காதல்.
மெல்லக் காதலிக்கத்
தொடங்குகிறது மனசு
பூ வைத்த பின்பு.
நாட்கள் நகர நகர
பயமும் , பரவசமும்
அப்பிக் கொள்கிறது மனசெங்கும்
மழைக்கால கருமேகம்போல.
ஒரு சுபயோக சுபதினத்தில்
மஞ்சள் கயிறினால் மனம் இணைக்கப்பட்டு
இரவில் உடலால் பிணைக்கப்பட்டோம்.
நாற்றங்காலிலிருந்து
பிடுங்கப்பட்ட நெற்செடியாய் ,
எங்கள் வீட்டு வயலில்
உன்னை நட்டுவைத்த போது
உனக்குள் நடுக்கமே நிறைந்திருந்தது.
என் வீட்டாரை நீ
காதலிக்கத் தொடங்கியபோது
நடுக்கம் நடையேறி விட்டது.
என் அம்மாவையும் , அப்பாவையும்
உன் அம்மா , அப்பாவாக
நினைக்கத் தொடங்கிய போது ,
மாமியார் , மருமகள் உறவு
தலை தூக்கவில்லை.
புரிதல்கள் பூத்துக் குலுங்கியபோது
விரிசல்கள் வீட்டைவிட்டு
வெளியேறத் தொடங்கின
கவலைச் செருப்பினை
கால்களில் மாட்டுக்கொண்டு.
மாதங்கள் வளர வளர
மழலையும் வளரந்தது.
புத்தம் புது மலரென
பூமிப்பந்தில் மலர்ந்தது.
உலகம் முழுமையும்
ஓர் உருண்டைப் பந்தினுள்
இருப்பதைப்போல ,
நம் உள்ளம் முழுவதும் ,
நம் இல்லம் முழுவதும்
மகளெனும் உயிர்க்கோளத்தில்
உறைந்திருந்தது.
மகளின் மழலை மொழிகளாய்
விழுந்த ஒலிகளை உள்வாங்கி ,
உறவுகளிடம் மொழி பெயர்த்துக்
கொண்டிருக்கிறாள் மனைவி.
மெல்லிய கொலுசொலியின் சப்தத்தில் ,
மெதுவாய் நடந்து ,
முதுகின் பின்பக்கம் நின்று,
" பே " என ஒலியெழுப்பி
அப்பா பயந்திட்டியா எனக்
கேட்கும் மகளிடம் பயம் பயந்திருந்தது.
காலை எழுந்து
தேனீர்க் குவளையிலும் ,
தினசரி நாளிதழிலும்
மணிக்கணக்கில் மூழ்கிவிடாத
கணவன்களால் விரட்டப்பட்டிருக்கிறது
காலை நேர அவசரங்களும் , சண்டைகளும்.
விடுமுறை நாட்களே
பெண்களுக்கு முழு வேலை நாட்களாகும் போது
கணவனின் அன்பும் ,
சின்னச் சின்ன வேலைப் பகிர்தலும்
ஆசுவாசப்படுத்தி
காதலை இறுக்கச் செய்கின்றன.
சின்னச் சின்ன விழாக்கள்
எண்ணங்களால்
வண்ணமாகும்போது ,
உறவுகள் உறுதி பெறுகின்றன.
உயிர் பெறுகின்றன.
ஆண்டுகளின் ஓட்டத்தில்
அகவை அதிகரிக்க ,
மகள் மணமாகி ,
மரமாகி நிற்கிறாள்.
அனுபவங்கள் அசைபோட
முதுமையிலும் காணமுடிகிறது
இளமையை மனத்தினுள்.
வம்சம் வளர வளர
அம்சமாகிறது குடும்பம்.
வீடுகள் தீவாக மாறி ,
வீண் சண்டைகள் பெருகினால்
தீர்வுகள் இல்லை.
புரிதலாலும் , பகிர்தலாலும்
விரியத் தொடங்குகிறது
குடும்பமெனும் காதல் மலர்
காலந்தோறும் மகிழ்வெனும்
மணத்தைச் சுமந்து கொண்டு.
மு.மகேந்திர பாபு .
0 Comments