பத்தாம் வகுப்பு - தமிழ் - மொழியை ஆள்வோம் - பாடப்பகுதி வினா & விடை - மொழிபெயர்ப்பு , கட்டுரை - நயம் பாராட்டுக

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

இயல் - 1  

அமுத ஊற்று - மொழி 

பாடப்பகுதி வினாக்களும் விடைகளும்.

*********************   *********************

வணக்கம் மாணவ நண்பர்களே ! நாம் நேற்றைய வகுப்பில் பாடத்தின் பின்பகுதியில் உள்ள வினாக்களையும் , அதற்கான விடைகளையும் கண்டோம். இன்று மொழியை ஆள்வோம் என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள மொழிபெயர்ப்பு , கட்டுரை , நயம் பாராட்டுக இவற்றிற்கான விடைகளைக் காண்போம்.

மொழியை ஆள்வோம்

படித்துச் சுவைக்க.

பாடலில், மரம் என்னும் சொல் இடத்திற்கேற்பப் பொருள் தருவதாய் 11 இடங்களில் இடம் பெற்றுள்ளது. பொருள்களைப் பொருத்திப் படித்துச் சுவைக்க.

"மரமது' மரத்தில் ஏறி

மரமதைத் தோளில் வைத்து

மரமது* மரத்தைக் கண்டு

மரத்தினால் மரத்தைக்' குத்தி

மரமது வழியே சென்று

வளமனைக் கேகும் போது

மரமது கண்ட மாதர்

மரமுடன்" மரம்" எடுத்தார்"

தனிப்பாடல் திரட்டு - சுந்தரகவிராசர்


1 ) அரசன்  - அரசமரம்

2 ) மா -  குதிரை  -  மாமரம்

3 ) வேல் - கருவேலம்

4 & 9 ) அரசன்

5 & 7 ) புலி - வேங்கை

6 ) வேல்

8 ) காட்டு வழி

10 ) ஆல் - ஆலமரம்

11 ) அத்தி - அத்திமரம்

ஆல் + அத்தி = ஆரத்தி

*********************    ********************

மொழிபெயர்ப்பு

1.If you talk to a man in a language he understands, that goes to his head. If you talkto him in his own language that goes to his heart.

- Nelson Mandela

விடை:

ஒரு மனிதனிடம் அவருக்குத் தெரிந்த மொழியில் பேசினால் அது அவர் தலைக்குள் ( மூளைக்குள்) செல்லும். ஆனால் அவருடைய தாய்மொழியில் பேசினால் அது அவர் இதயத்திற்குள் செல்லும்.

 நெல்சன் மண்டேலா

2 ) Language is the road map of a culture. It tells you where its people come from andwhere they are going.

- Rita Mae Brown

விடை:

கலாச்சாரத்திற்கான பாதையின் வரைபடம் மொழியாகும். அது தன் மக்கள் எங்கிருந்து வந்தனர்; எங்கு   செல்கின்றனர் என்பதை நமக்குக் கூறும்.

- ரீட்டா மே ப்ரௌன்.

**********************   ********************

சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக

“தேணிலே ஊரிய செந்தமிழின் - சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும் - நிதம்

ஓதி யுணர்ந்தின் புருவோமே"

- கவிமணி தேசிக விநாயகனார்

விடை:

“தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை

தேறும் சிலப்பதி காரமதை

ஊணிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்

ஓதி யுணர்ந்தின் புறுவோமே"

***********************   *******************

கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக

(குவியல், குலை, மந்தை, கட்டு ) 

சொல்          கூட்டப்பெயர்

கல்                குவியல்

புல்                 கட்டு

பழம்              குலை

ஆடு               மந்தை

**********************   ******************

வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக

1.) கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

விடை :

கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கின்றவரை அழைத்து வாருங்கள்.

2 ) ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

விடை : 

ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3 ) நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

விடை :

நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4 ) பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

விடை : 

பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

*************************   ******************

அதே பெயருடைய வேறு சொற்களை எழுதுக

தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.

1 ) உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல, இன்சொல் இருக்க வன்சொல்பேசி இன்னற்படுகின்றனர்.

 பூமியில் வாழும் மாந்தரில் சிலர் பழமிருக்கக் காய் உண்ணுதலைப் போல, இன்சொல் இருக்க வன்சொல்பேசி துன்பப்படுகின்றனர்

2.) வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த கவிஞருக்குத் தனது தலையை ஈந்து மங்கா இசைப்பெற்றான்.

3 ) நளனும் அவனது துணைவியும்  நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போல மகிழ்ச்சி கொண்டனர்.

4 ) சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

பூந்தோட்டத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேன் உண்டன.

5 ) பசுப்போல் சாந்தமும்  புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

ஆபோல் அமைதியும் உழுவை போல் துணிவும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

*************************    ******************

கட்டுரை எழுதுக

குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்னும் திகழும்  அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

சான்றோர் வளர்த்த தமிழ்

“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்

வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி”

என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். தமிழ் மூவாயிரம்   ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த இலக்கிய வளம் மிக்க மொழி. தமிழ் மிகவும் பண்பட்ட மொழி. அதுதனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருந்த மொழி.

