கவியரசு கண்ணதாசன் பிறந்த.நாள் ( ஜூன் 24 ) சிறப்புப் பதிவு./ KAVIARASU KANNATHASAN BIRTH DAY - JUNE - 24

 

ஜூன் 24 - கவியரசு கண்ணதாசன் பிறந்த.நாள் சிறப்புப் பதிவு 

         


கலங்காதிரு மனமே - உன்

கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே !

  என கன்னியின் காதலி திரைப்படத்தில் நம்பிக்கை வரிகளோடு கவிப்பயணத்தைத் திரைத்துறையில் தொடங்கியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். 

           கட்டடக்கலைக்குப் பெயர் பெற்ற காரைக்குடியில் கவிதைக்கலைக்குப் பெயர் சேர்த்த காவியத் தாயின் இளையமகன்தான் கண்ணதாசன். அவர் ,  பள்ளிக்கு எட்டு வைத்து நடந்ததென்னவோ எட்டாம் வகுப்பு வரை மட்டும்தான். ஆனால் அவரது அறிவு எட்டிப்பிடித்ததோ எண்ணிலடங்கா இலக்கிய நூல்களை ! கம்பனை , பட்டனத்து சுவாமிகளை , வான்புகழ் வள்ளுவனை முழுமையும் படித்துச் சுவைத்து , தான் சுவைத்த அந்த அமிழ்தை பாமரனும் பருகத் தந்தவர் கவியரசு கண்ணதாசன். 

              இன்றைய சிவகங்கை மாவட்டம் சிறுகூடற் பட்டியில் ஜூன் 24 ல் கவிதைப் பூவாக மலர்ந்த முத்தையாதான் பின்னாளில் கண்ணதாசனாய் கவிதை உலகத்தை கலக்கியவர். நினைத்த நேரத்தில் சந்தத்திற்குப் பாட்டெழுதும் அசாத்திய திறமை அவருக்கே உரித்தானது.

     கவிஞன் யானோர் காலக் கணிதம் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர். அவர் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையும் , இன்பங்களையும் படைப்பில் கொண்டு வந்தவர். எந்த அமைப்பிலும் நிரந்தரமாய் நில்லாதவர்.  அதனை கவிக்கோ அப்துல் இரகுமான் இப்படிக் குறிப்பிடுகிறார்.

கண்ணதாசனே ! 

நீ யாரைப் போன்றவன்.

கடலிலிருந்து 

ஒரு வெப்பத்தால் புறப்பட்டாய்.

மேலும் கீழும் எங்கெங்கோ

அலைந்து திரிந்தாய்.

இருந்தாலும் இறுதியில்

புறப்பட்ட இடத்திற்கே 

வந்து சேர்ந்துவிட்டாய் .

( கவிக்கோ அப்துல் ரகுமான் ' பொன்மலர் ' கட்டுரையில் )

   கண்ணதாசன் அவர்கள் திரைப்படங்களுக்கு எழுதிய பல பாடல்கள் அவரது வாழ்க்கை அனுபவத்திலிருந்து வெளியானவை. அவரது பல பாடல்கள் இன்றும் நம் மனக்கண்ணை விட்டு அகலாதவை. 

      அதைப்போலவே அவரது கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைகளும் அற்புதமானவை. 

பெற்றால் மட்டும் போதாதம்மா

பிள்ளை வளர்க்கவும் தெரியோணும்

கற்றால் மட்டும் போதாதம்மா

கல்வியின் பெருமை அறியோணும்!

எத்தனை பிள்ளை நாட்டில் வந்தது

எல்லாம் காந்தி இல்லை

எந்தப் பிள்ளையும் தவறாய் வளர்ந்தால்

என்றும் சாந்தி இல்லை!

குழந்தை முன்னே தகப்பன் குடித்தால்

குடிக்கப் பழகி விடும்

கோபத்தாலே வார்த்தைகள் சொன்னால்

குழந்தையும் கற்று விடும்!

சேரும் குழந்தை எவை எனப் பார்த்துச்

சேர்ந்திட வைக்கோணும்

தினமும் காலையில் குளித்திட வைத்துத்

தெய்வத்தைக் காட்டோணும்!

செல்லம் கொடுத்து வளர்ப்பத னாவே

தீமையும் வருவதுண்டு

தினமும் பிள்ளையை அடிப்பத னாலே

சொரணையும் போவதுண்டு.

தங்கப் பிள்ளைகள் வளரும் முறைகள்

தாயார் கைகளிலே

தட்டுக் கெட்டு அலைந்த தென்றாலும்

தந்தை வழியினிலே!

தண்டவாளம் சரியாய் இருந்தால்

வண்டிக்கு ஆபத்தில்லை!

தாயும் தந்தையும் சரியாய் வளர்த்தால்

சேய்க்கொரு குற்றமில்லை!


     என்று , குழந்தை வளர்ப்பு முறையை மிக அருமையாகச் சொல்கிறார்.

   புகையும் பகையும் என்ற தலைப்பில் அமைந்த அற்புதமான கவிதை ஒன்று இதோ.

இழுக்க இழக்கவரும் இன்பம் - புகை

இறுதியிலே தரும் துன்பம்

ஒழுக்கத்தை நான் சொல்லவில்லை - உடல்

உருப்பட ஓர்வழி சொல்வேன் !

உதிரத்தின் அனுக்களைக் கெடுக்கும் - பிள்ளை

உடல்வலு வில்லாமல் பிறக்கும்

இதயத்தின் துடிப்பினைப் பெருக்கும் - புகை

இளமையில் மரணத்தில் முடிக்கும் !

பிடிக்கின்ற கைகளைப் பாரு - அதில்

பெருமளவில் ஒரு கோடு

நிறத்தினிலே மஞ்சள் காட்டும் - அந்த

நிரம்தான் உட்புறம் வாட்டும் !

படிப்பதில் இல்லாத சுகமா - நல்ல 

பழக்கத்தில் இல்லாத சுகமா 

கெடுக்கின்ற பொருள்களில் சுகத்தை - நீ 

கேட்பதும் பிடிப்பதும் தகுமா ? 

புகைபிடிக் கின்றவன் இதழை - இளம்

பூவையர் விரும்புவ தில்லை 

பகைவரில் பெரியது புகையே - அதை

பார்ப்பதும் உடம்புக்குப் பகையே !

என்று , பார்த்தாலே புகை உடம்புக்குப் பகை என்கிறார்.  ஏனெனில் அவரது எழுத்துகள் ஒவ்வொன்றும் கற்பனையில் மட்டும் எழுந்தவை அல்ல. அவரது வாழ்க்கை அனுபவத்தில் இருந்து பிறந்தவை. அதனாலே அவை சிறந்தவை. 

     கவியரசு கண்ணதாசன் அவர்களின் இந்தப் பிறந்த தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள் வழங்கியுள்ள அற்புதமான உரையைக் கேட்டு மகிழ்வோமா நண்பர்களே !



கவியரசரின் கவிதை வானில் இருந்து ஒரு சில நட்சத்திரங்களே இங்கு கண்சிமிட்டியுள்ளன. தொடர்ந்து வரும்.இரசித்து மகிழ்வோம் ! கவியரசு கண்ணதாசனைப் புகழ்வோம் !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

97861 41410,

********************    *********************


காலத்தை வென்றெடுக்கும் காலக்கணிதம் அவன் - அவன் 

நிழல்தனில் பாடம் பயிலும் மாணவி நான்

சங்கப்புலவனை வென்றெடுத்த சாணக்கியன் அவன்-

காற்றுக்கும் ஓர்எல்லை உண்டு நான் அறிவேன்

கண்ணதாசன் பாட்டுக்கும் எல்லை இல்லை  என்பதை நான் அறிவேன்

கார்முகிலும் கானகமும் செவிமடுக்கும்- இவன்பாட்டுதனை

ஒருநிமிடம் நின்று கேட்கும்

எல்லையில்லா ஏற்றம்தரும் இறைவன் அவன் - இவன்பாட்டுதனில்

பொருள்பொதிக்கும் புலவன் இவன்

மீண்டெழா துயர்தனை மீட்டெடுக்க

மீதம் இருக்கும் ஒருவரிகளில் எடுத்துரைத்தான்- நான் கண்ணயர்ந்து இவ்புவிதனில் இருக்கும் காலம்

காலன் இவன்மூச்சுதனை எடுத்துவிட்டான்- இனிஓர்

கவிதனை நான் காண்பேனோ- அவன்

திருவாய் சொல்மொழிதல் கேட்பேனோ

எழுத்திற்கு சக்தி இருக்கும் காலம் வரை

ஏழு பிறவிக்கும் இவன் புகழும் நிலைத்து நிற்கும் .


கவிஞர். துர்கா தேவி , விருதுநகர்.


********************   *********************


     கவியரசே வருவாயா


முக்கனியின் சாரெடுத்து முத்தாக பதம்வடித்து

எக்காலம் பொருந்திடவே எழிலாக கவிபடைத்து

இக்காக தமிழ்குழைத்து இனியபொருள் அதில்சமைத்து

பக்கமென நெஞ்சத்தில் பதிந்திடுமே வரிகளும்தான்


சொல்நயமும் பொருள்நயமும் சொக்கவைக்கும் தேன்தமிழும்

கல்லான மனதினையும் கரைத்திடுமே உன்வரிகள்

பொல்லாத சோர்வுகளும் புதையுண்டு போயிடுமே

நில்லாத வேதனைகள் நிமிடத்தில் மறைந்திடுமே


கண்ணதாசன் என்றதுமே கவியருவி பொங்கிடுதே

எண்ணமெல்லாம் வண்டமிழில் எழிலாக நீந்திடுதே

தண்ணிலவும் உருமாறி தமிழ்பாட வந்திடுமே

பண்ணிசைத்து மகிழ்ந்திடவே பாட்டொன்று கேட்டிடுமே


தொட்டிடாத பொருளில்லை துள்ளிடாத மனமில்லை

நட்டுவைத்த கவிச்செடிகள் நறுமணங்கள் பரப்பிடுதே

எட்டிடாத தொலைவதையும் எளிதாக சேர்த்திடுதே

பட்டுபோல மென்மைதனை பாட்டினிலே தந்தவரே


விட்டுவிட்டே ஏன்சென்றாய் விண்ணுலகம் விரைவாக

மெட்டுக்கு பாட்டெழுத மேலுலகம் தேடியதோ

கட்டுக்குள் அடங்கிடுமோ கவியலைதான் ஓய்ந்திடுமோ

தட்டாமல் ஆண்டவனும் தாளத்தை இசைத்ததனால்


ஓடோடி சென்றாயோ ஒப்பில்லா உலகிற்கு

நாடோடி தேடினாலும் நற்கவிஞன்  இல்லையப்பா

ஈடில்லா உன்கவிக்கு இணையிங்கு யாரப்பா

தேடுகிறாள் தமிழன்னை சீராட்ட வாருமய்யா  


*இக்கு - கரும்பு


கவிஞர்.பூர்ணிமா சங்கர்  , கோயமுத்தூர்

********************    *********************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     *****************


Post a Comment

0 Comments