பாட்டிக்கு ஒரு பாட்டு !


பாட்டிக்கு ஒரு பாட்டு - இசைப்பாடல்

          பல்லவி

பாட்டி இருக்கும் வீடு  - அது
பாசம் நிறைந்த வீடு
பாட்டியில்லா வீடு - அது
பட்டுப்போன காடு 

         சரணங்கள்

கதை கதையாய்ச் சொல்லி - நம்ம
கவலை போக்குவாள் !
கருத்துடனே வளர்த்து  - நம்ம
வீரன் ஆக்குவாள்  !

வெற்றிக் கதை வீரக்கதை 
சொல்லித் தருகுவாள் !
பேரன் பேத்தி பேச்சினிலே
உள்ளம் உருகுவாள் !

பள்ளிக்கூடப் படிப்பு எல்லாம்
ரொம்பக் கம்மிதான் !
அனுபவத்தைச் சொல்லுதுங்க
வீட்டு அம்மிதான் !

தலைவலியா உடல் வலியா 
பாட்டியப் பாரு !
கைவச்சதுமே ஓடுது பார்
நோயெனக் கூறு !

முந்தானையில் முடிஞ்சிருப்பா
முந்நூறு காசு !
முத்தம் கொடுக்கும் பேரனுக்கு
காலணா காசு !

தலையை ஆட்டிப் பேசும்போது
ஆடிடுமே பாம்படம் !
தலையினிலும் இடுப்பினிலும்
தூக்கிடுவாள் நீர்க்குடம் !

மீன் குழம்பு வச்சுப்புட்டா
ஊரே மணக்கும் !
தேன் போன்ற பேச்சினிலே
உள்ளம் மிதக்கும் !

கம்மங்கஞ்சி கேப்பக்கூழு
கரைச்சுக் கொடுப்பா !
பேத்திக்கு துன்பம் வந்தா
உள்ளம் துடிப்பா !

தலைமுறையைக் கண்டவளாம்
தங்கப் பாட்டி !
தன்னலத்தை விட்டவளாம் 
எங்க பாட்டி !

பாட்டிகளைப் பக்கத்தில
வெச்சுக் கோங்க !
பாசத்தில ஈடில்லையென
மெச்சிக் கோங்க !

பசுமைக்கவிஞர்.
மு.மகேந்திர பாபு , இளமனூர்.

Post a Comment

3 Comments

  1. மிக எளிமையான வார்த்தைகளால் எல்லோருக்கும் புரியும்படி இனிமையான பாடல். மிக அருமையான பாடல். கவிமணியின் பாடல்களைப்போன்று உள்ளது வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  2. மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete