மண்ணில் மலரட்டும் மரமும் மனிதமும் - கட்டுரை - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

  மண்ணில் மலரட்டும் மரமும் மனிதமும். கட்டுரை. மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.97861 41410. ' 


                    உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் ' என்றார் மகாகவி பாரதி.மண்ணில் மலர்ந்து விட்ட ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்தும் உயிர்களே ! அதனால்தான் ' காக்கை குருவி எங்கள் சாதி ' என்று மகாகவியால் பாட முடிந்தது.மனிதர்கள் மட்டும் மாண்புடையவர்கள் அல்லர். மரமும் மாண்புடையதே ! அவரவர் நிலையில் , அதனதன் நிலையில் ஒவ்வொன்றின் பிறப்பிலும் சிறப்பு நிறைந்திருக்கும்.மனிதர்களின்றி மரங்கள் மகிழ்வாய் இருக்கும். ஆனால் , மரங்கள் இன்றி மனித இனம் மண்ணில் வாழவும் முடியாது. மண்ணை ஆளவும் முடியாது. பறவைகளையும் , விலங்குகளையும் நம் உறவுகளாக நினைக்க வேண்டும். நம்மோடு அன்பில் இணைக்க வேண்டும். இன்றைய மாணவர்களுக்கு மட்டுமன்று , மண்ணில் வாழும் அனைவர் மன வயலிலும் விதைக்க வேண்டிய நல் விதைகள் இரண்டு. ஒன்று மனிதம் வளர்த்து மக்களைக் காப்பது . மற்றொன்று மரம் வளர்த்து மண்ணைக் காப்பது. இன்றைய உலகில் இரு கண்களாகக் காக்க வேண்டியவை இவை இரண்டுமே !

 எந்திர உலகம் 

                   எங்கு நோக்கினும் எந்திரம் ! இதயத் துடிப்புகளை விட எந்திரங்களின் துடிப்புகளே எங்கும் கேட்கின்றன.எந்திரங்களோடு பயணிக்கும் மனித இதயங்களிடம் மனிதம் மரணித்து விட்டதோ என்ற ஐயம் எழலாம்.காலையில் நாம் பயணிக்கும் சாலையில் மயங்கி விழுந்த மனிதரைத் தூக்கி விடுவதற்கு யாரோ ஒருவர் வருவார் ; தண்ணீர் தருவார் ; நமக்கோ நேரமாகி விட்டது. சரியான மணிக்கு பணிக்குச் சென்றாக வேண்டுமே என ஓடுகிறோம். ஐயோ ! பாவம் . என்னாச்சோ ! யார் பெத்த பிள்ளையோ என சோகம் பாடுகிறோம் ! ஆனாலும் , மனிதம் நிறைந்த மனிதர்கள் மயங்கி விழுந்தவருக்கு முதலுதவி செய்தும் , உணவு தந்தும் , மருத்துவ மனையில் சேர்த்தும் உதவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி எதுவென்றால் , இன்னலில் உள்ள இதயங்களை மகிழ்ச்சிப் படுத்தி , அதுகண்டு நாம் மகிழ்வது. அப்படிப்பட்ட உதவும் நல்ல உள்ளங்களைச் சிறப்பிக்கவே அவ்வப்போது மழைத்துளிகள் பன்னீர்த்துளிகளாய் மண்ணில் விழுந்து , மக்களின் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கின்றது. இயற்கை புல் , பூண்டுகளைப் படைக்கிறது. 

 அண்ணலின் நேயம். 

                           உலகெங்கும் உள்ள உள்ளங்கள் உச்சரிக்கும் ஒற்றைப் பெயர் மகாத்மா காந்தி. பிற உயிர்களையும் தம் உயிராய் , தம் உயிரினும் உயர்வாய் நினைத்த உள்ளம் அது. அதனால்தான் ' உலக உத்தமர் ' என்று நாம் அழைத்து மகிழ்கின்றோம் . பிறந்து நூற்றைம்பது ஆண்டுகள் ஆனபின்பும் ஒருவரின் பிறப்பை , பிறப்பின் சிறப்பை ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாம் தேதியில் கொண்டாடுகிறோம் என்றால் அது அவர் செலுத்திய அன்பிற்காகவும் , நேயத்திற்காகவும்தானே ! காந்தியடிகள் , பல்துலக்க உதவிய வேம்பின் மீதும் அன்பு செலுத்தினார். கொடிய விஷம் கொண்ட பாம்பின் மீதும் அன்பு செலுத்தினார். துப்பாக்கிகளும் , பீரங்கிகளும் அவரின் கைத்தடிக்கு முன் தலைகவிழ்ந்தே கிடந்தன. அதனால்தான் அவர் பிறந்த தினத்தை ஐ.நா.சபை உலக அகிம்சை தினமாகக் கொண்டாடி மகிழ்கிறது. ஆம் ! இந்த உலகத்திற்கே அகிம்சையைப் போதித்து , அன்பால் நேசித்து , இன்றும் மக்களால் பூஜித்து வணங்கப் படுகிறார் மகாத்மா காந்தியடிகள். போர்ப்பந்தரில் பிறந்து , போரே வேண்டாமென்று இந்தப் பாரே போற்றும் விதமாக அனைவர் மீதும் நேயத்தோடு வாழ்ந்து , இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.                              

                             ஒரு முறை எரவாடா சிறையில் காந்தியடிகள் இருந்த போது அவருடன் சபர்மதி ஆசிரம ஆசிரியர் காலேல்கர் என்பவரும் உடன் இருக்கிறார். அந்தச்சிறை வளாகத்திற்குள் வேப்ப மரங்கள் ஏராளம் இருந்தன. காந்தியடிகள் தினமும் வேப்பங்குச்சியால்தான் பல்துலக்குவார். ஆனால் தினமும் புதுப்புது குச்சிகளை ஒடிக்காமல் , ஒருமுறை பயன்படுத்திய குச்சியையே மீண்டும் மீண்டும் கழுவிப் பயன்படுத்துவார். அதைக்கண்ட காலேல்கர் , இங்குதான் ஏராளமான மரங்கள் இருக்கின்றனவே ! தாராளமாக ஒடித்து பல்துலக்கலாமே என்று கேட்டார். அதற்கு காந்தியடிகள் , நம்மைப் போன்றவைதான் மரங்களும். அவற்றிற்கும் உயிர் இருக்கின்றது . உணவு உண்கிறது. சுவாசிக்கிறது. உறங்குகிறது. நமக்கு அடிபட்டால் எப்படி வலிக்குமோ , அதுபோலவே மரத்தின் கிளைகளை ஒடிக்கும் போது அதற்கும் வலிக்கும். தன் வலியை மரத்தால் சொல்ல முடியாது.நமது தேவைக்காக ஒரு மரத்திற்கு வேதனை தரும்போதும் கூட , குறைந்த பட்ச வேதனையைத்தான் தரவேண்டும் என்றாராம். அதனால்தான் மகாத்மாவாக இன்றும் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார். 


 மனிதம் காப்போம் ! 

                          மக்கட்பெருக்கத்தால் இல்லங்கள் நெருக்கமாகி விட்டன. ஆனால் , உள்ளங்களோ தூரமாகி விட்டன. அருகருகே இருந்தாலும் அந்நிய தேசத்தில் வாழ்பவர்களைப் போல வாழ்கிறோம். திறக்கப்படாத வீட்டுக் கதவுகளைப் போலவே நம் மனங்களும் பூட்டியே கிடக்கின்றன. அதில் அன்பும் , நேயமும் , உதவும் எண்ணமும் மாட்டிக்கொண்டிருக்கின்றன. மக்கள் நலம் விரும்பும் ஒரு சிலரே , களம் இறங்கி தன்னால் இயன்றதைச் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை நினைக்கும் போது மகிழ்வாய் இருக்கிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக , இதமாக ஒருவரை இங்கே குறிப்பிடலாம். ஆம் நண்பர்களே ! பிழைப்பிற்காக முத்து நகராம் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு வந்து , பெருந்தொற்றுக் காலத்தில் தான் யாசித்த பணத்தில் சிறு பகுதியை தன் உணவுக்காக மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகிறார். ஒருமுறை இருமுறை அல்ல. பத்தாயிரம் , பத்தாயிரமாக பதினைந்தாவது முறையாக வழங்கி இருக்கிறார். அந்த மனித நேயரின் பெயர் எழுபது வயதான பூல்பாண்டியன். எழுபதாவது ஆண்டில் இதழியல் துறையில் வெற்றி நடை போடும் தினமலர் அந்த மனிதரின் சேவையை உலகத்திற்கு வெளிச்சப் படுத்தி வருகிறது. உதவும் உள்ளங்களுக்கு ஊக்கம் தருகிறது. உதவி செய்வதற்கு உயர் பதவியில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் உள்ளம் உயர்ந்திருந்தால் போதுமானது. 


