கார்த்திகை தீபமும் , காக்கி டவுசரும்.
மு.மகேந்திர பாபு.
இத்தினியானு ஜீவாத்து எம்மாம் பெரிய சொக்கப் பனையத் தூக்கிட்டுப் போகுது பாத்தியா ?
மாப்ள , இப்டிக் கொஞ்சம் வாங்களேன் !
ஏன் மாமா ?
உங்க டவுசரு கழன்டுகிட்டுப் போகுது , மாமா மாட்டிவிடுதேன்.
போறும்யா அங்கிட்டு. மாட்டிவிடுதேனு , முழுசயும் கழட்டி விடுறதுக்கா ?
இல்ல மாப்ள , அன்னாக் கயிறு கழறுது .அதான் ...
பள்ளிக்கூடம் விட்டதும் , சேக்காளிகளோடு சேந்து , படப்புப் பக்கம் போய் , சோளத்தட்டய எடுத்து , ஒரு ஆள் உசரத்திற்கு கட்டி , முனியில காஞ்ச ஓல அல்லது சில்லாடய சொருகி , ஒட்டு மொத்த சின்னப் பசங்களும் இருட்டான ஒடனே சூந்த ( சோளத்தட்டை ) தூக்கி தோள்ள போட்டு , மந்தயம்மன் கோவில் திடல்ல கூடுவோம்.
மொதல்ல ஒருத்தன் தீயப் பிடிக்க , பிறகு அவன்ட்ட இருந்து எல்லாரும் தீயப் பிடித்து தலக்கு மேல் வைத்துச் சுத்திக்கொண்டே தெருக்களைச் சுத்தி கம்மாக் கரையில வரிசை வரிசையாய்ச் சுத்தி வருவோம் .
அலையடிக்கும் கம்மாய்த் தண்ணியில சிரட்டையிலும் , ஓலயிலும் வைத்து தீபத்தை ஏத்திவிடுவோம். அலைக்கேற்ப ஆடி ஆடி போவது அவ்வளவு சூப்பரா இருக்கும் பாக்க.
சுத்தி முடிச்சு , சோளத்தட்டையானது குட்டையான உடன் மந்தையம்மன் கோவில் திடலில் ஒட்டு மொத்தமாகப் போட்டு தீ மதமதவென எரிய , அதைத் தாண்டும் இளைஞர் கூட்டம்.
தீவாளிக்குப் போட்டது போக , மீதமுள்ள வெடிகளைப் போட்டுக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். தனி வெடிய விட , சரவெடிகளைப் பாக்கவே கூடும் சிறுவர் கூட்டம். சரவெடிகளில் வெடிக்காத வெடிகளை எடுப்பதற்கு.
அப்படித்தான் வெடிக்காத அஞ்சாறு வெடிகளை போட்டி போட்டு எடுத்து எனது காக்கி டவுசருக்குள் பத்திரமாகப் போட்டு வச்சிருந்தேன்.
பித்தான்களற்ற அந்த காக்கி டவுசரை கையாள்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும். இரு முனைகளையும் தொப்புளோடு இறுகக்கட்டி சூதானமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் மேல் அன்னாக்கயிறு . இதனையும் மீறி சில எளவட்டங்கள் அதாவது மாமன் முறை உள்ளவர்கள் டவுசரை கீழே இழுத்து விட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.
மதமதவென எரியும் தீயை வரிசயில் நின்னு தாண்டிக் கொண்டிருந்தனர்.
நாமும் தாண்டுவோம்னு வரிசையில நின்னு தாண்ட ஓடி வந்தேன்.
தீயின் நடுவே வந்த போது , டவுசர் பைக்குள் போட்டு வச்சிருந்த வெடிக்காத வெடி வெடிக்க ஆரம்பிக்க , அதிர்ச்சியில் தீயின் நடுவே பொத்தென விழ , அப்றமென்ன ?
நான் எங்கே இருக்கேனு கேக்க , எங்கப்பா எப்படா இவன் முழிப்பானு போல காத்திருந்து , செவுலச் சேத்து ஒரு இறுக்கு . தீயத் தாண்ற மொகரக் கட்டய பாரு ?
அப்பதான் நடந்தது புரிந்தது. தல முடி தீயில் கருக , மண்ட ஒரு மாதிரி இருந்தது. இது நடந்தது நான் அஞ்சோ , ஆறோ படிக்கும் போது !
நகர்ப்புறம் வந்து இதெல்லாம் இழந்துட்டோமேன்னு வருத்தமா இருக்கு. இப்ப இருக்குற சனங்க , தீபத்த மட்டும் ஏத்திட்டு , டிவி சீரியல்ல , சீரியசா இருக்குதுக. கிராமம் , சொர்க்கம்.
மு.மகேந்திர பாபு.
1 Comments
Very nice post
ReplyDelete