பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கற்கண்டு - எழுத்து , சொல் / இனிய , எளிய எழுத்து & காட்சிப் பதிவு விளக்கம்.

 

வகுப்பு - 10    -   தமிழ்

இயல் 1   -  மொழி  - கற்கண்டு 

எழுத்து , சொல் 


************************   *******************

                       இலக்கணம்


மொழியை எவ்வாறு பேசவும் , எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்தான் மனிதன். அந்த வரையறையே இலக்கணம் ஆகும்.

          மொழியைத் தெளிவுறப் பேசவும் , எழுதவும் உதவுவது இலக்கணம். மொழியின் சிறப்புகளை அறியவும் இலக்கணம் துணை செய்யும்.


*********************   *********************

         மாணவ நண்பர்களே ! வணக்கம். நாம் முன்வகுப்பில் கற்ற சில செய்திகளை நினைவு கூர்ந்து இப்பாடப்பகுதிக்குச் செல்வோம் ! 

சரிங்க ஐயா. நீங்கள் கேட்கக் கேட்க நாங்கள் நினைவு படுத்திச் சொல்வோம் !

மகிழ்ச்சி. தமிழால் தரணியை வெல்வோம் !

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை என நாம் முன் வகுப்பில் கற்றோம் ?

ஐந்து ஐயா. 

அருமை. அவை யாவை ?

ஐயா நான் சொல்கிறேன்.

1 ) எழுத்து இலக்கணம்

2 ) சொல் இலக்கணம்

3 ) பொருள் இலக்கணம் 

4 ) யாப்பு இலக்கணம்

5 ) அணி இலக்கணம்


அருமை ! அருமை . கையொலி மூலமாகக் கண்ணனை வாழ்த்தலாமே !

இப்போது நாம் முதலாவதாக இருக்கக் கூடிய எழுத்து இலக்கணம் பற்றிய சில செய்திகளைக் காண்போம் .

பேச்சு ஒலிக்குக் கொடுக்கப்படும் வடிவம் எழுத்து ஆகும், எழுத்துகள் சேர்ந்து சொற்களாகும்.சொற்கள் சேர்ந்து தொடர் உருவாகும், அப்படியானால் , சொற்கள் உருவாக அடிப்படையாக இருப்பது எது ?

எழுத்துகள் ஐயா.

அருமை ! அருமை !

நம்முடைய தமிழ் மொழிக்குரிய அடிப்படையான எழுத்துகளை இருவகையாகப் பிரித்துள்ளார்கள். அவை என்ன ?

1 ) முதல் எழுத்து 

2 ) சார்பெழுத்து ஐயா.

மகிழ்ச்சி தம்பி. இதில் முதல் எழுத்தை எத்தனையாகப் பிரித்துள்ளார்கள் ?

இரண்டு வகை ஐயா. 

1 ) உயிர் எழுத்து 

2 ) மெய் எழுத்து

அருமை அருமை ! 

இப்பப் பாருங்களேன்.

மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலி

எழுத்து , அது முதல் சார்பு என இரு வகைத்தே

    என நன்னூல் சூத்திரம் சொல்கிறது. அதாவது , மொழிக்கு அடிப்படையான எழுத்துகள் அணுத்திரள்களால் ஆன ஒலியால் உருவாகின்றன. அவை முதல் எழுத்து , சார்பெழுத்து என இருவகைப்படும்.

சரிதானய்யா ? 

சரிங்க ஐயா.

முதல் எழுத்துகள் எத்தனை ?

30 ஐயா.

அருமை . அதை 

உயிரும் உடம்புமாம் முப்பது முதலே .

என நன்னூல் சூத்திரம் சொல்கிறது.

அதாவது,

 உயிர் எழுத்துகள் - 12

மெய் எழுத்துகள்  -  18 

      மொத்தம்           = 30

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ - 12 

இதில் அ இ உ எ ஒ - ஐந்தும் உயிர்க்குறில்

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ - ஏழும் உயிர் நெடில்

இதில் குறில் எழுத்துகளுக்கு ஒரு மாத்திரை.

மாத்திரை என்றால் என்னப்பா ?

மாத்திரை என்பது கால அளவு ஐயா. அதாவது , ஒரு முறை கண் இமைக்கவோ , ஒரு முறை கை நொடிக்கவோ ஆகும் கால அளவு ஐயா.

சிறப்பு . வாழ்த்துகள் தம்பி.

அப்படியானால் ,

குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1

நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 2

மாத்திரை.

இப்ப உயிர் எழுத்துகளைப் பார்த்தோம். அடுத்து மெய் எழுத்துகள்.

மெய் என்றால் என்ன ?

மெய் என்றால் உண்மை என்று பொருள் ஐயா. இன்னொன்று உடம்பு என்ற பொருளும் உள்ளது ஐயா.

சரியாகச் சொன்னாய் தம்பி. இங்க , மெய் என்பது உடம்பு என்று பொருள் படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு மிக முக்கியமானது.

மெய் எழுத்துகள் மொத்தம் = 18

இதில் , 

க் ச் ட் த் ப் ற் - என்ற ஆறும் வல்லினம்

ங் ஞ் ண் ந் ம் ன்  ஆறும் மெல்லினம்

ய் ர் ல் வ் ழ் ள் ஆறும் இடையினம்.

மெய் எழுத்துகளை ஒலிக்கும் கால அளவு அரை மாத்திரை.

அடுத்ததாக நாம் நினைவூட்டல் செய்ய வேண்டியது சார்பெழுத்துகள். முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள். அதாவது நம்ம அப்பா , அம்மா முதல் எழுத்துகளாக இருக்காங்க. பிள்ளைங்க நீங்க அவங்களைச் சார்ந்து இருக்கிங்க. அதனால நீங்க சார்பெழுத்துகள்னு நினைவில வச்சுக்கோங்க.

சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?

பத்து வகை ஐயா. 

1 ) உயிர்மெய்

2 ) ஆய்தம்

3 ) உயிரளபெடை

4 ) ஒற்றளபெடை

5 ) குற்றியலிகரம்

6 ) குற்றியலுகரம்

7 ) ஐகாரக்குறுக்கம்

8 ) ஔகாரக்குறுக்கம்

9 ) மகரக் குறுக்கம்

10 ) ஆய்தக் குறுக்கம்.

அருமை அருமை தம்பி.

மெய் எழுத்துகளும் , உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.

ஆய்தம் 

மூன்று புள்ளிகளை உடைய தனி வடிவம் .

இதை முப்புள்ளி , முப்பாற்புள்ளி , தனிநிலை , அஃகேனம் என்று சொல்வார்கள்.

**********************    ********************

 சரி தம்பிகளா ! மிக அருமையாக நினைவூட்டல் செய்து சொன்னிங்க. இனி நாம் நமது பாடப்பகுதிக்குச் செல்லலாம். ஏனென்றால் இப்ப நமக்கு அடிப்படையான செய்திகள் தெரியும். 

    இன்று நாம் உயிரளபெடை  , ஒற்றளபெடை பற்றிக் காண உள்ளோம். நம்முடைய பெரும்புலவர்.அவர்களின் இனிய , எளிய காட்சிப் பதிவு விளக்கமும் தரப் போறோம். அதனால இந்தக் கற்கண்டு மிக இனிக்கும்.

இப்ப நாம் மேல கண்ட உரையாடலை காட்சிப் பதிவாகக் காண்போம். அடுத்த பகுதியில் அளபெடைகள் பற்றி விரிவாகக் காண்போம்.

மகிழ்ச்சி தம்பிகளா . காட்சிப் பதிவைக் காண்போமா ? 

காண்போம் ஐயா.




என்ன தம்பிகளா ? எளிமையாகப் புரிந்ததா ? ஆம் ஐயா. பெரும்புலவர் ஐயா அவர்களுக்கு எங்களது நன்றி.

சரி தம்பிகளா . அடுத்த பாடவேளை என்ன ?

அறிவியல் ஐயா.

மகிழ்ச்சி. மணி அடிக்கப் பணி முடிந்தது. நாளை சந்திப்போம். மீண்டும் ஒருமுறை இல்லத்தில் காட்சிப்பதிவைக் கண்டு உங்கள் உள்ளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள் . நன்றி.

நன்றி ஐயா.

ஆக்கம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர்                      இளமனூர் , மதுரை. 97861 41410


*********************   *********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.


GREENTAMIL.IN - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     ****************

Post a Comment

1 Comments

  1. மிகவும் எளிமையான முறையில், அழகான நடையில் கற்கண்டு போலவே உள்ளது.அருமை அருமை. வாழ்த்துகள் ஐயா 👏💐👏

    ReplyDelete