மேடைப்பேச்சு - பாபு

 



கேட்டிடில் காதுக்கின்பம்

கிளந்திடில் நாவுக்கின்பம்

ஊட்டிடல் உளத்திற்கின்பம்

உணர்ந்திடில் உணர்விற்கின்பம்

பாட்டு உரைநடையில் செல்லும்

பைந்தமிழ்ப் பாவாய் 

நீதான் வீ்ட்டிலா இன்பமானால்

விரும்பிடார் யார்தான் சொல்லாய்.


பாரதிதாசன் - தமிழின்பம்

****************   *********************

மதுரை - கவிப்பேரரசு - பாடல்

பாண்டியர் குதிரைக் குளம்படியும் - துாள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் - இளம்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை

நீண்டு கிடக்கும் வீதிகளும் - வான்
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் - தமிழ்
அழுந்தப் பதிந்த சுவடுகளும்
காணக் கிடைக்கும் பழமதுரை - தன்
கட்டுக் கோப்பால் இளமதுரை

மல்லிகை மௌவல் அரவிந்தம் - வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி - இவை
கொள்ளை அடித்த வையைநதி
நாளும் ஓடிய நதிமதுரை - நீர்
நாட்டிய மாடிய பதிமதுரை

தென்னவன் நீதி பிழைத்ததனால் - அது
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் - அவள்
கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய தொன்மதுரை - இன்று
ஜாதிக் கஞ்சும் தென்மதுரை

தமிழைக் குடித்த கடலோடு - நான்
தழுவேன் என்றே சபதமிட்டே
அமிர்தம் பரப்பும் வையைநதி - நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய மாமதுரை - இது
மரபுகள் மாறா வேல்மதுரை

மதுரை தாமரைப் பூவென்றும் - அதன்
மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள் - அவை
எம்குடி மக்கள் திரளென்றும் - பரி
பாடல் பாடிய பால்மதுரை - வட
மதுரா புரியினும் மேல்மதுரை

மீசை வளர்த்த பாண்டியரும் - பின்
களப்பிரர் பல்லவர் சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த அந்நியரும் - அந்த
அந்நியரில்சில கண்ணியரும்
ஆட்சிபுரிந்த தென்மதுரை -
மீனாட்சியினால் இது பெண்மதுரை

மண்ணைத் திருட வந்தவரைத் - தம்
வயிற்றுப் பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட வந்தவரை - ஊர்
பொசுக்கிக் போக வந்தவரை - தன்
சேயாய் மாற்றிய தாய்மதுரை - அவர்
தாயாய் வணங்கிய தூய்மதுரை

அரபுநாட்டுச் சுண்ணாம்பில் - கரும்பு
அரைத்துப் பிழிந்த சாறர்ற்றி
மரபுக்கவிதை படைத்தல்போல் - ஒரு
மண்டபம் திருமலை கட்டியதால்
கண்கள் மயங்கும் கலைமதுரை - இது
கவிதைத் தமிழின் தலைமதுரை

வையைக் கரையின் சோலைகளும் - அங்கு
வரிக்குயில் பாடிய பாடல்களும்
மெய்யைச் சொல்லிய புலவர்களும் - தம்
மேனி கறுத்த மறவர்களும்
மிச்சமிருக்கும் தொன்மதுரை - தமிழ்
மெச்சி முடிக்கும் தென்மதுரை

போட்டி வளர்க்கும் மன்றங்களும் - எழும்
பூசை மணிகளின் ஓசைகளும் - இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் - நெஞ்சை
நிறுத்திப் போகும் வளையொலியும்
தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை - கண்
தூங்காதிருக்கும் தொழில்மதுரை

ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் - வெறும்
அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் - தினம்
வெட்டிப்பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள் சூழ்மதுரை - இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை

நெஞ்சு வறண்டு போனதனால் வையை
நேர்கோடாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர் - நதியைப்
பட்டாப் போட்டுக் கொண்டதனால்
முகத்தை இழந்த முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும் பதிமதுரை

******************   **********************


கலைஞர் கவிதை - புறநானூற்றுத்தாய்


குடிசைதான்!

ஒரு புறத்தில் கூரிய வேல்வாள்

வரிசையாய் அமைத்திருக்கும்

வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்

வடித்துவைத்த படைக்கலம்போல்

மின்னும்; மிளிரும்

புலியின் குகையினிலே அழகில்லை – புதுமையல்ல


கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா

மானத்தின் உறைவிடம் – மறவன் மாளிகை


இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோறோடு

வெல்லத்தைச் சிறிது கலந்து

வயிற்றுக்குள் வழியனுப்ப

பொக்கைவாய் தனைத்திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள்

பெருநரைக் கிழவிஒருத்தி

ஓடிவந்தான் ஒரு வீரன் ஒரு சேதி பாட்டி என்றான்


ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்

ஆண்மகனா நீ

தம்பி மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்

பின் பேச்சுக்குத் துவக்கம் செய் என்றாள்

அந்தக் கிண்டலுக்குப் பேர்போன கிழட்டுத் தமிழச்சி!

வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி –

உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு.

மடிந்தான் உன் மகன் களத்திலென்றான்


மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை

தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு

களமும் அதுதான்

காயம் மார்பிலா? முதுகிலா? என்றாள்

முதுகி லென்றான்

கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்;

வாளை எடுத்தனள்!

முழவு ஒலித்த திக்கை நோக்கி

முடுக்கினாள் வேகம்


கோழைக்குப் பால் கொடுத்தேன்

குப்புற வீழ்ந்து கிடக்கும்

மோழைக்குப் பெயர் போர்வீரனாம்

முன்பொருநாள்

பாய்ந்துவந்த ஈட்டிக்குப் பதில் சொல்ல மார்பைக் காட்டிச்

சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா?


அடடா மானம் எங்கே?

குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.


இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும்

இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்

அதுவும் மானம் மானம் என்றே முழங்கும்


மதுவும் சுராவும் உண்டுவாழும் மானமற்ற வம்சமா

ஏடா! மறத்தமிழ்க் குடியிலே மாசு தூவிவிட்டாய்

மார்பு கொடுத்தேன் மகனாய் வளர்த்தேன்

தின்றுக் கொழுத்தாய் திமிர்பாய்ந்த தோள்களெங்கே?

தினவெடுக்கவில்லையோ? அந்தோ!

வேலுக்கு வழி சொல்ல வகையற்ற கோழையே

என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய்!!

என்று கதறினாள் எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.


சென்றங்குச் செருமுனையில் சிதறிக்கிடந்த

செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள்

அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று ரத்த வெள்ளம்!


பிணக்குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்

மணப் பந்தலிலும் அந்த

மகிழ்ச்சியில்லை

மகன் பிறந்த போதும் அவள் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு

அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!

இதைக் கண்டாள் – இதயங் குளிர்ந்தாள்!

எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை

என் மகன் வீரனாய் இறந்தான் என்றாள்.

அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை

அடடா! கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?

வாளிங்கே! அவன் நாக்கெங்கே?

என்று கேட்ட புறநானூற்றுத் தாயினுடைய கவிதை வரிகள்


கிட்டத்தட்ட முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய வரிகள் –

இன்றைக்கு அம்மையார் அவர்கள் அந்த வாளை கையிலே வாங்கி உயரப் பிடித்த நேரத்தில் நினைவுக்கு வந்தன.

புறநானுற்றுத்தாய் தன்னுடைய மகனை வீரனாகத்தான் வளர்த்தாள்.


போர்க்களத்திலே கணவன் மாண்டு, தமையனும் மாண்டு, தந்தையும் மாண்டு அனைவரும் மாண்ட பிறகு கூட தன்னுடைய ஒரே மகனுக்கு தலைசீவி பொட்டிட்டு வாளைத் தந்து “சென்றுவா மகனே! செருமுனை நோக்கி” என்று சொன்ன தாய்க்குலம் தமிழ்க் குலம்.

*********************   *******************

உவமை நயம்

விவேகசிந்தாமணி

தண்டு லாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரைமு கத்தரு கேந்தினாள்
கெண்டை கெண்டையே னக்கரை யேறினாள்
கெண்டை காண்கிலள் நின்றுத யங்கினாள். (89)

தாமரைத் தண்டுகள் ஆடிக்கொண்டடிருக்கும் அந்தத் தாமரைப் பொய்கையில் அவள் தன் கையில் நீரை மொண்டு முகத்தருகில் கொண்டுசென்றாள். அந்த நீரில் அவளது கண்களைக் கண்டாள். கையில் இரண்டு கெண்டை மீன்கள் ஏன் வந்தன என்று எண்ணினாள். கண்மீன். கரைக்கு ஏறிவந்து பார்த்தாள். கையில் நீர் இல்லாததால் மீன்களைக் காணாமல் தயங்கி நின்றாள்.

***************************   ********************

சிலப்பதிகாரம் - வழக்குரைத்த காதை

வாயி லோயே வாயி லோயே

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 25

இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே; என

வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி 30

தென்னம் பொருப்பின் தலைவ வாழி

செழிய வாழி தென்னவ வாழி

பழியொடு படராப் பஞ்வ வாழி

அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி 35

வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்

அறுவர்க் கிளைய நங்கை இறைவனை

ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்

கானகம் உகந்த காளி தாருகன்

பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் 40

செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்

பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளே

கணவனை இழந்தாள் கடையகத் தாளே; என

வருக மற்றவள் தருக ஈங்கென 45

வாயில் வந்து கோயில் காட்டக்

கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி

நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்

யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்

தேரா மன்னா செப்புவ துடையேன் 50

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் 55

பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை யாகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு 60

என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே

கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை 65

நற்றிறம் படராக் கொற்கை வேந்தே

என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்

தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி

யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே

தருகெனத் தந்து தான்முன் வைப்பக் 70


கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப

மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு

தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்

பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன் 75

மன்பதை காக்கும் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென

மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்

கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று 80

இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.


வெண்பா


அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் 1

பல்லவையோர் சொல்லும் பழுதன்றே--பொல்லா

வடுவினையே செய்த வயவேந்தன் றேவி

கடுவினையேன் செய்வதூஉங் காண்.


காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் 2

ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன்

காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்

கூடலான் கூடாயி னான்.


மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் 3

கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன்

கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்

உண்டளவே தோற்றான் உயிர்.


**************************  *******************6

தம்பி தம்பி
என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்?
பலாப்பழம்
என்ன பலா?
வேர்ப்பலா
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மர விறகு
என்ன மரம்
மா மரம்
என்ன மா?
அம்மா
என்ன அம்மா
டீச்சரம்மா
என்ன டீச்சர்
கணக்கு டீச்சர்
என்ன கணக்கு
வீட்டு கணக்கு
என்ன வீடு
மாடி வீடு
என்ன மாடி
மொட்ட மாடி
என்ன மொட்டை
பழனி மொட்டை
என்ன பழனி
வட பழனி
என்ன வட
ஆமை வட
என்ன ஆமை
கொளத்து ஆமை
என்ன கொளம்
திரி கொளம்
என்ன திரி
வெளக்குத் திரி
என்ன வெளக்கு
குத்து வெளக்கு
என்ன குத்து
கும்மாங் குத்து.

**********************  ************************

வானத்திலே திருவிழா

வழக்கமான ஒரு விழா!

இடிஇடிக்கும் மேகங்கள்

இறங்கி வரும் தாளங்கள்!

மின்னலொரு நாட்டியம்

மேடை வான மண்டபம்!

தூறலொரு தோரணம்

தூய மழை காரணம்!

எட்டுதிசை காற்றிலே

ஏக வெள்ளம் ஆற்றிலே!

தெருவிலெல்லாம் வெள்ளமே

திண்ணையோரம் செல்லுமே!

தவளை கூடப் பாடுமே

தண்ணீரிலே ஆடுமே!

பார்முழுதும் வீட்டிலே

பறவைகூட கூட்டிலே!

அகண்டவெளி வேடிக்கை

ஆண்டுதோறும் வாடிக்கை!

கவிஞர்.பொன்.செல்வகணபதி

**********************   *************************

சூரியன் வருவது யாராலே?
சந்திரன் திரிவதும் எவராலே?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன?

பேரிடி மின்னல் எதனாலே?
பெருமழை பெய்வதும் எவராலே?
யாரிதற் கெல்லாம் அதிகாரி?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ?


நாமக்கல் கவிஞர்.வெ.இராமலிங்கம்


*********************  ***********************

பையன் ஒருத்தன் நா ஒரு கவிதை சொல்றேன் ஐயான்னான். சரின்னேன்.


என் பேரு கருப்பசாமி

அப்பா பேரு ஆண்டிச்சாமி

தாத்தா பேரு தங்கச்சாமி

பாட்டன் பேரு பாண்டிச்சாமி ன்னான்.

அட போ சாமி  அங்கிட்டு.கவிதை சொல்றேன் சொல்லிட்டு பேரச் சொல்றனு சொன்னேன். அவன் சொல்றான் 

இது பேருல்ல. பெருமை ன்னான்.

அட போ எருமைனு நினைச்சுக்கிட்டு, ஏதோ வெளம்பரத்தப் பாத்துக்கிட்டு கத விடாத போடான்னேன்.

***************************  ********************


*இட்லி* மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்


புரட்டி போட்டாலும் *தோசை*

மாதிரிபொறுமையாஇருக்கனும்.


உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்

*பூரி* மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்.


ஓட்டை விழுந்திருந்தாலும் *வடை*

மாதிரி கவர்ச்சியா இருக்கனும்.


*உப்புமா* மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்.


*பொங்கல்* மாதிரி குழைவா பேசனும்.


அடிச்சி துவைச்சாலும் *பரோட்டா* மாதிரி தாக்கு பிடிக்கனும்.


*பிரியாணி* மாதிரி பிரபலமா இருக்கனும்


*சப்பாத்தி* மாதிரி எளிமையா இருக்கனும்.


*ஜிலேபி* மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது.


*நூடூல்ஸ்* மாதிரி சிக்கலா இருக்க கூடாது.


*பீஸா* மாதிரி இழுபறியா இருக்க கூடாது.


*ஆப்பம்* மாதிரி தொப்பையோட இருக்க கூடாது.


*புட்டு* மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது.


*கேசரி* மாதிரி இனிமையா பேசனும்.


*பாயசம்* மாதிரி விஷேஷமா இருக்கனும்.


*அப்பளம்* மாதிரி ஆறுதலா இருக்கனும்.


*அவியல்* மாதிரி ஒற்றுமையா இருக்கனும்.


*சோறு* மாதிரி மனசு நிறைந்து இருக்கனும்.


*புரூட்* சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்.


*ஐஸ்கிரீம்* மாதிரி cool ஆ இருக்கனும்.


*டிகிரி_காபி* மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்.


*ஊறுகாய்* மாதிரி காரமா கோபப்டக்கூடாது.


*உப்பு"* மாதிரி தவிர்க்க முடியாதவரா இருக்கனும்.. .


*சாப்பாடு முக்கியம் இல்லையா அதான் இப்படி ஒரு தத்துவம் 😊😁*



"

"

"

Post a Comment

0 Comments