நடுச்சாமம்

நடுச்சாமம்

பக்கத்து ஊரில் விசேசம்
கல்யாணமா ?  காது குத்தா ? சடங்கா ? எழவா ? எனத் தெரியவில்லை. ஆனா , விளாத்தி குளத்திலிருந்து டெக் வாடகைக்கு எடுத்து படம் போடப் போறாங்க என்பது மட்டும் தெரிந்தது.

சேக்காளிகளாகச் சேர்ந்து திட்டம் போடடோம்.பழைய பேப்பர் அல்லது  புத்தகங்களை கிழித்து , பிடித்த கதாநாயகன் டிவியில் தோன்றும் போது பூக்களாகப் போட்டு வரவேற்பது என்று. 
சிலர் பேப்பரோடு சேத்து கல்லும் போடுவதால் டிவிக்காரன் செம உஷாராக இருப்பான்.

அப்போது ஏழோ , எட்டோ படிச்சுக்கிட்டிருந்த நேரம்.ஏதோ ஒரு நினைப்புல டிவி பாக்க நெனச்சத மறந்து தொழுவத்தில தூங்கிட்டேன்.திடீர்னு முழிப்புத்தட்ட , அடடா ! டிவி ல படம் பாக்கனுமே என்ற ஆச வந்தது. போர்த்தியிருந்த அம்மாவின் சேலையை  , உடம்பு முழுவதும் சுத்தி , தல மட்டும் தெரியும்படி வச்சு ஊருக்குள்ள நடந்து வாரேன். அதுஅதுக கவல மறந்து நல்லா தூங்குறாக.

. தெருவுல கிடந்த ரெண்டு மூனு  நாய்கள் என்னைப் பார்த்து ஏதோ சொல்லி , மீண்டும் தூங்கத் தொடங்கின . பாண்டி தொழுவத்தில் படுத்திருந்த பூனயப் பாக்க , கண்கள் மினுங்க பயம் அப்பிக் கொண்டது. தொரச்சாமி மாமா வீட்டிற் சன்னல் வழி கடியாரம் பாக்கேன்.சின்ன முள்ளிடம் ஏதோ ரகசியம் சொல்லி ஒன்றாக இறுகப் பிடித்திருந்தது பெரிய முள்.

அடடா ! மணி பன்னெண்டாச்சே !  சரி , ரோட்டு வரக்கும் போவோம்.ஆளுக இருந்தா படத்துக்கு , இல்லாட்டி வீட்டுக்கு என நெனச்சு நடந்தேன்.  ஒரு சுடுகுஞ்சியவும் காணோம்.

படம் பாக்க ஆச ஒரு பக்கம். பயம் ஒரு பக்கம்.இந்த நேரத்தில போகனுமான்னு. எங்க ஊர்க்கும் பக்கத்தில இருக்கிற நம்பியாரத்துக்கும் இடையில கம்மா மட்டுந்தான்.நடந்தா ஒரு கிலோ மீட்டர் தூரம். நடுவுல தட்சிணாமூர்த்தி கோவில்.அது தாண்டுனா சுடுகாடு.சுடுகாட்டுக்கடுத்து ஊரு.

கோவில் வரக்கும் போயிரலாம்.அப்புறம் சுடுகாட்ட எப்படித் தாண்டிப் போறது ?

ரோசன ஒருபக்கம். நடக்க ஆரம்பிச்சேன் ஏதோ ஒரு குருட்டு தெகிரியத்தில.தாம்போதைப் பாத வரையிலும் தெரு லைட். கடந்தா கெச இருட்டு. 

ரோடு போட கற்குவியல் கொட்டிக் கெடக்குது. சாமிய நெனச்சுக்கிட்டே , ஏதோ ஒரு பாட்ட முனுமுனுத்துக்கிட்டே நடக்கேன். பூச்சிகளோட சத்தம் , வீவண்டோட சத்தம். ரோட்டோரத்தில நடந்த எனக்கு கெதக்குனு இதயம் அடிக்குது.யாரோ கண்ணங்கரேர்னு குத்தவச்சு இருக்கிற மாதிரி. பக்கத்தில போனா தார் டிரம்.

கோவில்ட்ட வந்தாச்சு. அடுத்து சுடுகாடு.பகல்லேயே பீதியாகுமே !  நடுச்சாமமும் அதுவுமா ? நெஞ்ச அடைக்குது. பாடிக்கிட்டே வேக வேகமா நடக்கேன். ஒரு நிமிசந்தான்.பத்ரகாளியம்மன் கோவில் வந்திருச்சு.

உயிர் திரும்ப வந்தமாதிரி  இருந்தது. அமைதியான அந்த நேரத்தில் டிவி சத்தம் கேட்ட திசைய பாத்து நடந்து போயிட்டேன்.

கூட்டத்தோட கூட்டமா உக்காந்தேன்.  வெள்ளையும் சொள்ளையுமா போற செந்திலிடம் , கிணத்துக்குள்ளிருந்து கவுண்டமணி  கிரீஸ் டப்பாவை  எடுத்து தரச்சொல்லி கொண்டிருக்க , அது சேரன் பாண்டியன்  என்ற படமென பிறகு தெரிந்தேன்.

விடிந்தது. கம்மாப் பாத வழியா வீட்டுக்கு பசங்களோட போனேன். எங்க அப்பா வீட்டு வாசல்ல உக்காந்திருக்காரு. அம்மா என்னயப் பாவமா பாக்காங்க.

சேலைய கழுத்தில சுத்திக்கிட்டு அப்பாவப் பாக்கேன். கையில வெட்டருவா. இன்னொரு கையில செருப்பு. செருப்ப எடுத்து வேகமா எம்மேல வீச , படக்குனு குனுஞ்சிக்கிட்டேன்.

குனிஞ்ச தால , கோவம் கூடிருச்சி. அருவாவ கைக்கு மாத்துராரு. பக்கத்திலிருந்த செதுக்கியத் தூக்கி வீச ,  சடக்குனு பஞ்சாரத்த தூக்கி முன்னாடி காட்ட  , பஞ்சாரத்த ஓட்ட போட்டு கீழே விழுந்து. 

இனி , ஜென்மத்துக்கும் நடுச்சாமத்தில படம் பாக்க ஒத்தையா போகக்கூடாதுனு முடிவு பண்ணேன்.

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments