ஜூன் 5 , உலகச் சுற்றுச்சூழல் தின கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கவிஞர்களும் கவிதைகளும் - எழுத்து & காட்சிப்பதிவாக.

 

GREEN TAMIL - You Tube & TAMILINBAM.IN

இணையதளம் இணைந்து நடத்திய .


 ஜூன் 5 - உலகச் சுற்றுச்சூழல் தின 

மாபெரும் கவிதைத் திருவிழா !

       மூன்றாம் பரிசு பெற்ற கவிதைகள்.





********************    **********************



புலனத்தில் வரப்பெற்ற ஆயிரத்திற்கும் மேலான கவிதைகளில் TAMIL INBAM.IN இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கவிதைகள் விபரம் .

பள்ளி மாணவர் கவிதைகள் -  66

கல்லூரி மாணவர் கவிதைகள் - 60

ஆசிரியர் & ஆர்வலர் கவிதைகள் - 165 

மொத்தம்   = 291 கவிதைகள்.

வாழ்த்துகள் நண்பர்களே !


***********************   ********************

மரம் பேசுகிறேன் 


மனசாட்சி இல்லாத மனிதர்களிடம் 

மரம் பேசுகிறேன்  !

மரம் தான் பூமியின் ஆடை  !

நான் சரியும்போது 

பூமித்தாய் துகிலுரியப்படுகிறாள் !

 நான்நான்தான் பூமித்தாய்க்கும் 

 வருணபகவானுக்கும் தூதுப்புறா! 


பூமித்தாய் காட்டும் பச்சைக்  கொடிகள்

 மரங்கள் தான் உன் பிள்ளைகள்

 ஏறிவிளையாட ஊஞ்சலாட ,பறவைகள்

 அமர்ந்து கீதம் இசைக்க , 

பிள்ளைகள் அமர்ந்து படிக்க , 

 நிழலுக்கு ஒதுங்க என்று 

நன்மைகள் பலப்பல என்னால் !


மரம்வெட்டும் மூடனே கேள்! 

வெட்ட வெளியில் அமர்ந்து படிக்கும் 

அவல நிலைக்கு ஆளாக்கிய மடையனே!

 ஓரறிவு படைத்த பறவைகள் கூட       

பழத்தைத் தின்று தன் எச்சத்தின் மூலம்

 மரத்தை எங்கும் பரப்புகின்றன !


இயற்கை ஆக்ஸிஜனாய் நானிருக்க , 

 செயற்கை ஆக்ஸிஜனைப் பொருத்தி

 உயிர்  மடிக்கும் மூடனே கேள்! 

சூரியக் கரங்கள் சுட்டெரித்தால் உலகே 

இங்கு தீக்கிரையாகும் !


 படித்துப் பட்டங்கள் பல பெற்ற மனிதனே !

 இனியாவது உன் 

அறிவுக் கண்ணைத் திறந்து 

பூமிப் பந்தின் வெப்பம் தணிக்க 

வீட்டிற்கு ஒரு மரம் வளருங்கள்;


 வாழவிடுங்கள் எங்களை, 

வாழவைப்பேன் உங்களை 

 பூத்துக் குலுங்கி !

மனிதர்களே !

இனி ஒரு விதி செய்யுங்கள் !

பூமித்தாயின் மானங்காத்திடுங்கள் !

 டாக்டர் அப்துல் கலாம் அய்யா

 அவர்களின்

 கனவை நனவாக்குங்கள் !


கவிஞர். வெ.விஷ்மிதா

10 ம் வகுப்பு புனித தெரசாள் பெண்கள்

 மேல்நிலைப்பள்ளி திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்டமாவட்டம்










***********************   ********************



மரம் பேசுகிறேன் ...



மனிதர்களின் நவீன சூத்திரத்திற்குள்

 முடங்கிப்போன பசுமையின் எச்சமாக 

மிச்சம் உள்ள மரம் பேசுகிறேன் ...

மனிதம் தொலைத்த இயற்கை நான்.. !

மழையைத் தரும் விருட்சம் நான் ...!

மனண்ணுயிர்க்கெல்லாம் உயிர்க்

 காற்று  தந்த  அவதாரம் நான்..!

அனாவசியத்  தேவைகளுக்காக 

அத்தியாவசியமாக வெட்டப்படும் 

பல்லுயிர்க் கூடு நான்..!


 பாம்புகள் போன்ற சாலை அமைக்க 

மனித மலைப்பாம்புகளால் 

விழுங்கப்படும் விதைப்பந்து நான்... !

வீதிகளில் வெட்டப்பட்டு வீடுகளில் 

வளர்க்கப்படும் போன்சாய் மரம் நான்..  !

