அம்மி
@ ஐந்தாறு தெருவரை
காற்றில்
அசைந்தாடி வரும்
அம்மாவின் சமையல் வாசம் .
@ கோழிக் குழம்பு ,
மீன் குழம்பு
கருவாட்டுக் குழம்பு என்றில்லாமல் ,
கத்தரிக்காய் குழம்பும்
கமகம என மணக்கும் .
@ காரணம் அம்மிதான் .
அம்மா அம்மியில் அரைப்பதே
ஓர் அழகுதான் .
@ வயலினை மீட்டுவதைப் போல்
அம்மிக்கல்லை
முன்னும் பின்னுமாய்
இலாவகமாய் அரைப்பாள்.
@ இடது காலை நீட்டி ,
வலது காலை மடக்கி ,
தேங்காய் சில்லை
அம்மி நடுவில் வைத்து ,
இடது கைப்பிடியை அழுத்தி ,
வலது கைப்பிடியை தூக்கி ,
@ நச்சட்டி நச்சட்டி என
அடிக்கும் போது
சில் விரிசல் கண்டு
அன்பின் வலியால் கண்ணீர் விடும் .
@ சில வழுக்கைத் தேங்காய்
சில்லுகள்
போக்கு காட்டும்
அம்மியில் அகப்படாமல் .
@ அப்போதுதான்
அம்மாவிற்கு கோபம் கொஞ்சம்
தலை தூக்கும் .
@ அம்மி கொத்தரவனக் கூப்பிட்டு
கொத்தினாத்தான் என்ன ?
தேங்காய்ச் சில்லும் வழுக்க,
அம்மியும் வழுக்க ....
அரைப்பதும் வழுக்க ...
என எப்போதாவது
கோபம் கொட்டுவாள் .
@ அரைத்து முடித்துடன் ,
அம்மியில் இருக்கும் கூழினை
குழவிக் கல்லிற்கு கொண்டு வந்து ,
செங்குத்தாய் நிறுத்தி ,
வலக்கையின் ஆட்காட்டி விரலால்
எடுத்து ,தட்டில் போடுவாள் .
@ அரைத்து அரைத்து அம்மியும்
நடுவில் பள்ளமாகி ,
வில்லாகிப் போனது .
@ இன்று பல
மம்மிகள் உடலளவில்
டம்மியானதற்குக் காரணம்
அம்மியை மறந்து -வேலையை
கம்மியாக்கிக் கொண்டதால்தான் .
@ அங்கும் இங்கும்
இயந்திரங்கள் வைத்து
அரைக்கையில்,
அம்மாவின் துணை என்னவோ
அம்மி மட்டும்தான் .
@ அதனால் ...
ஐந்தாறு தெருவரை
காற்றில் அசைந்தாடி வரும்
அம்மாவின் சமையல் வாசம் .
மு.மகேந்திர பாபு
0 Comments