ஒன்னாப்பு

ஒன்னாப்பு ( முதல் வகுப்பு)

சோத்தாங்கையால இடது காதைப் பிடி ன்னார் எட்மாஸ்டர். 

விருட்டென இடது காதைப் பிடிக்க ...

இப்படி இல்ல.தலைக்கு மேல வானவில் மாதிரி சோத்தாங்கைய வளச்சு காதுமடல பிடி.

தக்கி முக்கி காதைப் பிடிக்க ...

சரிப்பா ... ஓன் மகன ஒன்னாப்புல சேத்துரலாம்னார் அப்பாட்ட. பிறந்த சர்டிபிகேட் இருக்கா ?

அதெல்லாம் இல்லங்க சார்.நீங்களாவே ஒரு தேதியப் போட்டுக்கங்க.

அப்படியா ? சரி.போட்டுக்கிருவோம்.

அப்பலாம் பல் துலக்க வெள்ளைப் பாக்கெட்டில் எம்ஜியார் பல்பொடி என ஒன்னு கொடுத்தார்கள். காலுக்கு எம்ஜியார் செருப்பு என கொடுத்தார்கள்.

ஒன்னுக்கா மணி அடிச்சதும் , வூட்ல போய் பருத்திஇல்லாட்டி நெல்ல எடுத்து வந்து கடையில கொடுத்து அவிச்ச பலாக்கொட்டை அல்லது சீனிக்கிழங்கு வாங்கித் திம்போம். பருத்திக்கு ரெண்டு எடை.

மதியம் நேரம் சாப்டுட்டு பக்கத்தில இருக்கிற புஞ்சக்குள்ள நுழைஞ்சு பாசிப்பித்தான் காய் , தட்டாங்காய் புடுங்கி ரெண்டு சேப்புக்குள்ளயும் தினுச்சு வச்சி சாய்ந்திரம் வூட்டுக்குப் போகும்போது தின்போம். 

பெரிய பசங்க அதலக்காய் கொடியத் தூக்கி காயப்புடுங்குவாங்க . ஒரு கொடியத் தூக்குனா சரஞ்சரமாத் தொங்கும். பாவக்கா மாதிரி கசப்புச் சுவையில செமயா இருக்கும். பாதிக்குப்பாதி சின்ன வெங்காயம் போட்டு தாளிக்கிற கரண்டில வதக்கி தயிர்ச்சோறுக்குத் தின்னா அடடா அம்புட்டு டேஸ்டா இருக்கும்.

எங்க ஊருக்கும் பெரிய  பள்ளிக்கொடத்துக்கும் போகவர எட்டு கிலோமீட்டர்.நடந்துதான் போவோம்.

இப்பலாம் அரக்கிலோமீட்டர் போறதுக்குக் கூட பஸ்பாஸ வச்சிக்கிட்டு நடக்கமாட்டிங்கிறாக.நடப்பதெல்லாம் நன்மைக்கே !

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments