மாலை பூத்திருக்கு !

மாலை பூத்திருக்கு.

பொண்ணுக்கு என்ன போடுவீக ?
கல்யாணச் சந்தையில
மாப்பிளய எங்க தேடுவீக ?
என்ற வார்த்தைக்கு வேலயில்ல.
வரதட்சணை கேக்க
அவன் கோழயில்ல.

வயலுக்குப் போகும்போது ,
வரப்பேறி நடக்கும் போது ,
வழிவிட்டு நின்னவளை
நீங்க போங்கன்னு சொன்னவளை
வாழ்க்கையில
விட்டுட்டுப் போகலாமா ?

வாட்டிய கேப்பக் கருது வாசமென
நீட்டிய கம்மங்கருது சுவையென
மெல்ல மெல்ல மனசுக்குள்ள போறா !
அவ பல்லு என்ன பொன்னி அரிசிச் சோறா ?

வெண்டக்கா விரலால
சேத்து வயல் நடும்போது
வேடிக்கை பாக்கப் போனா
வாயால கொன்ன ஒன்னு வைக்குறா !
குறும்புப் பார்வையால
நெஞ்ச ஏனோ தைக்குறா !

மண்வெட்டி பிடிச்சு
வரப்ப அவன் சீவயில
கண்வெட்டி நின்னுருப்பா
காதலால கொன்னுருப்பா .

நெட்டப்பனை  ஏறும்போது
புடைச்சு நிக்கும் புயம்தான்.
நெஞ்சுக் குழியில ஆசவர
அவளுக்கில்ல பயம்தான்.

நீர்முள்ளுப் பூப்பறிக்க
வரப்புக்குள்ள இறங்குறா.
நேர்நின்னு பாத்தாக்கா
இருவிழியால் கிறங்குறா.

ஆசயா வாங்கி வந்த
ஐச அவ வாங்கல !
அன்னக்கி இராத்திரி
அவ நெனப்புல
கண்ணு ரெண்டும் தூங்கல!

ஜாடை மாடையா பேசுறவதான்
சடை மாட்டி வாங்கித்
தந்தாக்கூட வாங்குறதுக்கு
கையிரெண்டும் கூசுறவதான்.

சித்திரத் திருவிழாவுக்கு
வாங்கி வந்த சேலத்துணி !
சிரிச்சுக்கிட்டே மழுப்பிடுவா
கல்யாணத்துக்கு அப்புறம்னு !

விரல் படா காலத்துல
விலகி விலகி போனவ.
கல்யாணம்னு வரும்போது
கலங்கி நின்னு பாக்குறா !

மாலை பூத்திருக்கு !
மனசு உன்ன பாத்திருக்கு !
மஞ்சத் துண்ட கயிறோட
மணமுடிக்க காத்திருக்கு !

மேக்கொண்டு பேச
இதென்ன பட்டணமா ?
நக நட்டுனு பேச
புரோக்கர்க்கு தனிக்கட்டணமா ?

அவ மஞ்சணத்திப் பூதான் !
மணத்தில
மிஞ்சிடுவா மல்லிப் பூவதான் !

மு.மகேந்திர பாபு .

Post a Comment

0 Comments