அறிவாயுதம்
ஆயுதம் வாங்குங்கள் ! - அறி
வாயுதம் வாங்குங்கள் !
அகத்தை வாழ்த்தும் - அறி
யாமையை வீழ்த்தும்
ஆயுதம் வாங்குங்கள் !
புத்தகம் புரட்டுங்கள் ! - தினம்
புத்தகம் புரட்டுங்கள் !
புத்தியில் உள்ள
பூசலை விரட்டுங்கள் - தினம்
பூசலை விரட்டுங்கள் !
நூலகம் செல்லுங்கள் ! - தினம்
நூலகம் செல்லுங்கள் !
நுண்மான் நுழைபுலம் கொண்டே
மேடையை வெல்லுங்கள் ! - பேச்சில்
மேடையை வெல்லுங்கள் !
தாளெனும் வயலில் - தினம்
விளையும் சொற்கள் !
வாசக விவசாயிக்கு
தாகம் தீர்க்கும்
எழுத்து நெற்கள் !
பக்கம் புரட்ட - தினம்
பக்கம் புரட்ட - நம்
பக்கம் வந்திடுமே !
பக்குவப் படுத்தி
பகுத்தறிவைத் தந்திடுமே !
மானம் காப்பது
நூலாடை என்றால்
மனித மனம் காப்பது
காகிதம் சேர்ந்த
புத்தமன்றோ ?
பூங்கொத்தைத் தவிர்த்து
வாழ்த்தும் போதெல்லாம்
புத்தகம் வழங்கலாம் !
புத்தகமே தனிமையின்
துணையென முழங்கலாம் !
புத்தகத்தைக் காதலிபோல
கையில் தூக்குங்கள் !
புன்னகை பூக்க
மேனியைத் தடவி
இணையென ஆக்குங்கள் !
பசுமைக்கவிஞர் மு.மகேந்திர பாபு.
0 Comments