இப்படிக்கு மரம்

இப்படிக்கு மரம்

தயவுசெய்து  விட்டுவிடுங்கள் என்னை
மண்ணில் வேர்விட்டு விட்டேன்.
நிச்சயம் நிழல் தருவேன்.
காலம் செல்லச் செல்ல 
சுவைதரும் கனி தருவேன்.

பறவைகளுக்கு மட்டுமல்ல...
பல மனிதர்களுக்கும் 
நான் என்றும் வீடுதான்.

நான் உங்களுடனே இருப்பதால்
நலமுடன் வாழ காற்று தருவேன்.
கோடையின் போது
வெப்பம் தணிப்பேன்.

தினமும் பூத்துக் காய்த்துக்
குலுங்கும் என்னைப் பார்த்தால்
உங்கள் எண்ணம் விரியும்.
எனதருமை புரியும்.

உங்கள் உடலில் 
சிறுகாயம் என்றால் 
துடித்துப் போகிறீர்களே !

என் கிளையை வெட்டினீர்கள்.
ஒன்றும் சொல்லாமல் 
கனத்த மனதோடு மௌனம் சாதித்தேன்
மீண்டும் துளிர்ப்பேன் என்ற நம்பிக்கையோடு !

மனிதர்களை மட்டுமல்ல ...
மரங்களை அழிப்பதும் இனப்படுகொலைதான்.

என்றேனும் எனக்காக 
விழா எடுக்கும் போது 
பூ(ரி)த்துப் போகின்றேன்.

மனிதா !
என் மகத்துவத்தை 
எப்போது உணரப் போகின்றாய் ? 
உண்மையில் மண்ணின் மைந்தன் நீயல்ல ...
நான் மட்டுந்தான்
மண்ணிலிருந்து  வருவதால்.!

மு.மகேந்திர பாபு  ஆசிரியர் , 

Post a Comment

0 Comments