வெடிக்காத வெடி வெடித்தது
தட்டக்குச்சியின் நுனியைக்கீறி அதில் ஓலவெடியைச் சொருகி , நொட்டாங்கையிலுள்ள ஊதுபத்தியின் கங்கில் வச்சு வெடி போடும் அளவிற்கு அதிபராக்கிரமசாலிகளாக இருந்தோம்.பலருக்குப் பொறாமையிலும் , சிலர் ஆச்சர்யத்திலும் எங்களைப்பார்த்துக் கொண்டே பொட்டு வேட்டினை முண்டுக்கல்லின் மேல் வச்சு , சின்ன கல்லொன்றினால் நச்சு வெடித்துக் கொண்டிருந்தார்கள்.
சிலர் துப்பாக்கியில் ரோல்வெடியை மாட்டி ,பலரை பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்.ஓடிப்போயிரு.இல்ல சுட்டுப்புடுவேனென்று.என்ன சுடனும்னா சுட்டுக்கோ. ஆனா ஒரு கண்டிசன் ... எனக்கும் ஓந்துப்பாக்கியத் தரணும் .நானும் ரெண்டு சுடு சுட்டுக்கிறேன் என்றார்கள்.
எங்க ஊர்க்கடையில் போன வருசம் வாங்கிய வெடிகள் மீதமிருந்ததால் , மழக்கி பதத்துப் போனதை அவ்வப்போது காயப்போட்டு எடுத்துப் பத்திரப் படுத்துவார்கள்.
ஏல ... அவன் அணுகுண்டு போடப்போறானாம்.வாங்கல போயிப்பாப்போம்.
நானுந்தான் போட்டேன்.
அட மூதி.இவன் நெசத்துக்கே போடப்போறாண்டா.இப்பதான் கடயில அவன் வாங்குனத பாத்தேன்.செய்தி சரவெடியாப் பரவ , கோவில் கிரவுண்டில் சிறுகூட்டம் கூடிவிட்டது.
டேய் ... செரட்ட இருந்தா கொண்டாங்கடா ... பழய பதினி முட்டி ஏதாவது கொடுங்கடா என அவன் கட்டளயிட , ஒருத்தன் குப்பையிலிருந்து ஒரு சிரட்ட எடுத்துவந்தான். அணுகுண்டின் திரிய நல்லா திருகிவிட்டு , தரயில் வச்சு அதன் மேல் சிரட்டய கவுத்தி , சிரட்ட ஓட்டயின் மேல் திரி தெரியிற மாதிரி வைத்துக் கொண்டான்.
எல்லாரும் ஆசயாகப் பாக்க , கையிலிருந்த ஊதுபத்தியால் வெடியப் பத்தவைக்க பக்கதில் போனான். அப்போது எங்கோ வெடிச்ச வெடிச்சத்தம் கேட்டு பயந்து பின்வாங்கினான்.கூட்டம் சிரிக்க கேவலமாகிவிட்டது அவனுக்கு.திரும்பவும் பத்தவைக்க போக , அப்போதும் வேற ஒரு வேட்டுச்சத்தம்.
என்ன இவன் இந்தக் குசுகுசுவுறான் ? இவனுக்கு ஏன் இந்தப் பகுமானம் ? எனச் சொன்னது காதில் விழ , ஒருவழியாய் திரியில் கங்கு வைத்தான். சிலர் கண்ணையும் , காதையும் பொத்த "டம் " மென்ற சத்தத்துடன் வெடிக்க , சிரட்ட சுக்குநூறாய்ச் சிதறி , அடிகுழாயில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்த அழகம்மா பாட்டியின் மண்டயில் விழ , வசவு உரித்துவிட்டாள்.
டேய் ... இவரு மெட்ராசில இருக்கிறாருடா.தீபாவளிக்கு நம்மூர்க்கு வந்திருக்காரு என்றான் சரவெடியை வெடிக்க வைத்தவரைப் பாத்து. சிறுவர் கூட்டம் சாமிய வேண்டியது. சாமி நெறய வெடி வெடிக்கக்கூடாது என்று.
சரவெடியில் வெடிக்காத வெடிகளை எடுப்பதற்கென்று ஒரு சிறுவர் கூட்டம் . சரவெடியை கொளுத்தியவுடன் திசைக்கொன்றாக வெடித்துச் சிதறியது. ஒரு சில வெடிக்காத வெடிகளை சிறுவர்கள் எடுத்து டவுசர் பைக்குள் போட்டுக் கொண்டனர்.
டேய் வாங்கடா . பக்கத்தில இருக்கிறகிணத்துக்கு குளிக்கப் போவோம் என குளிக்கச் சென்றனர். மோட்டார் ரூமின் மேலிருந்து டைவ் அடித்துக் குளிப்பது வழக்கம். தான் போட்டிருந்த டவுசரோடு ஒருத்தன் டைவ் அடிக்க , டவுசர் பைக்குள் போட்டிருந்த வெடிவெடிக்க அதிர்ச்சியில் கிணத்துக்குள் விழுந்து நீச்சலடிக்க மறக்க , நண்பர் கூட்டம் தூக்கிக்கொண்டு வெளியில் போட்டது.
எப்படி வெடி வெடித்தது.என யோசிக்க , வெடிக்காத வெடியில் கங்கு இருந்து , மெதுமெதுவாக தீப்பிடித்து வெடித்தது தெரியவந்தது.
மு.மகேந்திர பாபு. ்
0 Comments