இயற்கை பானம்

இயற்கை  பானம்  

மத்தியான உச்சிவெயில் மண்டயத்தான் பொளக்குதடி
கோடை மழை ஆறுபோல உடம்புல வேர்வை ஓடுதடி
நாக்கு வறண்டுபோக , நாடி நரம்பு தளர்ந்து போக
தாகந்தான் கூடுதடி என் தேகந்தான் வாடுதடி

தாகம் தீர்க்க இளநிதானே இருக்குது - நீங்க
தவிர்த்துப் போக மனசு ரொம்ப வலிக்குது
செவ்விளநி சிரிக்குதையா மரத்தில - ஒன்னு
சீவித்தாரேன் பிடிங்க ஒங்க கரத்தில

நெடுநெடுனு வளர்ந்து நிக்குது பனை மரம் - ஏழை
மக்களுக்கு மக்களுக்கு அப்ப அது பணமரம்
பக்குவமா இறக்கி வச்ச பதனி பாருங்க - உங்க
உடம்புக்குத்தான தெம்பு கிடைக்க குடிச்சுப்பாருங்க

விரலைப்போல நீண்டிருக்குது வெள்ளரிப் பிஞ்சி - சின்னப்
பிள்ளை போல விரும்பியும் நீயும் நித்தமும் கொஞ்சு
வைரம் பாஞ்ச உடம்புக்குத்தான் குடிக்கனும் கூழு- நாளெல்லாம் 
நோயும் நொடியும் அண்டாம நீயும் வாழு

இயற்கையாகக் கிடைக்குதையா நம்ம பானம்  - நீயும்
ஏத்தமெடுத்துக் குடிப்பதென்ன வெளிநாட்டு பானம்
பெப்சி கோக்கு குடிச்சாத்தான் கூடுதோ மானம்
இத்துப் போன உடம்புலதான் தெம்பயே காணோம்

நம்ம ஊருத் தண்ணியில கலக்குறானே வேதிமருந்த
கண்திறந்து பாத்தும் சும்மாதானே இருந்த ? 
ஒத்தரூவா தண்ணி இப்ப பத்து ரூவாடா 
இப்படியே போனா நீயும் நானும் செத்துருவோம்டா

நம்ம இயற்கை பானம் குடித்திடுவோம் இன்பமாகத்தான்
எழுச்சி கொண்டு செயல்படுவோம் துன்பம் நீங்கத்தான்
விவசாயி வளம்பெறணும் நம்ம  காசிலே
நாமளுந்தான் நலம் பெறணும் இயற்கை உணவிலே

மு.மகேந்திர பாபு  ஆசிரியர் 

Post a Comment

0 Comments