வகுப்பறை
புதிய புத்தகம் மணக்கிறது.
ஒவ்வொருநாளும்
என்னைப் புரட்டிக்கொண்டிருந்தால்
உன் எதிர்கால வாழ்க்கையும் மணக்கும்
என்பதைச் சொல்லாமல் சொல்லி !
# கரும்பலகையில்
நிறைந்து கிடக்கும்
வார்த்தைகளில்தான்
மறைந்து கிடக்கின்றது
மாணவர்களின் வாழ்க்கை.
# ஆசிரியர்களையும் ,
மருத்துவர்களையும் ,
பொறியாளர்களையும் இன்னபிற
பணியாளர்களையும் பிரசவித்த வகுப்பறை
முதன்முதலாய் மகிழ்ந்தது
நல்ல மனிதனை பிரசவித்தபோது !
# ஒவ்வொரு
வகுப்பறையாய்த் தேடியும்
மாணவர்களின்
குரல்களைக் கேட்க முடியாமல்
மயங்கி விழுந்தது
மே மாத விடுமுறையில் காற்று !
# பால்யத்தில் பைக்கூடு
சுமந்த தோள்களில்
மகிழ்ச்சியோடு பயணிக்கிறது
குடும்பத்தின் சுமை .
# பள்ளிக்கூடம் வந்தவுடன்
செடிகளிடம் பேசும்
மாணவர்களிடம் பூத்துக்கிடக்கிறது
மனமும் , வனமும்.
மு.மகேந்திர பாபு ஆசிரியர் ,
1 Comments
ஐயா இந்தக்கவிதையானது அருமையாக இருக்கிறது ஐயா
ReplyDelete