உலக மீனவர் தினம் - நவம்பர் 21 - சிறப்புக் கவிதை

 


நவம்பர் 21 - உலக மீனவர் தினம்.


கவிதை - மு.மகேந்திர பாபு.


கடற்கரைக்கு வாரிங்க 

பொழுதைப் போக்க !

கடலுக்குள்ள போறோம்ங்க

பொழப்பப் பாக்க !


காலாற நடக்கவும் ,

காத்து வாங்கவும் வாரீங்க !

கால் வயிற்றுப் பாட்டுக்காக

கடலுக்குள்ள போறோம்ங்க !


கடல் அன்னை உடல் மேல

துடுப்பு போடுறோம் !

கவலைகள் தீரந்திடத்தான்

ஏலோலோ பாடுறோம் !


அலை மேல வலை வீசி 

மீனைத்தான் தேடுறோம் !

விலை வந்து சேர்ந்திடவே

மகிழ்ச்சியில கூடுறோம் !


வானிலை நல்லாருந்தால் 

வாழ்க்கை நிலை நல்லாருக்கும் !

மேகமூட்டம் வந்ததுனா

சோகமூட்டம் முள்ளாருக்கும் !


இன்னல் தீர்க்கப் போகையிலே

மின்னல் வந்து வெட்டுதையா !

இடிஇடிச்சு வானத்தில

ஏகமாய் மழை கொட்டுதையா !


காத்தும் மழையும் கணக்கின்றி

கடலுக்குள்ள சுத்துதையா !

நேத்தும் இன்றும் உணவின்றி

குடல் பசியால கத்துதையா !


கலங்கரை விளக்கால 

படகோட கரை வந்தோம் !

கலங்காத மனம் கொண்டு

கைநிறைய காசு தந்தோம் !


காத்திருந்த பெண்டு பிள்ள

கட்டிப்பிடிச்சு கண்ணீர் விடும் !

கடலோடி எங்களுக்கு 

நெய்தல்தான் நெஞ்சத் தொடும் !


கொண்டு வந்து போட்ட மீனு

கரையிலதான் துள்ளுது !

காத்திருந்த சாதிசனம்

கைநிறைய அள்ளுது !


கைகொடுத்த கடல்தாயை

கரம்குவித்து கும்பிடுவோம் !

நாளைப் பொழுதும் நல்லதென

நாங்களும் நம்பிடுவோம் !


கடற்கரைக்கு வாரிங்க 

பொழுதைப் போக்க !

கடலுக்குள்ள போறோம்ங்க

பொழப்பப் பாக்க !


கவியாக்கம் - பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.














Post a Comment

2 Comments

  1. சிறப்பு,அருமை மீனவநண்பனாய் துயர் கண்டு துயரங்கொள்ளும் தொலைநோக்கு பார்வை அருமை.துன்பம் உணரும் வரிகள் சிறப்பு.வாழ்த்துகள்.👌👌🙏🙏🙏💐💐

    ReplyDelete