கும்பா
இரண்டு, மூன்று
தலை முறையின்
நினைவுச் சின்னமாய்
பரணில் படுத்துக் கிடக்கிறது
கும்பாவும்,இணை லோட்டாவும்,
தாத்தாவின் இறப்பிற்குப் பின்
கும்பாவைத் தேடுவாரில்லை வீட்டில் !
சில கரப்பான் பூச்சிகளுக்கு
வீடாகவும் ,
சில சிலந்திகளுக்கு
ஒரு சிப்பந்தியாகவும்
தன்னை அடக்கிக் கொண்டு விட்டது கும்பா.
இரு தலைமுறைக்கு முன்
இருந்த தாத்தாவின்
வலிமைக்கு
அது ஓர் உதாரணம் .
கம்மங் கஞ்சியை கரைத்து
கருவாடோடு சாப்பிடுகையில்
தாத்தா கும்பா கும்பாவாய்
சாப்பிடுவாராம் .
தட்டுக்களில்
சாப்பாடு என்றால்
தத்தாவிற்குப் பிடிக்காது .
சாப்பிட்ட மாதிரியே
இல்லையே என்பாராம்.
கும்பாவை புளி கொண்டு
கழுவுவார்கள் போலும் .
இன்றும் கூட
அதன் பளபளப்பு தெரிகிறது .
நவ நாகரிக காலமான இன்று
காலை,இரவு டிபன்
என்றாகிவிட்ட சூழலில்
கும்பாவைத் தேடுவாரில்லை .
ரம்பாவைத் தெரிந்திருக்கும்
இளைஞர்களுக்கு
கும்பாவைத் தெரியுமா ?
பரணில் படுத்திருக்கும் கும்பா
தாத்தாவின் நூறுவயது
வாழ்க்கையை அவ்வப்போது
சத்தமில்லாமல் எனக்கு
அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது
தாத்தாவின் புகைப்படத்தைப் போல கம்பீரமாய் !
மு.மகேந்திர பாபு
0 Comments