உயிர்வாழ ஆக்சிஜன் தந்தும் 

ஆதரவின்றிச் சாகும் அனாதை நான் ...!


அழகுப் பொருட்களுக்காக அழியும் 

பொக்கிஷம் நான் ..!

ஆணவ மனிதத்தின் வேட்டைக்கு 

பலியாகும் ஓரறிவு உயிர் நான் ..!

என்னுயிர் அழியுதென்று  

அரற்றியபோது 

மண்ணுயிர் எல்லாம் முகம்மூடி 

அலையுது என்று புதியதொரு செய்தி 

கேட்டேன்... !

உயிர்க்காற்று வேண்டாம் 

என்று என்னை வெட்டிய மக்கள் 

மரணத்தின் பிடியில் பிராணவாயு 

தேடுவது கண்டு கண்ணீர் வடிக்கிறேன் ...


என்னைக் கழுவிலேற்றியது போதும் !

நான் உங்கள் உயிர் காக்கும் கற்பகத் தரு....!

என்னை விட்டு வையுங்கள்..

 உங்கள் வீட்டின் முன் செடியாய் நட்டு 

வையுங்கள்...!

உங்கள் உயிர் மட்டுமல்ல உங்கள் 

சந்ததிகளுக்கும் நான்  உயிர் 

தருவேன்...!

கவிஞர். அ. துர்கா தேவி M.Sc.,B. Ed., 
II year.
 Sri Aurobindo Mira college of education 
மதுரை









*************************   *****************

கவிதைப் போட்டியில் வென்றவர்களின் கவிதைகளைக்  காட்சிப்பதிவாக கீழே காணலாம்.






**************************   *****************



மரம் நடு_மனம் தொடு"

            

பொறிவழியிற் புலனுணர்ந்தோர் புறத்தே நின்றும்

             போற்றாத செயல்களென நிறைய உண்டே

அறிவழிய சிறுமைகொண் டிருகின் றாரே

             அகம்பொதிந்த நற்றொண்டு புரிந்தா ரில்லை

செறிவடர்ந்த மரமொழியக்  இதனால்  கண்டோம்

             சேர்ந்துவரும் பலநோய்கள் இணையக் கண்டோம்

நறியதுவாம் நன்மைகள் துய்ப்ப தற்கு

              நல்லமரக் கன்றொன்றை நட்டுப் போடே!


மரமின்றேல் மழையில்லை மாநி லத்தே

              மலைக்காற்று வீசவில்லை உயிர்மூச் சிங்கே

தரமற்றுத் தடுமாறும் இதயம் ங்க

              தன்னுணவுப் பாதையெல்லாம் அடைந்தே போகும்

உரமாக வருங்காற்று உயிர்க்காற் றாக

              உவந்தளிக்கும் மரந்தானே கார ணங்கள்

வரமாக மரமொன்றை நடுவோம் வகையாய்

              வாழ்வியலை மற்றியமைத் தொளிகாண் போமே'.


உள்ளிழுக்கும் நற்காற்று தூய்மை யாக்கி

             உரியமரம் வழங்குலால் உயிரும் பேண

கள்ளளிக்கும் கமழ்கின்ற பூ,காய் கனிகள்

              கலந்தளிக்கும் கற்பகம்போல் மரமே அறிவோம்

புள்ளினங்கள் கூடுகட்ட போவோர் யார்க்கும்

              பொலிவுடைய தண்ணிழலை நல்கும் பயனே

மள்ளர்களே மறவர்களே மரத்தை நட்டே

               மகிழ்வோமே மனந்தொட்டு வாழ்வோம் நன்றே!


கவிஞாயிறு.கருணாகரன்.

முதுகலைத் தமிழாசிரியர் _ பணி நிறைவு

ஆம்பூர்









*************************   ******************


நன்றிக்குரிய நடுவர் பெருமக்கள்

1 ) பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள் .
( முதுகலை தமிழாசிரியர் & தலைமையாசிரியர் , இராயப்பன் பட்டி , 
தேனி.)

2 ) கவிஞர்.மணி மீனாட்சி சுந்தரம் , 
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி , 
சருகுவலையபட்டி .மதுரை.

3 ) கவிஞர்.அ.கிருஷ்ணவேணி , 
தமிழாசிரியை , அ.உ.நி.பள்ளி , 
கருப்பட்டி , மதுரை.

4 ) கவிஞர்.நாகேந்திரன் , தமிழாசிரியர் , 
அ.உ.நி.பள்ளி , விரகனூர் , மதுரை.

மற்றுமோர் மாபெரும் கவிதைத் திருவிழாவில் சந்திப்போம் கவிஞர்களே ! வாழ்த்துகள் .

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
97861 41410

************************   ***************

Post a Comment

0 Comments