கிராமத்துக் காதல்
காடெங்கும் நிறைஞ்சிருக்கு கம்மங் கருது - என்
மனசெங்கும் நிறைஞ்சிருக்கு உந்தன் நினைப்பு
குருவிக்கூட்டம் வந்து வந்து தின்னு போகுது
என் உசுரக் கொஞ்சம் உன் நினைப்பு கொன்னு.போகுது
காளை மாடு கழுத்து மணி சினுசினுங்குது - உன்
கொலுசுச் சத்தம் என்னைக் கொஞ்சம் கிறுகிறுக்குது
கருவேலமரம் காய்உதிர்க்க ஆடு மொய்க்குது - உன்
பருவம்கண்டு எனது மனம் உன்னை மொய்க்குது
சோளத்தட்டை கடிக்க கடிக்க நாக்கு இனிக்குது - உன்
உதட்டைக் கொஞ்சம் நினைக்கையிலே உள்ளம் இனிக்குது.
சூரியனைப் பாத்துபாத்து பூவு திரும்புது - உன்
முகத்தைக் கொஞ்சம் பாக்கையில காதல் அரும்புது
அவரைப்பூவு கொடிகொடியாய்ப் பூத்துக் கிடக்குது - அதைப்
பாக்கும்போது உன் சிரிப்பு கண்ணில் நடக்குது.
தட்டைப்பயறு பட்டத்திலே காய்ச்சுத் தொங்குது
தலை சாய்த்துப்போகும் உன்முகமே மனதில் பொங்குது
எள்ளுப்பூவு அடுக்கடுக்கா பூத்துச் சிரிக்குது - அது
என்னவளின் மூக்கைக் கொஞ்சம் நினைவு ஊட்டுது
அருகம்புல்லு பச்சத்தண்ணியாப் பரந்து கிடக்குது - அது
என்னவளின் அன்பைக் கொஞ்சம் எனக்குக் காட்டுது
பாடல்
மு.மகேந்திர பாபு
0 Comments