பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழி - விரிவானம் - உரைநடையின் அணிநலன்கள் - இனிய ,எளிய எழுத்து & காட்சிப்பதிவு விளக்கம்.

 


பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1

மொழி - உரைநடையின் அணிநலன்கள்

                                                - எழில் முதல்வன்.




          வணக்கம் அன்பு மாணவ நண்பர்களே! 

மாற்றம் என்ற சொல் மட்டுமே மாறாதது. மற்ற அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது.     இது அறிவியல் யுகம்.உலகத்தை நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட்டது அறிவியல். கடிதம் எழுதி காத்திருந்த காலம் மலையேறி விட்டது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் முகம் பார்த்துப் பேசும் திறன் பேசிகளை ( SMART PHONE ) மனித மூளை கண்டு பிடித்து விட்டது. 

இதைத்தான் அன்றே நம் பாட்டுப் பாட்டன் பாரதி பாடினான்.

' காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் 

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் ! 

என்றான். அடடா ! என்னே ஒரு தீர்க்கதரசி பாருங்கள் . அது மட்டுமா ?

வானை அளப்போம் ! கடல் மீனை அளப்போம் ! சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் ! என்றும் பாடினான்.

  பாரதி காலத்தில் சந்திர மண்டலத்திற்குப் போக முடியுமா ? என நினைத்திருக்கலாம். ஆனால் இன்றோ அதுசாத்தியமாகி விட்டது.

     ஏம்பா ! தம்பி . மே மாத விடுமுறைக்கு சுற்றுலா போனிங்களா ! 

ஆமாம் ஐயா. ஊட்டிக்குப் போனோம் .

நீங்க எங்க போனிங்க தம்பி ?

கொடைக்கானல் போனோம் ஐயா.

     இன்று இப்படிச் சொல்கின்றனர் இந்தத் தலைமுறை மாணவர்கள். இன்னும் ஓர் 25 ஆண்டுகள் அல்லது 50 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த உரையாடல் இப்படி மாறிவிடும்.


தம்பி  எங்க சுற்றுலா போனிங்க ?

செவ்வாய் கிரகத்துக்குப் போனோம் ஐயா. அங்க எங்க அம்மாவோட தங்கை அதாவது எங்க சித்தி இருக்காங்க. உன் நண்பர்களோட வா தம்பி. செவ்வாயச் சுத்திப் பாக்கலாம்னு எங்க சித்தி சொன்னாங்க . அதான் ஒரு நாள் அங்க போயிட்டு வந்தேன். 

வேறெங்க போனிங்க ?

மாமியார் , மருமக சண்டையில் ரொம்ப வருசத்துக்கு முன்பே , அதாவது நான் பிறப்பதற்கு முன்பே எங்க பாட்டி கோவிச்சுக்கிட்டு நிலாவுக்குப் போயிட்டிங்களாம் ஐயா. நான் பூமிக்கு வருவதற்கு எனக்கு வரவேண்டிய செயற்கைக்கோள் வர இரண்டு மணி நேரம் ஆகும் என்றார்கள். அப்போது நிலாவிற்குச் செல்ல ஒரு செயற்கைக்கோள் தயாராக இருந்தது. உடனே நிலாவிற்குச் சென்று எங்கள் பாட்டியைப் பார்த்து இரண்டு வடை சாப்பிட்டு , அவர்களுக்குத் தேவையான எண்ணெய் , மாவு மற்ற பொருட்களையெல்லாம் ஒரு கண்டெய்னர்ல போட்டு அனுப்பி விட்டு வந்தேன் ஐயா.

 அருமை அருமை தம்பி. உங்க பாட்டியை விட நன்றாக நீங்கள் வடை சுடுகிறீர்கள். 

மகிழ்ச்சி ஐயா . ஒரு பேரனாக இது எனது கடமை ஐயா. 

அவர்கள் வியாபாரம் எப்படிச் செல்கிறது ?

அமெரிக்கர்கள் அடிக்கடி அங்கே அதிகாலையில் நடைப்பயிற்சிக்குச் செல்கிறார்கள் ஐயா. அந்த நேரத்தில் சுடச்சுட வடை போடுவதால் நல்ல வியாபாரம் ஆகிறது.

ஓ ! மகிழ்ச்சி தம்பி. 

 அந்த நேரத்தில் தமிழாசிரியர் தரணி வேந்தன் வருகிறார். 

ஐயா . வணக்கம். தங்கள் மனைவியைப் பார்த்து வருவதற்காக புதனுக்குச் சென்றிருந்தீர்களோ ?

இல்லை ஐயா. அவர்கள் தற்போது சனியில் ( சனிக்கிரகம் ) இருக்கிறார்கள். அவரது சகோதரி புதிதாய் வீடு ஒன்று அங்கு வாங்கிக் குடியேறி உள்ளார். 

ஓ ! அப்படியா ? மகிழ்ச்சி ஐயா. தங்களுக்குச் சனி பிடிக்கட்டும். 

ஐயா !

இல்லை இல்லை. சனிக்கிரகமும் இனி, தங்களுக்குப் பிடித்து விடும் என்று சொன்னேன். 

ஆம் ஐயா. !

( நண்பர்களே ! இது இன்று உரையாடலாக இருக்கலாம். இதுவும் வருங்காலத்தில் நடக்கலாம் . உரையாடல் ஆக்கம் - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் )

   மாற்றம் எனது மானிட தத்துவம் ! என்றார் கவியரசு கண்ணதாசன் அவர்கள். மாறிவரும் காலத்திற்கேற்ப நம் தாய்மொழியும் இணைந்து செல்கிறது என்பது  வியப்புதானே ! 

இயல் , இசை , நாடகம் என முத்தமிழ் நம் மனதைக் கொள்ளை கொள்கிறது. காலச்சூழல் மாறிவருகிறது. அதற்கேற்ப மொழியும் தன் வடிவமைப்பை மாற்றி வருகிறது.

 இன்று நம் இதயங்களை இணைப்பதாக இணையம் இருக்கிறது. நம் உடலிற்கு இதயம் எவ்வளவு தலையாயதோ , அதைப்போல இன்று இணையம் நம் தொடர்பிற்குத் தலையாயதாக உள்ளது. இணையத் தொடர்பு கிடைக்கவில்லை என்றால் தலை வெடித்துவிடக் கூடிய மனநிலையில் இன்று நாம் இருக்கிறோம்.

சங்கத் தமிழன் ஒருவரும் , இணையத்தமிழன் ஒருவரும் சந்தித்து உரையாடுவதாக நமக்கு ' உரைநடையின் அணிகலன் ' என்ற இப்பாடப்பகுதியினை எழுதியிருப்பவர் எழில் முதல்வன் என்ற புனைப்பெயரை உடைய பேரா.மா.இராமலிங்கம் என்பவர். மிக அருமையான கட்டுரை. ' புதிய உரைநடை ' என்னும் நூலுக்காகச் சாகித்திய அகாதமி விருதால் சிறப்பிக்கப் பட்டவர். 

இதில் நுழையும் முன் -  என்ற பகுதி இப்பாடத்தின் மையக்கருத்தை நம் மனம் நெகிழும்படி கூறுகிறது. அதைக் காண்போமா ?

            சங்க இலக்கியம் நம் பாட்டனார் தோப்பு ; இடைக்கால இலக்கியம் நம் தந்தையார் தோட்டம் ; இக்கால இலக்கியம் நம் பூங்கா . தோப்பு ஈந்த பயன்களையும் , தோட்டம் தந்த நயங்களையும் , பூங்காவின் அழகினையும் ஒன்று சேர்த்து உரைநடையின் அழகினைக் காண்போமா ? 

கற்பனை உரையாடலில் பங்குபெறுவோர் 

இணையத் தமிழன் , சங்கப் புலவர்.


நண்பர்களே ! இந்த உரையாடலில் உள்ள செய்திகளை இப்போது நாம் நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் உரை மூலம் காட்சிப் பதிவாகக் காண்போம்.





மாணவ நண்பர்களே ! உரைநடையின் அணிநலன்கள் பாடத்தை பெரும்புலவர்.ஐயாவின் உரையில் கண்டு மகிழ்ந்தீர்களா ? பாடக்கருத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சுயமாகச் சிந்தித்து உரையாடல் நிகழ்த்துங்கள். நம் அன்னைத் தமிழ் மொழியின் அருமைதனைப் படித்து அகமகிழ்வோம் !

இணைந்திருப்போம் இதயத்தோடும் , இணையத்தோடும் !

நான் உங்கள் தமிழாசிரியர் , 

மு.மகேந்திர பாபு , மதுரை - 97861 41410

****************************    ************************************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.


GREENTAMIL.IN - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.




Post a Comment

0 Comments