        “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்” எனப் போற்றிப் புகழப்படுகின்ற தமிழ்மொழி உலகெங்கும் பரவியுள்ளது. இலக்கியங்களும் இலக்கணங்களும் பெருகி இருந்தமையால், தமிழ்மொழி திருந்திய மொழியாகத் திருத்தம் செய்யப்பட்ட மொழியாக ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்று விளங்குகிறது. பண்டைத் தமிழை அறிந்து கொள்ள தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் உதவுகின்றன. இடைக்காலத் தமிழை அறிந்துகொள்ள பக்தி இலக்கியங்கள் உதவுகின்றன.   இவ்விலக்கியங்கள் மக்களின் வாழ்வியல் நெறிகளை                    வெளிப்படுத்துகின்றன. ஆதலால் இவை மக்கள் இலக்கியம் என்றே வழங்கப்படுகிறது.

'ஏடு காத்த ஏந்தல்' என்ற சிறப்பிற்குரிய தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் இல்லையெனில் தமிழ்இலக்கியங்களை எவரும் அறிந்திருக்க இயலாது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, காப்பியங்கள் என அனைத்தையும் அச்சிட்டுத் தம் பதிப்புப் பணியினால் தமிழுக்கு அழகூட்டியுள்ளார்.

       சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற பெயரைப் பரிதிமாற்கலைஞராக மாற்றிக் கொண்ட தமிழறிஞர்  தமிழ்மொழியை உயர்தனிச்செம்மொழி என்று முதன்முதலாக நிலைநாட்டிய பெருமைக்குரியவர்.

மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் உருவாக்கி தமிழை வளர்த்தவர்.

தேவநேயப் பாவாணர், தமிழே உலகின் அடிப்படையான செம்மொழி என்பதற்கான மிகச் சிறந்த
வாதங்களை முன் வைத்த தமிழறிஞர்.இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பல.  மு. வரதராசனார்,
மீனாட்சி சுந்தரனார், ச. வையாபுரிப் பிள்ளை ரா.பி.சேதுப்பிள்ளை எனப் பலராலும் கன்னித் தமிழாய்
விளங்கும் தமிழன்னைவளர்க்கப்பட்டாள்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஜி.யூ.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோர்தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பறியது.
தமிழ்மொழியில் உள்ள நீதிநூல்கள், பதினெண்மேல்கணக்காகிய சங்க இலக்கியங்கள், பதினெண்
கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், பள்ளு, குறவஞ்சி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், பரணி, உலா,
அந்தாதி எனத் தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் தமிழன்னைக்கு அணிகலன்களாய் விளங்கி
அழகூட்டுவதற்குப் பலரும் பணியாற்றியுள்ளனர்.

         தமிழன்னைக்கு அணிகலன்களாய் விளங்கும் நூல்களைப் படிப்போம். இன்புறுவோம். புதிய அணிகலன்களை உருவாக்கி அழகுக்கு அழகு சேர்ப்போம்.

***********************  ********************

நயம் பாராட்டுக 

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே.

- கா. நமச்சிவாயர்

திரண்ட கருத்து :

தேனை விட இனிமையான செந்தமிழ் மொழியே! தென்னாடு பெருமை பெறும்படி விளங்கும் தென்
மொழியே! உடம்பில் ஒளிவிட்டு விளங்குகிற உயர்ந்த மொழியே! உணர்வுக்கு உணர்வு தந்து ஒளிருகின்ற
தமிழ் மொழியே! சிறப்பினால் வானத்தை விட உயர்ந்த வண்டமிழ் மொழியே! மனிதர்களுக்கு இரண்டுகண்களாக
விளங்கும் நல்ல மொழியே தானாகவே சிறப்புற்று விளங்குகின்ற தனித்தமிழ் மொழியே!இனியும் தழைத்து இனிது உயர்வாயாக.

மையக் கருத்து :

                தமிழ்மொழியின் சிறப்புகளை இனிமையான மொழி, உணர்வுக்கே உணர்வைத் தரும் மொழி, இரு
கண்களாய் விளங்கும் மொழி என்று கூறுகிறார். இனியும் தமிழ் மொழி தழைத்து வளரும் என்கிறார்.

மோனைத் தொடை : 

தேனினும் - தென்னாடு, தானனி - தழைத்தினி

ஊனினும் - உணர்வினும் - சீர்மோனை

எதுகைத் தொடை

: தேனினும், ஊனினும், வானினும், தானனி - அடி எதுகை

இயைபுத் தொடை : மொழியே

அணிநயம்

: உயர்வு நவிற்சி அணி. உள்ளதை உள்ளவாறு கூறாமல் பன்மடங்கு
உயர்வாகப் பெருக்கிக் கூறியுள்ளார்.


************************  ********************

வாழ்த்துகள் மாணவர்களே ! பாருங்கள் , கருத்துகளைக் கூறுங்கள் ! நண்பர்களுக்கும் பகிருங்கள் ! 

மு.மகேந்திர பாபு ,தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410 

************************  ********************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     ***************

Post a Comment

2 Comments

  1. மிகவும் சிறப்பு ஐயா வாழ்த்துகள் 👏👏👏👏

    ReplyDelete
  2. ஹலநழூஊற
    ஊளழலநமன
    வளர்ந்த

    ReplyDelete