பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இயற்கை - விரிவானம் - புயலிலே ஒரு தோணி - எழுத்து & காட்சிப்பதிவு விளக்கம்.

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 2 , இயற்கை - விரிவானம்

புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம் 


**********************    *******************

வணக்கம் மாணவ நண்பர்களே ! நாம் இன்று இயல் இரண்டில் இயற்கை என்னும் தலைப்பில் அமைந்த பகுதியில் உள்ள விரிவானம் - புயலிலே ஒரு தோணி என்ற பகுதியைப் படிக்க இருக்கின்றோம். பாடப் பகுதிக்குச் செல்லும்முன் நுழையும்முன் என்ற பகுதியில் உள்ள செய்தியைக் காண்போம்.

நுழையும்முன் :

        இயற்கையின் அசைவுகள் அனைத்தும் அழகிய நாட்டியமாய் அமையும்போது இனிமையும் மகிழ்வும் ஒருங்கே பெறுகிறோம். அதே இயற்கையின் அசைவு சீற்றமாய், ஊழித் தாண்டவமாக மாறுகையில் எதிர்நிற்க இயலாது தோற்றுத்தான் போகிறோம். சுற்றியுள்ள இயற்கை நம்மைச் சுருட்டிச் செல்ல எத்தனிக்கும்போது, புயலின் பெருங்காட்சி உயிரை உறையவைக்கிறது. அதில் கிடைக்கும் பட்டறிவு அனைவருக்கும் பயன்படும் இலக்கியமாகிறது. இந்த நெடுங்கதையின் சில பக்கங்களும் அப்படித்தான்... புயலின் சீற்றத்தைக் கண்முன் விவரிக்கின்றன , புயல் மழை தெறிக்கும் அக்காட்சி....


இக்கதையை எழுதிய ஆசிரியரைப் பற்றிய செய்தியை நூல்வெளி என்ற பகுதியின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நூல் வெளி


புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம், புயலிலே ஒரு தோணி.
இந்நூலாசிரியர் ப.சிங்காரம் (1920 - 1997). இந்தோனேசியாவில் இருந்தபோது, தென்கிழக்காசியப் போர் மூண்டது. அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு இப்புதினம். அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதிஇங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.


           ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர். வேலைக்காக இந்தோனேசியா சென்றார். மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார். இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.

********************     *****************

மாணவ நண்பர்களே ! நாம் கதைக்குள் செல்லும் முன்பாக இக்கதை குறித்து நம்முடைய பெரும்புலவர்.   திரு.மு.சன்னாசி அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தைக் காண்போம்.


**********************    *******************

          பத்தொன்பதாம்நூற்றாண்டின்
தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறுநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர்.அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும்ஒன்று. தமிழ்க்குடிகள் மலேசியா, சிங்கப்பூர்,
இந்தோனேசிய நாடுகளில் நெடுங்காலமாகவாழ்ந்து வருகின்றனர். நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர் இந்தோனேசியாவில்மெபின் நகரில் இருந்தபோது இரண்டாம்
உலகப்போர் நிகழ்ந்தது. ஆசிரியரின் நேரடிஅனுபவங்களோடு கற்பனையும் கலந்தகதைதான் புயலிலே ஒரு தோணி என்னும் புதினம். கடற்பயணத்தில் கண்ட காட்சிகளும்,அதன் தொடர்ச்சியாக நடை பெறும் நிகழ்வுகளும்தான் இக்கதைப்பகுதி.

#####################     ################

       கொளுத்திக்கொண்டிருந்த வெயில்
இமைநேரத்தில் மறைந்துவிட்டது; புழுங்கிற்று.பாண்டியன் எழுந்து போய் அண்ணாந்து பார்த்தான். மேகப் பொதிகள் பரந்து திரண்டொன்றிக் கும்மிருட்டாய் இறுகி நின்றன.
அலைகள் எண்ணெய் பூசியவை போல்
மொழுமொழுவென நெளிந்தன. காற்றையே காணோம். ஒரே இறுக்கம். எதிர்க்கோடியில்வானையும் கடலையும் மாறிமாறிப் பார்த்தவாறு *கப்பித்தானுடன் பரபரப்பாகப்
பேசிக்கொண்டிருந்த மாலுமிகள் திடுமெனப் பாய்மரத்தை நோக்கி ஓடிச்சென்று கட்டுக் கயிறுகளை இறுக்குகிறார்கள். விவரிக்க இயலாத
ஓர் உறுத்தல் ஒவ்வோர் உணர்விலும்பட்டது. எல்லோரும் எழுந்து ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்து மிரண்டு விழித்தனர்.

          கிடுகிடுக்கும் இடி முழக்கத்துடன் மின்னல் கீற்றுகள் வானைப் பிளந்தன. அதே சமயம்மதிப்பிட முடியாத விரைவும் பளுவும் கொண்ட மோதல் *தொங்கானையும் அதிலிருந்து நடப்பன
கிடப்பனவற்றையும் உலுக்கிற்று. வானம்
உடைந்து கொட்டுகொட்டென்று வெள்ளம்
கொட்டியது. சூறாவளி மாரியும் காற்றும்
கூடிக்கலந்து ஆடிக் குதித்துக் கெக்கலித்தன. அலையோட்டம் தெரியவில்லை - வானுடன் கடல் கலந்துவிட்டது. மழை தெரியவில்லை
- வளியுடன் இணைந்துவிட்டது. தொங்கான்அப்படியும் இப்படியுமாய்த் தாவிக்குதித்து விழுந்து திணறித் தத்தளிக்கிறது. எலும்புகள்
முறிவதுபோல் நொறுநொறு நொறுங்கல்ஒலி. தலைக்கு மேல் கடல்... இருளிருட்டு,இருட்டிருட்டு, கடல் மழை புயல் வானம்....

எங்கிருந்தோ தொங்கிய வடக்கயிற்றை
வலக்கையால் பற்றிக் கிடந்தான். அருவியருவி,உப்பருவி, கடலருவி. மற்றவர்கள் எங்கேயெங்கே? மின்னொளி, கப்பித்தான்பொந்து, தாவும் பேயுருவங்கள். சுறாமீன், ரம்பப்பல், காற்றோலக் கடல், சீற்ற மழை.
உடலயர்வுப் புலன் மயக்கம்.

       திடுமென அமைதி பாய்ந்து வந்து
மிரட்டியது. வானும் கடலும் பிரிந்து தனித்துத் தென்பட்டன. பலகை அடைப்புக்குள்ளிருந்து கப்பித்தான்
கத்துகிறான்:
"ஓடி வாருங்கள்! இங்கே ஓடி வாருங்கள்!
லெக்காஸ், லெக்காஸ்!"

பாண்டியன் எழுந்தான். எங்கெங்கோ
இடுக்குகளில் முடங்கிக் கிடந்த உருவங்கள்.தலை தூக்கின. தொங்கான் தள்ளாடுகிறது - அலைகள் - மலைத்தொடர் போன்ற அலைகள்
மோதித் தாக்குகின்றன. தட்டுத் தடுமாறி
நடந்தோடினர்.

         வானும் கடலும் வளியும் மழையும்
மீண்டும் ஒன்று கூடிக்  கொந்தளிக்கின்றன.வானம் பிளந்து தீ கக்கியது. மழை வெள்ளம்கொட்டுகிறது. வளி முட்டிப் புரட்டுகிறது.கடல், வெறிக் கூத்தாடுகிறது. தொங்கான்நடுநடுங்கித் தாவித் தாவிக் குதிகுதித்துவிழுவிழுந்து நொறுநொறு நொறுங்குகிறது.

(  கப்பித்தான் - தலைமை மாலுமி (கேப்டன்)
* தொங்கான் கப்பல் ) 


முகத்தில் வெள்ளம். உடலில் வெள்ளம்.   கால் கையில் வெள்ளம். உடை   இறுக்கியிறுக்கி ரம்பமாய் அறுக்கிறது.  மரத்தூண், கல்தூண், இரும்புத்தூண், உயிர்த்தூண். தொங்கான் தாவி விழுந்து சுழல்கிறது. மூழ்கி நீந்துகிறது. தாவி நீந்துகிறது. இருட்டிருட்டு, கும்மிருட்டு, குருட்டிருட்டு. சிலுசிலு மரமரப்பு. நொய்ங் புய்ங் நொய்ங் புய்ங் நொய்ங் புய்ங். இடி முழக்கச் சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றன. மூடைகள் சிப்பங்கள் நீந்தியோடி மறைகின்றன. தொங்கான் குதித்து விழுந்து நொறுநொறு  நொறுங்குகிறது. சுழன்று கிறுகிறுத்துக்கூத்தாடுகிறது. கடலலை அடிக்கிறது...

   என்னயிது! சூரிய வெளிச்சம்! சூரியன்  சூரியன் சூரியன் தொங்கானில் நீர் நெளிகிறது. பாய்மரம் ஒடிந்து கிடக்கிறது. பொத்துக் கொப்புளிக்கும் பவ்வ நீரை மாலுமிகள்   இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை   அடைக்கிறார்கள். ஆப்பு அடிக்கிறார்கள். மரம்  வெட்டுகிறார்கள், செதுக்குகிறார்கள்...

   தொங்கானின் இருபுறமும், பின்னேயும்   தேயிலைப் பெட்டிகளும் புகையிலைச்   சிப்பங்களும் மிதந்து வருகின்றன.    பாண்டியன் நாற்புறமும் கடலைப் பார்த்து மலைத்து நின்றான்.

             கடற்கூத்து எவ்வளவு நேரம்   நீடித்ததென்று கணக்கிட முடியவில்லை.

தொடங்கியபோதோ, முடிந்தபோதோ, முடிந்து வெகுநேரம் வரையிலோ யாரும் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கடிகாரங்களும் நின்றுபோயிருந்தன.


    தொங்கான் தன்வசமின்றித் தடுமாற  செல்கிறது. கடற்கூத்தின்போது மாலுமிகளால்  தூக்கி எறியப்பட்ட பெட்டிகளும் சிப்பங்களும்  மூடைகளும் மிதந்து உடன் வந்தன. புயல்   மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முற்றாகத் தெளிச்சி பெறவில்லை. பினாங்கு எவ்வளவு தொலைவில் இருக்கிறது, எப்போது போய்ச் சேரலாம்? பதில் சொல்வார் யாருமில்லை.

இரவில் மேல் தட்டுக்கு வந்து கப்பித்தான் வானையும் கடலையும் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டுத் தலையைச் சொறியலானான். பாண்டியன் நெருங்கிச் சென்று நிலவரத்தைக்   கேட்டான். கப்பித்தான் சீனமும் மலாயும் கலந்த மொழியில் சொன்னான்.

        "இனிமேல் பயமில்லை. இரண்டு நாளில் கரையைப் பார்க்கலாம்."

அன்றிரவு யாரும் உண்ணவில்லை;   பேச்சாடவில்லை.  

மறுநாள் காலையில் சூரியன் உதித்தான். கடல் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாய், முந்தியதைத் தொடர்ந்த பிந்தியதாய் வந்து மொத்து மொத்தென்று தொங்கானை மோதின. பறவை மீன்கள் இருபுறமும் கூட்டம் கூட்டமாய்ப் பறந்து விளையாடின.

தொங்கான் மிதந்து சென்றது, கடலின் இழுவைக்கிணங்கி.

பகல் இரவாகி பகலாகி இரவாகியது. பிறைமதி வெளிச்சம் சிந்திற்று - கருநீலவானில் விண்மீன்கள் ஒளியுடன் கண் சிமிட்டி நின்றன. உப்பங்காற்று உடலை வருடியது. அவுலியா மீன்கள் கூட்டம் கூட்டமாய், கண்மாயில் முதுகு தெரிய மூழ்கி நீந்தும் எருமைகளென முனகல் ஒலியோடு பின் தொடர்ந்தன.

அலைகள் நெளிந்தோடின.

கடற்கூத்துக்குப் பின் ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய்க் கடலோடு கடலாய் மரப்பச்சை தெரிவது போலிருந்தது.

சுமார் அரைமணி நேரத்துக்குப் பின் மீன்பிடி படகு விளக்குகள் தென்பட்டன.

கரை! கரை! கரை!

           அடுத்தநாள் முற்பகலில் பினாங்குத் துறைமுகத்தை அணுகினார்கள். மணிக்கூண்டு  தெரிகிறது. வெல்ட்கீ கட்டட வரிசை. தெருவில் திரியும் வண்டிகள், ஆட்கள்...

தொங்கான் கரையை நெருங்கிப் போய் நின்றது. தொலைதூர நாவாய்கள் கரையை மொய்த்திருந்தன. ஒவ்வொன்றிலிருந்தும் கேள்வி எழுந்தது.

"எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கிருந்துவருகிறீர்கள்?"

"பிலவான்... பிலவான்."

சுமத்ரா பிரயாணிகள் துடுப்புப் படசி

இறங்கிப் போய் நடைபாலத்தில் ஏற

 நட ந்து    சுங்க அலுவலகத்திற்குச் சென்று பிரயாணஅனுமதிச் சீட்டுகளை நீட்டினர்.

"தமிரோ?" ஜப்பானிய அதிகாரி உறுமினார்.

"யா, மஸ்தா." தமிழர்கள்தாம் என்றுதலைகுனிந்து வணங்கித் தெரிவித்தனர்.

பிரயாணிகளைச் சில விநாடிகள்

நோட்டமிட்ட அதிகாரி, சீட்டுகளில் முத்திரைவைத்துத் திருப்பிக் கொடுத்தார்.


*********************    *******************


வாழ்த்துகள் நண்பர்களே ! 
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !

**********************    *********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************    *******

Post a Comment

0 Comments