடிச்சு இழுக்காரு. வர மாட்டிக்குது.தாயோளி உள்ளய இழுக்கனு பலம் கொண்டு இழுத்து வெளில போடுராரு. வகையான விலாங்கு மீனப்போய் அப்டினு. அங்க பாத்தா நல்லா நாலடி நீளமுள்ள தண்ணிப்பாம்பு. அவரு பொந்துக்குள்ள இருந்து தூக்கிப்போட்டது கரையில உக்காந்திருந்த கருவாயன் கழுத்தில மாலை போல விழுந்தது. அவன் பதறிப் போய் தெறிச்சு ஓடுனத இப்பப் பாத்தாலும் பேசிச்சிரிப்போம்.

                நெல் வயல்ல அறுவடைக் காலத்தில வரப்புல அதுக பாட்டுக்கு அலையும். ஏன்னா தவளைகளப் பிடிக்க. நல்ல பாம்ப பல தடவ பாத்திருக்கேன். ஒரு நா வரப்புல நடந்து போறேன். உஷ் உஷ்னு எளப்பு நோய் உள்ளவன் சத்தம் மாதிரி கேக்குது. பக்கத்தில ஒரு சுடுகுஞ்சியவும் காங்கல. அப்றம் என்ன சத்தம்னு பாத்தா , புள்ளிக்காரன் ( பாம்பு ) கொடுத்த சத்தம். அந்தச் சத்தம் கேட்டு நான் சத்தமில்ல எடுத்த ஓட்டம் வூட்ல வந்துதான் நின்னது.

               வேலிச்செடிகள்ல பச்சப்பாம்பப் பாத்திருக்கோம். பாம்புனே தெரியாத அளவு செடியோட செடியா இருக்கும். அப்றம் மண்ணுள்ளிப் பாம்பு. ஒரு தடவ பொட்டல்ல கால வெயில்ல ரெண்டு பாம்புக பின்னிப் பிணைஞ்சு வெளயாடுதுக.

               சேலம் , ஏற்காட்ல 2001 ல வேல பாக்கும்போது , காபித் தோட்டத்துக்குள்ளதான் நடந்து போகனும். சூரிய ஒளியே தரையில படாது, அந்தளவு மரங்கள் அடத்தியா இருக்கும். முண்டுக்கல் பாதையில இலைகள் விழுந்து பாதையே தெரியாது. அதுல நடக்கும்போது பல தடவ பாம்ப மிதிச்சிருக்கேன். என்னடா நழுக்குனு நழுவுதேனு பாத்தா தரயில இருந்து பாம்பு விறுவிறுனு போகும்.

      கொஞ்ச நாளக்கி முன்னாடி காலைல எங்க பள்ளிக்கூடத்துக்கு ( இளமனூர் ) பைக்ல போறேன். ரோட்டோரத்தில் இருந்த பனை மரத்தில கொம்பேறி மூக்கன் அப்டிங்கற பாம்பு ஏறுது. நல்ல கைதேர்ந்த ஒரு பனையேறி எப்படி பனைல ஏறுவானோ அதுபோல அது சாவகாசமா ஏறுது. நான் பைக்குள்ள இருந்து கேமரா எடுத்து வச்சிக்கிட்டேன். சரி. அண்ணாச்சி உச்சிக்குப் போனதும் அவரு நினைவா ஒரு போட்டோ எடுத்து வச்சிக்கிருவம்னு. அதுதான் நீங்க மேல பாத்த போட்டோ. இந்தப் பாம்பு பெரும்பாலும் மரங்கள்லதான் இருக்குமாம். ஓணான் , பூச்சி இதுதான் இதுக்குச் சாப்பாடாம். அது உச்சிக்குப் போனதும் பனை மரத்து ஓலயில உக்காந்திருந்த மைனா விருட்டுனு பறந்து போச்சு.

              செத்தோடம் இருந்து பாத்துட்டு நானும் வாயப்பிளந்துக்கிட்டு கிளம்பலாம்னு பாக்குறேன். அப்ப எங்க ப்ரைமரி ஸ்கூல் எச்செம் பாலமுருகன் வாராரு பைக்ல. என்ன வாத்தியார இங்க ? னு கேக்க , 

       யோவ் ! இங்க பாரும்  னு போட்டோவக் காட்ட , இது என்ன பாம்புயா இப்டி பனைல ஏறிருக்குனு அவரும் கேக்க , அந்தப் போட்டோவ எங்க வீட்டுப் பக்கத்தில இருக்கற தம்பி சிவாட்ட காட்ட அவருதான் . அங்கிள் இதுதான் கொம்பேறி மூக்கன்னு சொல்லி , அவர் சில படமும் காமிச்சாரு. 

      பாம்பை சாமியாக் கும்பிடுற ஊரு நம்ம ஊரு. நாகராஜா , நாகராணினு பேரு வச்சு பிள்ளைகளைக் கூப்டுறோம். நம்ம பெருமாள்சாமியே பாம்புப் படுக்கையிலதான தூங்குறாரு. எலே ... மெதுவாப் பேசுடா ! அவனுக்குப் பாம்புக்காது. என்ன பேசுனாலும் கேட்ருவானு சிலரைச் சொல்வோம். அனகோண்டா படம் வந்த போது , ஆத்தி ! எம்மாம் பெரிய பாம்புனு வாயப்பிளந்து படத்தப் பாத்து ரசிச்சோம்.

             இந்தப் பூமிப்பந்து மனுசங்களுக்கு மட்டுமல்ல. பாம்பு போன்ற ஜந்துக்களும்தான். பாம்புகள் இருக்கும் வரை மனித இனம் மகிழ்ச்சியா இருக்கும்.எந்த உயிரினமும் நம்மைத் தீண்டுவதில்லை தேவையில்லாமல். நாம் கைகாலை வச்சிக்கிட்டு பேசாம இருந்தா எந்த வில்லங்கமும் இல்லை.

 இது ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே. அனுபவங்கள் தொடரும்.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

*********************    *******************

எங்கள் வீட்டருகில் மரத்தில் அமர்ந்திருந்த நீர்க்கோழியைப் பிடிக்க ஏறிய பாம்பு , மரத்தில் இருந்து இறங்கும் காட்சி.

    


*********************    ********************               

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************     **********

Post a Comment

0 Comments