 மரமெனும் பிள்ளை. 

                      நிலமடந்தைக்கு அணிகலன்களாக இருப்பவை மரங்கள். பறவைகளுக்கும் , விலங்குகளுக்கும் கட்டணம் பெறாமலே தன்னை முழுமையுமாய்த்தந்து உறவாய் இருப்பவை மரங்கள். பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் கரம் பிடித்து அழைத்துச் செல்பவைகளும் மரங்களே ! இந்தப் பூமிப்பந்தில் தன்னலமற்ற ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் அது மரங்கள் மட்டுமே ! மண்ணில் தோன்றி மண்ணில் மறையும் மரங்களும் மண்ணின் மக்களே ! மரங்களோடு வாழ்தல் என்பது வரம். அந்த அனுபவத்தை வார்த்தையில் வடித்து விட முடியாது. மரங்களோடு வாழ்ந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். மரங்களோடு உரையாடினால் , உறவாடினால் மட்டுமே அந்த சுகானுபவம் நமக்குக் கிடைக்கும். 

                            தினமும் காலையில் மரத்தின் முகத்தில் முழித்துப் பாருங்கள் . அன்றைய நாள் முழுமையும் பசுமையாக , இனிமையாக இருக்கும் . வீடடையும் மனிதர்களைப்போல , மாலையில் கூடடையும் பறவைகளின் மொழி கேட்பது ஆனந்தம் தரும். நம் வீட்டில் புதிதாய் ஒரு மழலை பிறந்தால் எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்குமோ , அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியினை ஒரு மரக்கன்றை மண்ணில் நடும்போது நம் மனம் பெறும். அந்த மரம் நம் வாழ்வோடு கூடவே வரும். நம் பிள்ளையைப் போல் ஆனந்தம் தரும். நாம் ஓடியாடி உழைப்பது நம் பிள்ளைகளுக்குச் சொத்தும் , சுகமும் தருவதற்காக என்போம். கொத்துக் கொத்தாய்ச் சொத்துத் தரலாம். சுகம் தர முடியாது. சுகமாய் , நலமாய் , வளமாய் வாழ மரங்கள் வேண்டும். அப்போதுதான் சுத்தமான காற்று நம் சுவாசத்தைத் தீண்டும். சொத்துச் சேர்ப்பதோடு சூழல் காக்க நம்மால் இயன்ற மரங்களையும் நட்டு வைப்போம் . இருக்கும் மரங்களை விட்டு வைப்போம். இவர் உன் மாமா , உன் அத்தை , சித்தப்பா , சித்தி என உறவுகளை அறிமுகம் செய்து வைப்பது போல , நம் பிள்ளைகளுக்கு இது வேம்பு , புங்கன் , ஆல் , அரசு என மரங்களையும் அறிமுகம் செய்து வைப்போம். வருங்காலத் தலைமுறை நல்ல மனங்களோடும் , மரங்களோடும் வளரட்டும். நல்வாழ்க்கை மலரட்டும். 

 ஆனந்தம் ஆரம்பம்.

                         நம் வீட்டில் பிறந்த நாள் விழாவா ? திருமண விழாவா ? புதுமனைப் புகுவிழாவா ? ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒரு வேளை உணவு தருகிறீர்களா ? மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். இது நமது மனித நேயம். நம் வீட்டு விழாக்கள் புகைப்படம் எடுப்பதோடும் , காட்சிப்பதிவு செய்வதோடும் நின்று விடாமல் , அந்த விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்க்க நம் பிள்ளைகளால் வீட்டில் , வீதியில் மரம் நடப்பழக்குவோம். மரம் வளரும். நம் மழலைகளும் வளர்வார்கள். இருவரும் நட்பாகும் போது நாடும் நலம் பெறும். மனித நேயத்தோடு மரங்களின் நேயமும் மனதில் வளரும். உலகை உற்று நோக்க வெளிச்சம் தரும் இருவிழிகளில் ஒன்று மனிதம் சொல்லட்டும். மற்றொன்று மரங்களைச் சொல்லட்டும். விழிகளின் வழியே இப்போது ஆனந்தம் தெரிகிறது. கண்ணில் மனிதமும் , மண்ணில் மரமும் மலர்கிறது. 

 மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , அரசு ஆ.தி.ந.மே.நி.பள்ளி , இளமனூர் , மதுரை. பேசி - 97861 41410


Post a Comment

0 Comments